Director K.
Nataraj
"வள்ளி'' படம் உருவானது
பற்றிய விவரங்களை டைரக்டர் கே.நட்ராஜ் வெளியிட்டார். அவர்
கூறியதாவது:-
"1992-ம் வருடம் ரஜினி "அண்ணாமலை'' படத்தில் நடித்துக்
கொண்டிருந்த நேரம். படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.
நண்பன் என்ற முறையில் ரஜினி என்னிடம், "நீயும் இந்தப்
படத்தில் இரு'' என்றார்.
அவரது `டேஸ்ட்' எனக்குத் தெரியும் என்பதால், படத்தில் அது
எதுவும் மிஸ் ஆகிவிடக்கூடாது என்பதற்காக ரஜினி என்னிடம்
இப்படிச் சொன்னார்.
இதனால் "அண்ணாமலை'' படத்தில் அசோசியேட்டாக சேர்ந்து
கொண்டேன். படம் நல்லவிதமாக வளர்ந்து முடிந்தது.
இந்த நேரத்தில் ரஜினி, அவரது நண்பர்களை அழைத்தார். இந்தப்
பட்டியலில் விட்டல், வடிவேலு, தும்பு, பிரதீப், சக்தி,
அசோக், ரவீந்திரநாத், ரகுநந்தன், சந்திரா சால்வா, அமர்
முல்லா, ராஜ்பகதூர் ஆகியோருடன் நானும் இடம் பெற்றிருந்தேன்.
ரஜினி
எங்களிடம், "உங்களுக்கு நான் ஒரு படம் நடித்துத்தர
விரும்புகிறேன். என்னிடம் கைவசம் ஒரு கதையும் இருக்கிறது.
அதையே படமாக எடுக்கலாம். பட வேலைகளோடு நீங்களும் நடியுங்கள்.
நட்ராஜ் டைரக்ட் பண்ணட்டும். இது தொடர்பான வேலைகளை இனி
மளமளவென தொடங்கி விடலாம்'' என்றார்.
திரைக்கதை
ரஜினியின் வேகம்தான் "சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்'' வேகம்
ஆயிற்றே. மறுநாளே படம் தயாரிப்பது தொடர்பான வேலைகளை
ஆரம்பித்து விட்டார். அவர் எழுதி வைத்திருந்த கதையை
என்னிடம் கொடுத்தார். நான் உதவி இயக்குனர்களிடம் பெங்களூர்
சென்று, ஒரு வாரத்தில் திரைக்கதை தயார் செய்தேன். ரஜினி
கதையுடன் வசனமும் எழுதினார். எந்த கேரக்டருக்கு யார்
சரியாக இருப்பார்கள் என்று தேர்வு செய்தேன்.
படத்தின் நாயகி பிரியாராமன் `வள்ளி' படத்தில்தான்
அறிமுகமானார். இவரை தனது புதிய படத்தில் நடிக்க வைக்க,
டைரக்டர் பாரதிராஜா ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்தார்.
ரஜினி கேட்டுக்கொண்டதால் பிரியாராமனை எங்கள் படத்தில்
அறிமுகப்படுத்த சம்மதித்தார் பாரதிராஜா.
கவுரவ வேடம்
படத்தில் முதலில் ரஜினி நடிப்பதாக இல்லை. "நண்பர்களுக்காக
நீங்கள் தயாரிக்கும் படத்தில் நீங்கள் நடிக்காவிட்டால்
எப்படி?'' என்று உரிமையுடன் கேட்டோம். இதனால் ரஜினி கவுரவ
வேடத்தில் நடிக்க சம்மதித்து, 5 நாட்கள் நடித்துக்
கொடுத்தார்.
1993-ம் ஆண்டு ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கியது. ஜுன்,
ஜுலை என படப்பிடிப்பு தொடர்ந்து ஆகஸ்டு மாதத்தில் படம்
ரிலீஸ் ஆனது.
`பஞ்ச்' வசனம்
இந்தப்படத்தில் ரஜினி பேசிய `பஞ்ச்' வசனங்களுக்கு நல்ல
வரவேற்பு இருந்தது. மக்கள் இலவச மோகத்தில் இருப்பதை
சுட்டிக்காட்டும் ரஜினி, "அரசாங்கத்துக்கிட்ட இலவசமா
வேட்டி-சேலை கேட்காதீங்க, வேலை வெட்டி கேளுங்க'' என்று
சொல்லும் காட்சிகளில் ரசிகர்கள் கைதட்டினார்கள்.
