Kalaignanam (Producer)

ரஜினிகாந்துடன் ஏற்பட்ட அனுபவம் பற்றி கலைஞானம் கூறியதாவது:- "நான் `ஆறுபுஷ்பங்கள்' படத்துக்கு கதை-வசனம் எழுதிக்கொண்டிருந்தபோது, தயாரிப்பாளரும், டைரக்டர் கே.எம்.பாலகிருஷ்ணனும் எனக்கு ஒரு கண்டிஷன் போட்டார்கள். படம் எடுத்து முடியும்வரை கூடவே இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதற்கு ஒப்புக்கொண்டேன். இதனால் ஷூட்டிங் நடைபெறும்போதெல்லாம் நானும், ரஜினிகாந்த் அவர்களும் நெருக்கமாக பழக நேர்ந்தது. இரண்டாவது ஹீரோவாக ரஜினிகாந்த் நடித்தார். நீண்ட வசனம் பேசும்போதெல்லாம் அவர் சற்று சிரமப்படுவது எனக்கு தெரியவந்தது. வசனத்தை வாங்கி, சற்று குறைக்க முற்படுவேன். அப்போது ரஜினிகாந்த் "கலைஞானம் சார்! எப்படியும் பேசிவிடுவேன். வசனத்தை குறைக்க வேண்டாம்!'' என்பார். அதே போல தனியாக அமர்ந்து பலமுறை பேசிப்பேசி பழகி, ஒரே டேக்கில் "ஓகே'' செய்து விடுவார். `முடியாது' என்பதே அவருடைய அகராதியில் இல்லை. ஹீரோ ரஜினியின் வித்தியாசமான நடிப்பைப் பார்த்து என் மனதுக்குள்ளேயே ஒரு திட்டம் போட்டேன். `ரஜினியை ஹீரோவாக போட்டு நாம் ஏன் ஒரு படம் எடுக்கக் கூடாது?' என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அந்த எண்ணம் ஒரு நாள் நிறைவேறியது. அதுதான் அவர் முதல் முறையாக ஹீரோவாக நடித்த "பைரவி.'' ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று, "நான் முதன் முறையாக தயாரிக்க இருக்கும் படத்தில், நீங்கள்தான் ஹீரோவாக நடிக்க வேண்டும்'' என்றேன். அவர் மகிழ்ச்சி அடைந்தார். `கதை என்ன?' என்று கேட்டார். உடனே கதையை சொன்னேன்.

Rajinikanth rajini50
அவருக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. "நாளைக்கு வந்து அட்வான்ஸ் கொடுக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன். மறுநாள் எப்படியோ சமாளித்து ரூ.5 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தேன். அவர் அதைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சிப் பெருக்கோடு, என் கையைப் பிடித்து குலுக்கினார். உடனடியாக அவருடைய நண்பர் நடராஜ் அவர்களை அழைத்து, "கலைஞானம் சார் கேட்கிற தேதிகளை குறித்துக்கொள்ளுங்கள்'' என்றார். அதன்படி நடராஜ் கால்ஷீட் தேதிகள் கொடுத்தார். அதன் பிறகு ஸ்ரீபிரியாவிடமும் கால்ஷீட் வாங்கி இருவர் பெயர்களையும் குறிப்பிட்டு, வியாபாரம செய்து முடித்தேன். பூஜைக்கு முன்பே வியாபாரம் இதில் அதிசயம் என்னவென்றால், பூஜைக்கு முன்பே விநியோகஸ்தர்களிடம் கதை சொல்லியே வியாபாரம் செய்து விட்டேன். முதலில் இளையராஜா இசையில் பாடல் பதிவு நடந்தது. முதல் பாடல், `நண்டூறுது, நரிறுது' என்ற பாடல். அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். ஏதோ ஒரு படப்பிடிப்பிலிருந்த ரஜினி, இந்தப் பாடலைக் கேட்பதற்காகவே ஏவி.எம்.ஸ்டூடியோவுக்கு வந்தார். டி.எம்.சவுந்தரராஜன் பாடுவதை கேட்டு மெய்மறந்து என் கையை பிடித்துக்கொண்டு, "கலைஞானம் சார்! டி.எம்.எஸ். பாடி, அதை படத்தில் நான் பாடி நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை!'' என்று பெருமகிழ்ச்சியுடன் கூறினார். 1978 ஜனவரி 14-ந்தேதி படப்பிடிப்பு ஆரம்பமானது. அவருடைய ஷாட் முடிந்ததும் எங்கேயாவது ஒரு மூலையில் தூசியாக இருந்தாலும், கிழிந்த சோபாவாக இருந்தாலும் போய் படுத்துக்கொள்வார். அவரிடம் பந்தா கிடையாது. தனக்கு இன்ன இன்ன வசதி வேண்டும் என்று கேட்கமாட்டார். சாப்பாடு என்ன கொடுத்தாலும் சந்தோஷமாக சாப்பிடுவார். சதா சிந்தித்துக்கொண்டே இருப்பார். `ஹீரோவாக நடிக்கிறோம். இதில் எப்படியும் வெற்றி பெறவேண்டும்' என்பதே அந்த சிந்தனை. அனாவசியமாக பேசமாட்டார். பேசினாலும் இரண்டே வார்த்தைகள்தான். பாராட்டு குவிந்தது 1978 ஜுன் 2-ந்தேதி படம் வெளியானது. ராஜகுமாரி தியேட்டரில் மாட்னி ஷோ. பத்திரிகையாளர்களையும் அழைத்துப் பார்க்க வைத்தேன். இடைவேளையில் ரஜினிகாந்த் வந்தார். பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் அவரை வானளாவப் பாராட்டினார்கள். நானும், டைரக்டர் எம்.பாஸ்கரும் ஒரு ஓரத்தில் நின்று, இதையெல்லாம் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தோம். பட அதிபர் சின்னப்பதேவர் என்னைப் பாராட்டியதோடு, `எப்படியாவது ரஜினிகாந்திடம் சொல்லி என் கம்பெனி படத்தில் நடிக்கச் செய்' என்றார்.
