Prabu
ரஜினியுடன் "தர்மத்தின்
தலைவன்'', "குருசிஷ்யன்'', "சந்திரமுகி'' உள்பட சில
படங்களில் இணைந்து நடித்த நடிகர் பிரபு கூறியதாவது:-
"அன்புக்குரிய அண்ணன் ரஜினி பற்றி சொல்வதானால், அது ஒரு
நாளில் முடிந்து விடக்கூடியதல்ல. எத்தனை நாட்கள்
வேண்டுமானாலும், அவரைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் நடித்த "ராகங்கள்
மாறுவதில்லை'' வெளிவந்த சமயம். ரஜினி, அந்தப் படத்தை
மிகவும் ரசித்துப் பார்த்திருக்க வேண்டும். "பிரபு, நீங்கள்
நல்லா `பைட்' பண்றீங்க. உங்க டான்ஸ் மூவ்மெண்ட் கூட அழகா
இருக்கிறது'' என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார்.
எத்தனை நடிகர்களிடம் இந்த விரிந்த மனப்பான்மை - சக
நடிகர்களை தட்டிக் கொடுக்கும் தாராள மனம் இருக்கிறது?
"தர்மத்தின் தலைவன்'' படத்தில் முதன் முதலாக நாங்கள்
சேர்ந்து நடித்தோம்.
அப்பாவுடன் முதன் முதலாக "சங்கிலி'' படத்தில் நடித்தபோது
மிகவும் பயமாக இருந்தது. ஆனால் ரஜினியுடன் நடிக்கும்போது
ரொம்ப ஆர்வமாக இருந்தது.
"நம்ம நடிப்பை ரஜினி எப்படி ரெஸ்பான்ஸ் பண்ணப்போகிறார்?
அவர் கூட நடிக்கும்போது, நம் அசைவுகள் எப்படி இருக்கும்?''
என்றெல்லாம் முதல் நாளில் இருந்தே முடுக்கிவிட்டேன்,
கற்பனைக் குதிரையை. அவ்வளவு ஆர்வம்!
ஏராளமான படங்களில் நடித்து முடித்த பிறகும், ஷாட்
முடிந்ததும் "நல்லா பண்ணினேனா?'' என்று மற்றவர்களிடம் அப்பா
கேட்டுத் தெரிந்து கொள்வார். இதே பழக்கம் ரஜினிக்கும்!
அவரது அமோக வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.
அப்பாவைப் பற்றி அவர் சொல்லும் ஒரே வார்த்தை "அடேங்கப்பா!''
இந்த "அடேங்கப்பா''வில்தான் எத்தனை ஆழமான விமர்சனம்
அடங்கியிருக்கிறது! அடேங்கப்பா!
நட்புக்கு மதிப்பு கொடுப்பவர் ரஜினி. போலியும்,
பொய்ப்பூச்சும் படியாத தூய்மையான நட்பை அவரிடம்
பார்க்கிறேன். வயது, வசதி, பேதம் பார்க்காமல் அனைவருடனும்
நட்புணர்ச்சியுடன் பழகும் அன்புள்ளம் கொண்டவர், ரஜினி.''
இவ்வாறு பிரபு கூறினார்.
|