Abirami
Ramanathan
Nov 2007
"வினியோகம்
செய்த சில படங்கள் தோல்வி அடைந்ததால், 10 ஆண்டுகள்
அத்துறையை விட்டு ஒதுங்கியிருந்தேன். மீண்டும் எனக்கு
வெற்றி தேடித்தந்த படம், ரஜினி நடித்த "சிவாஜி'' என்று
அபிராமி ராமநாதன் கூறினார்.
ரஜினி நடித்த ஒரு ஆலிவுட் படம் "பிளட் ஸ்டோன்.'' மெட்ரோ
பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்த இந்த படத்துக்கு நான்தான் "பைனான்ஸ்''
பண்ணினேன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் 25 நாள் நடந்தது.
ரஜினியுடன் நானும் இருந்தேன்.
ரஜினி "சூப்பர் ஸ்டார்'' ஆக உயர்ந்ததற்கு காரணம், அவரது `நடிப்பு
பாதி; குணம் பாதி' என்றுதான் சொல்ல வேண்டும். காலை 9
மணிக்கு படப்பிடிப்பு என்றால் நாங்கள் தங்கியிருந்த
இடத்துக்கு சரியாக 8-40 மணிக்கு ரஜினியிடம் இருந்து போன்
வரும். "நான் ரெடி. கார் ரெடியா?'' என்று கேட்பார். தொழில்
மீது அதிக பக்தி.
சினிமாவில் அப்பா வினியோகத் துறையில் இருந்ததால், அப்பா
வழியில் நாமும் முயன்று பார்க்கலாமே என்று தோன்றியது.
அதற்காக 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்வது, லாபம் வந்தால்
வினியோகத்தைத் தொடர்வது, நஷ்டம் வந்தால் அத்தோடு
நிறுத்திக்கொள்வது என்று முடிவு செய்தேன்.
மொத்தம் 45 படங்கள் வரை வினியோகம் செய்தேன். அதில் 22
படங்கள் 100 நாள் ஓடின. 6 படங்கள் வெள்ளி விழா கொண்டாடின.
என்றாலும் பின்னால் வினியோகம் செய்த படங்களில், போட்ட பணம்
திரும்ப வராததால் முதல் குறையத் தொடங்கியது. அத்தோடு
நிறுத்திக்கொண்டேன்.
பத்து வருடம் கழித்து, ரஜினி நடித்த "சிவாஜி'' படத்துக்கு
சென்னை நகர வினியோக உரிமை பெற்றேன். அதில் நான்
எதிர்பார்த்த லாபம் கிடைத்தது.
எதிர்பார்ப்புக்குரிய புதிய படங்கள் ரிலீசாகும்போது
திருட்டு விசிடி எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள்தான் அதிக
லாபம் பார்க்கும் நிலை சமீப காலங்களில் இருந்து வந்தது.
மும்பையில் ஒரு இந்திப் படம் ரிலீசானால் உடனடி கலெக்ஷன்
பார்ப்பதற்காக அதிக தியேட்டர்களில் திரையிடுவார்கள்.
பக்கத்து பக்கத்து தியேட்டர்களில் கூட திரையிடுவார்கள்.
இதனால் புதிய படம் பார்க்கும் ஆவல் கொண்ட ரசிகர்கள்
இம்முறையில் தாமதமின்றி படம் பார்த்து விட முடிகிறது.
இதனால் `திருட்டு விசிடி' பார்ப்பதற்கான வாய்ப்பு
தவிர்க்கப்பட்டு விடுகிறது.
`சிவாஜி' படத்தின் சென்னை வினியோக உரிமையை
ஏவி.எம்.சரவணனிடம் நான் கேட்டபோது, மும்பை நிலவரத்தை சொல்லி
அதுபோல் சென்னையிலும் பல தியேட்டர்களில் திரையிட்டால்
சரியாக இருக்கும் என்று கூறினேன். என் கருத்தை அவரும்
ஏற்றுக்கொண்டார்.
சென்னையில் ஒரே நேரத்தில் 18 தியேட்டர்களில் `சிவாஜி'
ரிலீசாகி வினியோகஸ்தர்களுக்கு முதலீடு செய்த தொகையையும்
தாண்டி வசூலித்துக் கொடுத்தது.
இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.
|