Rajinikanth rajini51
`நீங்களே அவருக்குப் போன் செய்யுங்கள்' என்றேன். அதேபோல், தேவர் கம்பெனி போன் ரஜினிகாந்த் வீட்டில் ஒலித்த ஐந்து நிமிடத்தில் தேவரை வந்து பார்த்து, அவரிடம் ஆசி பெற்றார். தேவர், ரஜினியை மிகவும் பாராட்டி, "இரண்டு படம் எனக்கு செய்து கொடுங்கள்'' என்று கூறி அட்வான்ஸ் கொடுத்தார். நாளுக்கு நாள் புகழ், பொருள் அனைத்திலும் பெரும் வளர்ச்சி கண்ட ரஜினி, தர்ம சிந்தனையிலும் வளர்ச்சி பெற்று வருகிறார். `வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது' என்பார்கள். ரஜினிகாந்த் கொடுக்கும் தர்மம், இரண்டு கைகளுக்குமே தெரியாது. `உதவி' என்று யாராவது கேட்டால், கேட்டவர் வீட்டிற்கு உதவி வந்து சேரும். சிறு வயதில், அவர் பட்ட கஷ்டங்கள் கணக்கில் அடங்காது. அதுவே அவரை பக்குவப்படுத்தி, அவரை கருணை உள்ளத்தோடும், மனித நேயத்தோடும் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன.'' இவ்வாறு கலைஞானம் கூறினார்.

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

Rajinikanth rajini298
"யார் யாருக்கு எந்த சமயத்தில் உதவி செய்ய வேண்டுமோ, அதை சரியாக செய்பவர் ரஜினி'' என்று பட அதிபர் கலைஞானம் கூறினார். பட உலகில், பாதிப்புக்கு உள்ளான 8 பேர்களுக்கு உதவுவதற்காக, அவர்களையே பட முதலாளிகள் ஆக்கி, "அருணாச்சலம்'' என்ற படத்தை ரஜினிகாந்த் தயாரித்தார். அந்த 8 பேர்களில் ஒருவர் கலைஞானம். ஆரம்ப காலத்தில் வில்லன் வேடங்களில் நடித்து வந்த ரஜினியை, முதன் முதலாக "பைரவி'' படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தவர். அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது:- சரியான நேரத்தில் உதவி "சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி சொல்வதென்றால் அது மகாபாரதம் போல் வளர்ந்து கொண்டே போகும். எனவே ஒரு சிறு துளியை மட்டும் சொல்ல விரும்புகிறேன். "ராஜரிஷி'' என்ற படத்தை எடுத்து லட்சக்கணக்கில் நஷ்டப்பட்டுப் போயிருந்த எனக்கு தனது "அருணாச்சலம்'' படத்தின் மூலம் உதவினார். இந்தப்படம் மூலம் அவரிடம் உதவி பெற்ற எட்டுப் பேரில் நானும் ஒருவன். யார் யாருக்கு எந்த சமயத்தில் உதவி செய்ய வேண்டுமோ அதனை சரியாகச் செய்து வருகிறார். கோபமுள்ள இடத்தில்தான் குணமிருக்கும் என்பார்கள். அது முற்றிலும் உண்மை என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் சின்னப்பதேவர். வாழ்ந்து கொண்டிருப்பவர் `சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த். இறைவன் கொடுத்த வரம் ஒருவரின் வளர்ச்சிக்கு யாரும் தடையாக இருக்க முடியாது. அதுமாதிரி ஒருவருக்கு யாரும் வாழ்வு கொடுத்து விடவும் முடியாது. நடக்கப்போகும் அனைத்துக்கும் இறைவனே காரணகர்த்தா. இதுவே என் நம்பிக்கை. