K.S. Ravikumar (Director)

ரஜினியின் "முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது பற்றியும், "முத்து'' உருவானபோது கிடைத்த அனுபவங்கள் பற்றியும் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் விளக்கினார்.

அவர் கூறியதாவது:-

"ஏவி.எம். நிறுவனத்துக்காக நான் சக்திவேல்' படத்தை இயக்கியபோதுதான் ரஜினி சாருடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. சக்திவேல் படத்தின் டப்பிங் சமயத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்த வீரா' படத்தின் பாடல் காட்சிகளை பார்ப்பதற்காக ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு வந்திருந்தார். என்னைப் பார்த்ததும், "உங்களைப் பற்றி ஏவி.எம். சரவணன் சார், விஜயகுமாரெல்லாம் நிறைய சொல்லியிருக்காங்க'' என்று ஏற்கனவே பழகியவர் மாதிரி இயல்பாக பேச தொடங்கினார்.

ரசிகன்

நான் பட உலகுக்கு வரும் முன்பு ரஜினி சாரை ரசிகனாக நேசித்தவன். எங்கள் வீடு மந்தைவெளியில் இருந்தது. மந்தைவெளி மெயின் ரோட்டில் ரஜினி சாரின் ஒயிட் கலர் பியட் 5004 வரும்போது காத்திருந்து பார்த்த அனுபவங்கள் உண்டு. அப்போது இவரை நேரில் பார்த்து இரண்டு வார்த்தை பேச முடியுமா என்று ஏங்கியிருக்கிறேன். ஆனால் அவரே பின்னாளில் என் டைரக்ஷனில் முத்து, படையப்பா படங்களில் நடித்து அவை வெற்றிப் படங்களானது என்பது என்னை இப்போதும் பரவசப்படுத்தும் விஷயங்கள்.

நான் இயக்க வந்த புதிதில் "சேரன் பாண்டியன்'', "புருஷலட்சணம்'', "பொண்டாட்டி ராஜ்யம்'', "புரியாதபுதிர்'' என்று இயக்கியதில் ரசிகர்கள் வட்டத்திலும் தெரிய ஆரம்பித்திருந்தேன். என் படத்தில் சரவணன், செல்வா, ஜெயராமன், குஷ்பு என நடித்தார்கள். இதில் குஷ்புதான் அன்றைக்கு பெரிய நடிகை.

இந்த மாதிரி சமயத்தில் ரஜினி சார் என் படத்தில் நடிப்பார் என்று எப்படி நினைக்க முடியும்?

"சக்திவேல்'' படத்தை முடித்து ரிலீசுக்கு தயாரான நேரத்தில் ஒருநாள் எனக்கு சரவணன் சாரிடம் இருந்து போன். "மேனா தியேட்டர் வரை வர முடியுமா? அங்கே உங்கள் படத்தை ரஜினி பார்த்துக் கொண்டிருக்கிறார்'' என்றார்.

மேனா தியேட்டருக்கு ஓடினேன். தியேட்டரில் ரஜினி சார் தனியாக படம் பார்த்துக் கொண்டிருந்தார். முழுப் படமும் பார்த்து முடித்தவர், என்னிடம் கை குலுக்கினார். "படத்தை எவ்வளவு நாளில் முடித்தீங்க?'' என்று கேட்டார்.

"29 நாளில்'' என்றேன். ஆச்சரியப்பட்டார். "இவ்வளவு பிரமாண்டமா பெரிய அளவில் கூட்டம் கூட்டி, 29 நாளில் முடிச்சதை நம்பவே முடியலை'' என்று ஆச்சரியப்பட்டவர், மறுபடியும் கைகுலுக்கிவிட்டுப் போனார்.

நாட்டாமை

அடுத்து அவரை சந்தித்தது எனது "நாட்டாமை'' படத்தின் பிரிவியூ சமயத்தில்தான். நான் அவருக்கு போன் பண்ணி, "சார்! நீங்க நாட்டாமை படத்தை பார்க்க வரணும். உங்களுக்கு எப்ப சவுகரியப்படும்னு சொல்லுங்க'' என்றேன்.

