சிவாஜியும், எம்.ஜி.ஆரும் அரசியல் ரீதியாகப் பலமுறை மோதிக் கொண்டிருக்கிறார்கள். மேடைகளில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்ச்சித்திருக்கிறார்கள். வெளியே தெரியாத அளவு சினிமாவினாலும் இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. அது ரசிகர்களையும் பிடித்துக் கொண்டு இன்றைக்கும் இருக்கிறதென்றாலும் முன்போல் இல்லை. இவர்களுக்குப் பின் ரஜினி-கமல் ரசிகர்களிடையேயும் போட்டி உண்டு. மோதல் உண்டு. அந்த அளவுக்கு போட்டியும், மோதலும் ரஜினி-கமலிடம் இல்லை. நல்ல நட்புண்டு. உள்மனதில் இருவரும் என்ன நினைக்கிறர்கள் என்பது நமக்குத் தெரியாது.
சுற்றிவிட்டு எங்கள் இருப்பிடம் திரும்ப நள்ளிரவு 2.00 மணிக்கு மேல் ஆகிவிடும். ரஜினியுடன் நீண்ட நேரம் இரவில் சுற்றுவது எனக்கு சரிப்பட்டு வரவில்லை. அதனால் ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுவேன். அவர் நள்ளிரவு தாண்டி அதிகாலை 3.00 மணிக்கும், 4.00 மணிக்கும் வருவார். மறுநாள் காலை 7.00-க்கெல்லாம் படப்பிடிப்புக்குத் தயாராக வேண்டும் என்ற கவலையே இருக்காது. மறுநாள் காலையில் முந்தய இரவு விழித்திருந்த அசதியும் ரஜினியிடம் தெரியாது. பாலச்சந்தர் சார் இரவு 9.00 மணிக்கு தூங்கி, காலை 5.00 மணிக்கே தயாராகி விடுவார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாரென்றால் காட்சியைத் தயார் செய்ய அரை மணி நேரமாகும். இந்த இடைவெளியை நானும், ரஜினியும் வீணாக்குவதில்லை. சிங்கப்பூரிலுள்ள பூங்கா, சாலைப் பகுதிகளில் சிமெண்ட் சாய்மானங்கள் இருக்கும். நான் ஒரு பக்கம் ரஜினி வேறொரு பக்கம் இருக்க சாத்தியப்படாது. டைரக்டர் அழைக்கும்போது எழுந்து ஓட வேண்டுமே. அதற்காக ஓரே இடத்தில் இருவரும் ஒருவரது தோள்மீது ஒருவர் தலை சாய்த்தபடி தூங்குவோம். ஓரே காரில் பயணம் செய்யும்போதும் விமான நிலையத்திலும்.... என்று கிடைத்த இடங்களில் இப்படித் தூங்கித்தான் ஓய்வெடுப்போம். இதை எத்தனை பேர் நம்புவீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் உண்மை! (இதை 'படையப்பா' வெற்றி விழாவிலும் கமல் சொன்னார்) 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படப்பிடிப்பு சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றபோதுதான், இனி இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்தோம். நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும்போது தயாரிப்பாளர்கள் எங்கள் இருவருக்குமே ஒரு குறிப்பிட்ட சம்பளத்தைக் கொடுத்து விடுவதை எண்ணிப் பார்த்தோம். தனித்தனியாக படம் செய்தால் அதைவிட அதிகமாகவே சம்பளம் பெற முடியும் என்று உணர்ந்தோம். அதனால் சேர்ந்து நடிப்பதற்கு தற்காலிகமாக முடிவு சொல்வது என்று சோபா ஒன்றில் அமர்ந்து பேசி இப்படித் தீர்மானித்தோம். எங்கள் தீர்மானம் சரியாகவே இருந்தது. இருவரும் சேர்ந்து நடிப்பது எப்போது என்ற கேள்விகள் தொடர்ந்து வந்து கொண்டுதானிருக்கிறது. ரஜினி தயாரிக்கும் படத்தில் நானும், நான் தயாரிக்கும் படத்தில் ரஜினியும் நடிப்போம். எங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது. வலிமை இருக்கிறது. எங்கள் சினிமா அந்தஸ்து உச்சத்தில் இருக்கும்போது இருவரும் இணைந்து