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், என் மூலம் ரஜினிக்கு இறைவன் `ஹீரோ' அந்தஸ்து கொடுத்தானே தவிர, அதற்குக் காரணம் நான் அல்ல. இதற்கு இறைவன் மூலம் நான் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறேன். அவ்வளவுதான். "ஆறுபுஷ்பங்கள்'' படத்தில் ரஜினி இரண்டாவது ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்துக்கு நான்தான் கதை வசனம். பழக நேர்ந்த சில நாட்களிலேயே நண்பர்கள் ஆனோம். எந்தவொரு விஷயத்திலும் அவரது உயர்ந்த சிந்தனை என்னை அவர் பக்கம் அதிகமாய் ஈர்த்தது. அவர் ஒரு நல்ல நடிகராக வருவார் என்று நினைத்தேன். உலகமே கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக வருவார் என்பதை நான் உள்பட யாருமே எதிர்பார்க்கவில்லை. அவரின் நல்ல மனதுதான் அப்படியொரு இடத்தில் அவரைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. என் "பைரவி'' கதைக்கு ரஜினி பொருத்தமாக இருந்தார். எனவே நாயகனாக்கினேன். படம் மட்டுமின்றி, ஹீரோவாக ரஜினியும் வென்றார். பைரவி படம் இன்றளவும் எனக்கு பேரும் புகழும் தந்து கொண்டிருக்கிறது.
Rajinikanth rajini299
மகிழ்ச்சிக்கு காரணம் ரஜினி சூப்பர் ஸ்டாராக உயர்ந்த நேரத்தில் ஒருநாள் ஏவி.எம். ஸ்டூடியோவில் எதிரும் புதிருமாக சந்தித்துக்கொண்டோம். அன்புடன் என்னை நலம் விசாரித்தவர், அடுத்து என்னிடம் கேட்ட கேள்விதான் முக்கியமானது. "நீங்கள் எப்போதும் சந்தோஷமாக காணப்படுகிறீர்களே, அது எப்படி?'' என்று கேட்டார். அவருக்கு நான் இப்படி பதில் சொன்னேன்: "ரெயில் பெட்டிகளில் ஒரு வாசகம் எழுதியிருப்பதை நீங்களும் படித்திருப்பீர்கள். `லக்கேஜை எவ்வளவு குறைத்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவு சுகமாக இருக்கும் உங்கள் பயணம்'' என்ற அந்த வாசகம் என் விஷயத்திலும் பொருந்தும். எல்லாப் பிரச்சினைகளையும் நம் தலைமேல் தூக்கி சுமக்காமல் முடிந்த மட்டும் குறைத்துக் கொண்டால் நாம் சந்தோஷமாக வாழமுடியும்'' என்றேன். இந்தப் பதிலுக்கு அவர் அமைதியாக இருந்தார். சிந்திக்கிறார் என்பதை உணர முடிந்தது. இரண்டு நிமிட இடைவெளியில் மறுபடியும் பேசினார். "கலைஞானம் சார்! நான் வளர வளர பெரும் புள்ளிகள் என்னை சூழ்ந்து கொண்டார்கள். இதனால் சிலரை என்னால் கவனிக்க முடியவில்லை'' என்று வேதனை கலந்த குரலில் சொன்னார். அதன் உள்ளர்த்தம் எனக்குத்தான் தெரியும். நடந்துவந்த பாதையை மறக்காத ரஜினி, தான் நடந்து வந்த பாதையில் இளைப்பாற உட்கார்ந்த கருங்கல்லைக் கூட நினைத்துப் பார்க்கிறார். இந்தக் குணம்தான் எதிர்ப்பட்ட அத்தனை சோதனைகளையும் தாண்டி அவரை புகழின் சிகரத்தில் ஏற்றி வைத்திருக்கிறது. ரஜினிகாந்த் நடிக்க வந்து 25-ம் ஆண்டு விழா கொண்டாடியபோது ரஜினியின் மனைவி லதா, இயக்குனர் கே.பாலசந்தரையும், என்னையும் மறக்காமல் நினைவு கூர்ந்து நன்றியைத் தெரிவித்தார். அதை எனக்குக் கிடைத்த சிறந்த பரிசாக ஏற்று மகிழ்ச்சிப் பெருக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.'' இவ்வாறு கலைஞானம் கூறினார்.