பதிலுக்கு அவர், "நீங்க ஷோ போடறப்ப சொல்லுங்க. நான் வந்துடறேன்'' என்றார்.

நான் அவரிடம் "சார்! இன்றைக்குக்கூட மேனா தியேட்டரில் ஆறரைக்கு ஷோ இருக்கு'' என்றேன். "முடிஞ்சா வந்துடறேன்'' என்றவர், மாலையில் வந்து படத்தைப் பார்த்தார்.

படம் முடிந்ததும், என்னை அருகில் அழைத்தவர், அப்படியே கட்டிப் பிடித்துக்கொண்டார். "வாட் எ பிக்சர்! வாட் எ பிக்சர்!'' என்று பாராட்டினார்.

"இந்த மாதிரி ஒரு படம் பார்த்து ரொம்ப காலம் ஆச்சு'' என்று கூறியபடி லிப்ட்டுக்கு வந்தார். லிப்டில் படத்தின் தயாரிப்பாளர் சவுத்ரி சார் அவரை சந்தித்தார்.

அப்போது ரஜினி அவரிடம், "தெலுங்கு ரைட்ஸ் கொடுத்திட்டீங்களா?'' என்று கேட்டார். "கேட்டுக்கிட்டு இருக்கிறாங்க'' என்று சவுத்ரி சார் சொன்னதும், "சார்! நான் சொல்றவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமா?'' என்று கேட்டார்.

சவுத்ரி சார் "சரி'' என்றார்.

"நாட்டாமை'' படம் வெற்றி எனத் தெரிந்ததும் தெலுங்கில் பிரபல முன்னணி நடிகர் சிரஞ்சீவி உள்பட பலரும் சவுத்ரி சாரிடம் `ரீமேக்' உரிமை கேட்டார்கள். ரஜினி சாருக்கு லிப்ட்டில் கொடுத்த வாக்குக்காக அவர் யாரிடமும் கொடுக்கவில்லை.

பிறகு ரஜினி தனது நண்பர் மோகன்பாபுவுக்கு நாட்டாமையின் தெலுங்கு "ரைட்ஸ்'' வாங்கிக் கொடுத்தார். அதோடு நில்லாமல் பெத்தராயுடு என்ற பெயரில் தயாரான தெலுங்குப்படத்தில் அவரும் நடித்தார்.

தமிழில் `நாட்டாமை'யாக விஜயகுமார் நடித்த கேரக்டரில், ரஜினி தெலுங்குக்காக சில மாற்றங்கள் செய்து அந்தக் கேரக்டரில் நடித்து அசத்தினார். படம் பெரிய வெற்றி பெற்றது.

அதன் பிறகு நாங்கள் அடிக்கடி போனில் பேசிக்கொள்வோம். அப்படி பேசும்போது இடையிடையே, "எப்போது எனக்கு படம் பண்ணிக் கொடுப்பீங்க?'' என்று கேட்பார். "நீங்க எப்ப கூப்பிட்டாலும் நான் ரெடி சார்'' என்பேன்.

"பாட்ஷா'' எப்படி?

ஒருநாள் ரஜினி சாரிடம் இருந்து போன். "பாட்ஷா படத்தை இன்றைக்கு ஆல்பட் தியேட்டரில் பார்க்கிறோம். வந்துடுங்க'' என்றார். ஆல்பட் தியேட்டர் பாக்சில் ரஜினி சாருடன் சேர்ந்து படம் பார்த்தேன். படம் முழுவதும் எனக்குப் பிடித்திருந்தது.

"படம் எப்படி?'' என்று ரஜினி கேட்டார். "சார்! லாஜிக் மிஸ்டேக் மட்டும் இடிக்குது. உங்களோட மும்பை நண்பர்களுக்கெல்லாம் வயசாயிடுது. ஆனா உங்களுக்கு மட்டும் வயசாகாதா? என்றாலும் நீங்க `இமேஜ்' உள்ள ஹீரோ. அதனால ரசிகர்கள் இதை பெரிசா எடுத்துக்க மாட்டாங்க. மற்றபடி படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது'' என்றேன்.