அதுமாதிரி காதலுக்கும் புது விளக்கம் சொல்வார். "நீ
விரும்புகிற பெண்ணைவிட உன்னை விரும்புகிற பெண் கிடைச்சாதான்
வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.''
படத்தில் நான் டைரக்ஷனை கவனித்ததுபோல, ரஜினியின் மற்ற
நண்பர்கள் நடிப்பில் திறமை காட்டினார்கள். கதாநாயகனின்
அப்பாவாக விட்டல், கதாநாயகியின் அப்பாவாக அமர்முல்லா,
மல்யுத்த சாம்பியனாக பிரதீப் சக்தி நடித்தார்கள்.
நடிகர் அலெக்ஸ் அறிமுகமான படமும் இதுதான். மல்யுத்த வீரராக
நடித்தார். காதலனாக சஞ்சய், கதாநாயகிக்கு வாழ்வு கொடுக்கும்
இளைஞனாக ஹரிராஜ் ஆகிய புதுமுகங்கள் நடித்தனர்.
50 நாட்களில் 55 ரோல்களில் தயாரான படம் இது. பலர்
புதுமுகங்கள் என்றாலும் முன்னதாக கொடுத்த பயிற்சியின்
காரணமாக, பெரும்பாலும் `ரீடேக்' வாங்காமல் நடித்தார்கள்.
கிளைமாக்ஸ்
தேவர் பிலிம்சில் அசோசியேட்டாக பணியாற்றியிருப்பதால் அந்த
வேகம் எனக்குள்ளும் இருந்தது. படப்பிடிப்பை சாலக்குடி,
பொள்ளாச்சி, சென்னை ரெட்ஹில்ஸ் என மூன்று பிரிவாக எடுத்தோம்.
பொள்ளாச்சியில் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்க முடிவு
செய்திருந்தோம். நாங்கள் போயிருந்த நேரத்தில் மழை சீசன்
தொடங்கி விட்டதால், கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் சென்னை
வந்து ரெட்ஹில்ஸ் பகுதியில் படமாக்கினோம்.
கிளைமாக்சில் இரண்டாயிரம் துணை நடிகர் - நடிகைகளையும்,
ஏகப்பட்ட கார்களையும் வைத்து, பிரமாண்டமாக எடுத்தோம்.
என்னை இப்போது சந்திக்கும் ரசிகர்கள் கூட, அந்த கிளைமாக்ஸ்
பற்றி ஆச்சரியம் தெரிவிப்பார்கள்.
பாடல்கள்
படத்தில் இளையராஜாவின் இசையில் "என்னுள்ளே என்னுள்ளே'', "வள்ளி
வரப்போறா'', "கூக்குவென கூவும் குயிலக்கா'', "என்னென்ன கனவு
கண்டாயோ'' என அத்தனை பாடல்களும் சிறப்பாக அமைந்தன.
இதில் "கூக்கூ'' பாடலை லதா ரஜினிகாந்தும், "என்னென்ன கனவு
கண்டாயோ'' பாடலை இளையராஜாவும் பாடியிருந்தார்கள்.
புகழ்
இந்தப்படத்தில் என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் ஹரி,
மணிபாரதி இருவரும் இப்போது டைரக்டர்களாக இருக்கிறார்கள்.
ஹரி ஆக்ஷன் படங்களில் புகழ் பெற்று வருகிறார். சரவணன் என்ற
இன்னொரு உதவி இயக்குனர் இப்போது புதிய படம் இயக்கும்
முயற்சியில் இருக்கிறார். இவரும் பெரிய அளவில் வருவார்.
ரஜினிக்கும் எனக்குமான நட்பு, திரைப்படக் கல்லூரியில்
ஆரம்பித்து 34 வருடங்களாக தொடர்கிறது. `சிவாஜி'
படத்துக்குப்பின் ரஜினியின் புகழ் இன்னும் உச்சத்துக்கு
வரும்.
ரஜினி இல்லாமல் நாங்கள் இல்லை. அவரது வளர்ச்சிதான் எங்கள்
பெருமை. நண்பன் என்ற முறையில் அவரை தலையில் வைத்து தாங்க
வேண்டுமே தவிர, மடியில் உட்கார்ந்து கொண்டு தடையாக
இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.''
இவ்வாறு டைரக்டர் கே.நட்ராஜ் கூறினார்.
>>> Part 2
|