நடிப்போம். அதற்குள் எங்களுக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக் கூடாது. ரஜினி, கமலுக்கு அப்புறம் ரஜினியைவிட, கமலை விட மிஞ்சி நிற்க தமிழகத்திலேயே நடிகர்கள் வருவார்கள். நாங்கள் வயதானபின் அவர்கள் போட்டி போடட்டும் அதற்குள் நாங்கள் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். திருமண விருந்து ரஜினி திருமணம் செய்து கொண்டதற்காக தயாரிப்பாளர் பாலாஜி அவருக்கு ஒரு விருந்து கொடுத்தார். விருந்தில் நானும் கலந்து கொண்டேன். அதில் எங்களுக்குள் கைகலப்பு வருமளவில் சிறு மோதல் ஏற்பட்டது. ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலக்கி இருவரையும் சமாதானம் செய்தார். அதனாலேயே ஜெய் சாரை எங்கள் இருவருக்கும் பிடிக்கும். ரஜினியின் பெருந்தன்மை இந்த சம்பவம் நடந்த மறுநாள் நான் வாகினி ஸ்டுடியோவில் இருந்தேன். என்னைப் பார்க்க ரஜினி வேகமாக வந்து கொண்டிருந்தார். வந்த வேகத்தைப் பார்த்து தகராறு செய்வதற்குத்தான் வருகிறார் போலிருக்கிறது என்று நினைத்தேன். சரி, வரட்டும் வந்தால் இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அருகில் வந்த ரஜினி என் கையை அழுத்தமாகப் பிடித்தார். அடுத்த விளைவுக்கு நான் தயாரானபோது, "ஸாரி.... நேத்து நடந்ததை மறந்துடுங்க..." என்றார். எனக்கு வெட்கமாகிவிட்டது. அவரது பெருந்தன்மை என்னைச் சுட்டது. மறுநாள் ரஜினி தன்னோடு பேசிக் கொண்டிருந்தவர்களிடம் "கமலிடம் மன்னிப்பு கேட்கப் போனபோது பகையுணர்ச்சியை மாற்ற மாட்டாரோ என்று நினைத்தேன். பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்!" என்று கூறியிருக்கிறார். அதைக் கேள்விப்பட்டபோது நாம் முந்திக் கொள்ளாமல் போனோமே என்று என்னை நொந்து கொண்டேன். போட்டி சினிமாவைப் பொறுத்தவரை நாங்கள் கடுமையாகப் போட்டி போட்டு மோதுவோம். ஒரு சமயம் நான் பெரிய வெற்றியாக வெடித்தால், அவர் அடுத்து அதைவிடப் பெரிய வெற்றியாக வெடித்து சிதறுவார். அதைப் பார்த்து அதைவிட வெற்றி பெற வேண்டும் என்று நான் முயலுவேன். எங்கள் போட்டி எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், நட்பில் எங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை. நான் முதன் முதலாகத் தயாரித்த 'ராஜபார்வை'யைப் பற்றி பலரும் 'ஆகா' 'ஓகோ'வென்று பாராட்டி விமர்சிக்கையில், ரஜினி மட்டும் 'சரியில்லை' என்றார். காரணம் கேட்டேன். "டெக்னிகலா பெரிசா பண்ணியிருக்கீங்க. அதனால் என்ன பிரயோஜனம்?" என்றார். ரஜினியின் பெரிய படமொன்று வந்தது. அதைப் பார்த்துவிட்டு எனக்குப் பிடிக்காததை அவரிடம் சொன்னேன். ஒருவரையொருவர் இப்படி விமர்சிப்பதிலும் நாங்கள் பின் வாங்கியதில்லை. அது மட்டுமின்றி எங்கள் தவறுகளையும் நாங்கள் விமர்சிக்க பயந்ததில்லை. அந்த தைரியம் எங்களுக்கு மட்டுமே உண்டு. இந்த மனப்பாங்கு எம்.ஜி.ஆர். சிவாஜியிடம் கூட இருந்திருக்க முடியாது. ஏன் வேறு எந்த இந்திய நடிகர்களிடமும் காண முடியாதது என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன். ஒரு சமயம் ரஜினியிடமுள்ள பழக்கமொன்றைச் சுட்டிக் காட்டி நிறுத்திக் கொள்ளும்படி சொன்னேன். அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு "பொறுத்துப் பாருங்கள்" என்றவர் சில நாட்களிலேயே அந்தப் பழக்கத்தை நிறுத்திக் கொண்டார். அதுதான் ரஜினி."