ரஜினி அப்போது என்னிடம், "மனதில் உள்ளதை பட்டுன்னு சொல்ற இந்த குணம்தான் உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது. நாங்களும் படம் வளர்றப்ப இதுபற்றி பேசினோம். ரசிகர்கள் பெரிசா எடுத்துக்க மாட்டாங்கன்னு விட்டுட்டோம்'' என்று சிரிச்சார்.

அப்பத்தான் என்னிடம், "நாம படம் பண்றோம். படத்தின் தயாரிப்பாளர் கே.பாலசந்தர் சார்!'' என்றார்.

சின்ன வயசில் கே.பி. சார் படம் பார்க்க ஏங்கியிருக்கிறேன். இப்போது அவர் தயாரிப்புக்கு நான் டைரக்டரா? எனக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

மலையாளத்தில் அப்போது வெற்றி பெற்றிருந்த தேன்மாவின் கொம்பத்தே' படத்தின் கதைச் சுருக்கத்தை ரஜினி சார் என்னிடம் சொன்னார். ஒரு பெண்ணை முதலாளி - அவரது வேலைக்காரன் இருவருமே காதலிக்கிறார்கள். தொழிலாளியும் அந்தப் பெண்ணும் ஒரு காட்டில் தொலைந்து போகிறார்கள். இந்தப் பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு கதையை டெவலப் பண்ணுங்க'' என்றார்.

மலையாளப் படத்தில் `அப்பா ரஜினி' கேரக்டரெல்லாம் கிடையாது. தமிழுக்காக இப்படி பல புதிய விஷயங்கள் சேர்த்தோம். அந்த அப்பா கேரக்டரை சேர்க்கச் சொன்னதே ரஜினிதான். டிஸ்கஷன் முடிந்து பார்த்தபோது, கதையே முற்றிலும் புதுசாகத் தெரிந்தது.

என்றாலும் கதை என்ற இடத்தில் மலையாள கதை ஆசிரியரையே போட்டோம். நான் திரைக்கதை - டைரக்ஷன்.

புதுவிதமான படப்பிடிப்பு

படத்துக்கு "முத்து'' என்று பெயர் சூட்டினோம். முதல் ஷெட்யூல் மைசூரில் தொடங்கினோம். போனதும் `ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலை எடுத்தோம். இந்தப் பாடல் காட்சிக்காக லாரியில் குதிரைகள், குதிரை வண்டி என ஏற்றிக்கொண்டு போயிருந்தோம்.

இந்தப் பாடல் காட்சியை பல இடங்களில் `ஷூட்' பண்ண விரும்பினேன். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக எடுப்போம். பாதிப்பாடல் முடிந்த நிலையில் 20 ஆயிரம் பேரை திரட்டி கிளைமாக்ஸ் காட்சியை எடுக்கத் தொடங்கினேன். இதையும், அந்த அப்பா கேரக்டர் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் மொத்தம் 28 நாளில் எடுத்து முடித்தேன்.

இடையிடையே வித்தியாசமான இடங்களில் `ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலும் தொடரும். இப்படி இந்தப் பாடல் காட்சி மட்டும் 7 நாட்கள் படமானது. ஒரு கட்டத்தில் "இந்தப்பாட்டு இன்னுமா முடியலை?'' என்று ரஜினி சாரே கூட ஆச்சரியப்பட்டார்.

66 நாட்களில் படம் தயார்

`குலுவாலியே முத்து வந்தல்லோ' பாடல் காட்சிகள் கேரளாவில் படமானது. மொத்தப் படப்பிடிப்பும் 66 நாட்களில் முடிந்தது என்றாலும் குதிரை சண்டைக்காட்சிகளை மட்டும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் 16 நாட்கள் எடுத்தார். படத்தில் அந்தக் காட்சியும் பரபரப்பாக பேசப்பட்டது.

முதல் ஷெட்யூலிலேயே கிளைமாக்ஸ் எடுத்தபோது ரஜினி சார் ரொம்ப ஆச்சரியப்பட்டுப் போனார். `என் அனுபவத்தில் படத்தின் தொடக்கத்திலேயே கிளைமாக்ஸ் காட்சி எடுத்தது நீங்கள்தான்'' என்று கூறினார்.

அப்பா கேரக்டர் படமாகும்போது மட்டும், "என் இமேஜும் கெட்டுடாமல், ரசிகர்கள் பிரமிப்பா உணர்ற மாதிரி அந்த காட்சி இருந்தால் நல்லது'' என்று கூறினார். படத்தைப் பார்த்தபோது, "என் எதிர்பார்ப்புக்கு மேலேயே அந்த அப்பா கேரக்டரை கொண்டு வந்துவிட்டீர்கள்'' என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தப்படம் தமிழ்நாட்டில் பெரிய வெற்றி பெற்றதோடல்லாமல், ஒரு வருடம் கழித்து ஜப்பானிலும் வெளியாகி அங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அங்கே டான்சிங் மகாராஜா' என்ற பெயரில் வந்ததால், ரஜினி ஜப்பான் ரசிகர்களின் டான்சிங் மகாராஜா' ஆகிவிட்டார். இதன் பிறகு என்னை சந்திக்கும் ஜப்பான் ரசிகர்கள் "நீங்கதான் டான்சிங் மகாராஜா படத்தின் டைரக்டரா?'' என்று கேட்டு கை குலுக்கி செல்வார்கள்.

ரஜினியுடன் நடித்த நடிகை மீனாவும் ஜப்பானில் ரொம்ப பிரபலமாகிவிட்டார். ரஜினி சாருக்கு ஜப்பானில் ரசிகர் மன்றமெல்லாம் அமைத்து தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். இது `முத்து' படம் மூலமாக நடந்தது என்பதில் எனக்குப் பெருமை.''

இவ்வாறு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.

"படையப்பா'' படத்தை தயாரித்து முடித்தபோது, அதன் நீளம் 21 ஆயிரம் அடியாக இருந்தது. "இரண்டு இடைவேளைகளுடன் படத்தை திரையிடலாமா?'' என்று ரஜினி யோசித்தார். இதுபற்றி கமலஹாசன் கருத்தையும் கேட்டறிந்தார்.

முடிவில் நீளத்தைக் குறைத்து ஒரே இடைவேளையுடன் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த தகவலை, படத்தின் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்டார்.

பேட்டி

ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப்படங்களான "முத்து'', "படையப்பா'' ஆகியவற்றை டைரக்ட் செய்த ரவிக்குமார் "படையப்பா'' தயாரிப்பின்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-

"முத்து வெற்றிப்படமாகி விட்டதால் "படையப்பா'' படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தபோது, இதையும் வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற வேகம் எனக்குள் ஏற்பட்டது.

`நீலாம்பரி' கேரக்டருக்கு, நடிகை ரம்யாகிருஷ்ணன் சரியாக இருப்பார் என்பதை ரஜினிதான் சொன்னார்.

ஆனால் எங்கள் யூனிட்டிலோ, நீலாம்பரி கேரக்டரில் ரம்யாவை போட யாருக்கும் இஷ்டமில்லை. என்றாலும் ரஜினி சாரின் விருப்பமே என் விருப்பமாகவும் இருந்ததால், ரம்யா கிருஷ்ணனே நீலாம்பரி ஆனார். அந்த கேரக்டருக்கு நன்றாகப் பொருந்தினார்.

குழந்தை பிறந்தது

படையப்பா படத்துக்கு, ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை போட ஏற்பாடு செய்தோம். ஆனால், பூஜைக்கு முந்தினநாள் என் மகள் யஷ்வந்தி பிறந்தாள்!

மறுநாள் பூஜை முடிந்ததும் மைசூருக்கு படப்பிடிப்புக்காக போய்விட்டோம். இதை மனதில் வைத்து, இப்போது யஷ்வந்தியை பார்த்தாலும் ரஜினி "வாம்மா படையம்மா'' என்றுதான் கூப்பிடுவார்.