"முன்பொரு சமயம், அரசியலில் ஈடுபடலாமா, வேண்டாமா என்ற குழப்பம் ரஜினிக்கு வந்தபோது என்னிடமும் அது பற்றி அபிப்பிராயம் கேட்டார். வேண்டாம் என்று கூறி, சில விளக்கங்களும் சொன்னேன். ரஜினி அதை ஏற்றுக் கொண்டு "எனது பிற நலம்விரும்பிகளும் இதைத்தான் சொல்கிறார்கள்" என்று கூறினார். அத்தோடு அரசியலில் ஈடுபடும் எண்ணத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்தார். 'அரசியலில் ஈடுபடாததே எங்கள் இருவருக்கும் பெரிய ஆரோக்கியமான சொத்தாக'க் கருதுகிறேன். அரசியலைப் பொறுத்தவரையில் இன்றைக்கு ரஜினியின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றாலும் அவர் எச்சரிக்கையோடு அதன் விளைவுகளை எதிர் கொள்ளக் கூடியவர் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. 'நாயகன்' படம் பார்த்துவிட்டு நடிகனுக்கு நடிகன் என்று பாராட்டினார் ரஜினி. 'புன்னகை மன்னன்' 100-வது நாள் விழாவில் நான் அப்படத்தில் ஏற்றிருந்த சாப்ளின் செல்லப்பா வேடத்தை, 'இது போல் எந்த நடிகராலும் செய்ய முடியாது' என்று குறிப்பிட்டார். 'எங்கேயோ கேட்ட குரல்' படத்தில், மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன். அந்தப் படம் பெரிய அளவு வெற்றி பெறாததில் எனக்கும் வருத்தமுண்டு. கலைஞர்களை வெற்றிகள்தான் பெரிய அளவில் உற்சாகப்படுத்த முடியும் என்று நம்புபவன் நான்.'' என்கிறார் கமல். 'நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி' என்று பாட்ஷாவில் ரஜினி பேசிய வசனம் எதிரொலிக்காத தமிழர் வீடே இல்லை எனலாம். சின்னஞ்சிறு மழலைகளுக்கு இது போன்ற ரஜினி பேசிய வசனங்கள், அவர்களது வார்த்தை உச்சரிப்பை மெருகுப்படுத்துவதாக உள்ளது. அவர்கள் தமிழ்ப் பேசக் கற்றுக் கொள்வதற்கு ரஜினியின் படங்கள் நேரடியாக உதவுகின்றன என்பது நடைமுறை உண்மை. நிஜத்தில் ரஜினி ஒரு தடவை சொன்னால் அதை அந்த சமயத்திலேயே புரிந்துக் கொள்ள வேண்டும். நிஜமாகவே புரியவில்லையென்றால் ரஜினி இன்னொரு முறை சொல்லத் தயங்கமாட்டார். ஆனால் புரிந்து கொள்ள மறுப்பவர்களை ரஜினி சும்மா விடமாட்டார், அல்லது ஒதுக்கித் தள்ளிவிடுவார்.