மைசூரில் முருகன் கோவில் செட் போட்டு, காட்சிகளை படம் பிடித்தோம். கோவிலுக்குள் வருகிற மாதிரியான காட்சிகளை ஏவி.எம்.மில் செட் போட்டு எடுத்தோம். மற்றபடி முதல் ஷெட்யூலிலேயே படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை எடுத்துவிட்டேன். சிவாஜி சார் இறந்து போகிற காட்சியும் முதல் ஷெட்யூலிலேயே எடுத்துவிட்டேன்.

மைசூரில் கோவில் பின்னணியில் ரஜினி அல்லாத காட்சிகளை எடுத்துக்கொண்டிருந்த போது, ரஜினி கோவில் படிக்கட்டில் உட்கார்ந்து இருந்தார்.

"கடைசிப்படம்''

நான் மைக்கில் பேசி காட்சிக்கான தயார் நிலையில் இருந்தபோது, கோவில் படிக்கட்டில் இருந்தபடி ரஜினி சார் உரத்த குரலில், "ரவிக்குமார் சார்! இதுதான் என் கடைசிப்படம்'' என்றார்.

பதிலுக்கு நான், "ஏன், அரசியலுக்கு போறீங்களா?'' என்று கேட்டேன்.

அவரோ, "இந்தப்படம் வெள்ளி விழா கொண்டாடணும். அப்படியானால்தான் அடுத்த படத்தில் நடிப்பேன். இல்லேன்னா இந்தப் படத்தோட சரி'' என்றார்.

நான் விடவில்லை. "அதுக்கென்ன சார்! நான் சிட்டி' ரைட்ஸ் (சென்னை நகர உரிமை) வாங்கி தேவி' குரூப்பில் "வெள்ளி விழா'' வரை ஓட்டிட்டுப் போறேன்'' என்றேன்.

அவரும் விடாமல், "அப்படியெல்லாம் இல்லை. இந்தப்படம் வசூலில் `ரெக்கார்டு பிரேக்' பண்ணணும். அப்படி நடந்தாத்தான் அடுத்த படத்தில் நடிக்கிறது பற்றி யோசிப்பேன்'' என்றார்.

இத்தனையும் படப்பிடிப்பு குழுவினர் முன்னாலேயே நடக்கிறது. எனக்கோ "கோவில் வாசலில் இருந்து இப்படி வெளிப்படையாக பேசுகிறாரே'' என்ற கவலை. இந்தப்படம் இவரது எதிர்பார்ப்பையும் தாண்டி நீண்ட நாள் ஓடவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தீவிரமானது.

படையப்பா ரிலீசானபோது, அதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் தகர்த்து, `ரெக்கார்டு பிரேக்' செய்தது. பல வருஷம் கழித்து வந்த "சந்திரமுகி''தான் "படையப்பா'' வசூல் ரெக்கார்டை முறியடித்து இருக்கிறது. அதுகூட எல்லா இடங்களிலும் அல்ல.

படம் பார்த்த முதல்-அமைச்சர் கலைஞர், படம் முடிந்து வெளியே வந்ததும் மகிழ்ச்சி முகமாய் ரஜினியை பார்த்து "படையப்பா! அனைத்து சாதனைகளையும் உடையப்பா'' என்று வாழ்த்தினார். அந்த வாழ்த்தும் பலித்துவிட்டது.

2 இடைவேளை

படத்தை எடுத்து முடித்த நேரத்தில் ஒரு சிக்கல். படம் மொத்தம் 21 ரீல் வருது. 21 ரீலையும் பார்த்த ரஜினி சார் என்னிடம், "நல்லா இருக்கு. ஆனா 21 ரீல் வந்திருக்கு. எப்படி குறைக்கப் போறீங்க?'' என்று கேட்டார்.

"என்னால் முடிந்த வரை குறைக்கிறேன்'' என்று சொன்னேன். அப்படி இப்படியாக 2 ஆயிரம் அடியை குறைத்தேன். இப்ப 19 ரீல் ஆச்சு. ரஜினி சாரிடம் சொன்னேன். அவர் "19 ரீல் படம்னா இரண்டு இடைவேளை விட்டால்தானே சரியாக இருக்கும்?'' என்று கேட்டார்.

ராஜ்கபூர் நடித்த "சங்கம்'', "மேரா நாம் ஜோக்கர்'' ஆகிய படங்களுக்கு 2 இடைவேளை வைத்தார்கள். அது மாதிரி தமிழில் "படையப்பா''வுக்கும் செய்யலாமா என்று ரஜினி சார் யோசித்தார். இதுபற்றி, தனது ஆப்த நண்பர் கமல் சாரிடமும் யோசனை கேட்டார்.

"எக்காரணம் கொண்டும் இரண்டு இடைவேளை வைக்காதீர்கள். அது சரியாக இருக்காது. நீளத்தை குறைக்கும் பொறுப்பை டைரக்டரிடம் விட்டு விடுங்கள். அவர் பார்த்துக்கொள்வார்'' என்று கமல் கூறினார்.

இதுபற்றி ரஜினி தீவிரமாக சிந்தித்தார். "குறைந்த பட்சம் 5 ரீலாவது குறைத்தால்தான் சரியாக இருக்கும். ஆனால், எல்லா சீனும் முக்கியமானவை. உங்களால் 5 ரீல் குறைக்க முடியுமா?'' என்று என்னிடம் கேட்டார்.

"குறைக்கிறேன் சார் என்று அவரிடம் சொல்லி விட்டேனே தவிர, காட்சிகளின் வீரியம் குறையாமல், கதையின் விறுவிறுப்புக்கு பங்கம் நேராமல் 5 ரீல்களை குறைப்பது என்பது எனக்கு பெரும் சவாலாகவே இருந்தது. என்றாலும் 4 நாட்கள் தொடர்ந்து இரவு பகலாக உட்கார்ந்து 14 ஆயிரத்து 500 அடியாக படத்தை குறைத்தேன். அதன்பின் படத்தை பார்த்தபோது காட்சிகள் குறைக்கப்பட்டது தெரியாமல், படம் விறுவிறுப்பாக இருந்தது.

பேசாமல் போன ரஜினி

முதல் பிரதி தயாரானதும், ஏவி.எம். ஏசி தியேட்டரில் படம் பார்த்தோம். ரஜினி சார் சில நண்பர்களுடன் வந்திருந்தார். என்னுடன் சில நண்பர்களும் வந்திருந்தார்கள். படம் முடிந்ததும் ரஜினி சார் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் என்னிடம் கைகொடுத்து விட்டுப் போய்விட்டார். படம் பற்றி எதுவும் சொல்லாமல் போனதால் எனக்கு இரவு முழுக்க தூக்கம் இல்லை.

ஆனால் மறுநாள் காலையில் நேரில் வரச்சொல்லி போன் செய்தார். அவரை சந்தித்தபோது "நேற்று படம் முடிந்ததும் உங்ககிட்ட எதுவும் சொல்லாமல் போய்விட்டேன். நம்ம இரண்டு பேர் சைடிலும் வந்தவங்க மத்தியில் நான் "படம் சூப்பர்''னு சொல்லிட்டா, அவங்களும் அதையே சொல்லிடுவாங்க. நமக்கு படம் பற்றிய அவங்களோட உண்மையான கருத்து கிடைக்காது. என் நண்பர்கள் "படம் நல்லா இருக்கு. ஆனால் இதுக்கு எதுக்கு "படையப்பா''ன்னு பேரு? நீலாம்பரின்னே வெச்சிருக்கலாமே'' என்று சொன்னாங்க. எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு. 14 ரீலா குறைத்த பிறகும், குறைத்த மாதிரி தெரியாமல் விறுவிறு'வென்று போகுது. உடனே ரீரிக்கார்டிங்' ஆரம்பிக்கச் சொல்லிடுங்க'' என்றார்.

ரஜினி சார் கணிப்பும், என் கணிப்பும் ஒரே மாதிரி இருந்ததை ரசிகர்களும் உறுதி செய்தார்கள். அவர்களும் எங்கள் உணர்வுகளை பிரதிபலித்ததால் படையப்பா சாதனை படைத்தது.''

இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.