Vadivelu
- Report 1
8 August 2008
ஒரு நல்ல மனுசன எவ்வளவுதான் சோதிக்கிறதுன்னு
அளவில்லையா... இது அநியாம்ணே என்கிறார் வடிவேலு.
ஒகேனக்கல் விவகாரத்தில் அடுத்தடுத்து அந்தர் பல்டி அடித்த
ரஜினிக்கு எழுந்துள்ள கண்டனத்துக்கு எதிராகத் தான் இப்படிக்
கொதிக்கிறார் வைகைப் புயல்.
அவர் கூறியிருப்பதாவது:
தமிழ் சினிமா, தமிழ் மக்கள் நல்லாயிருக்கணும்னு எப்பவுமே
சொல்றவர் அண்ணன் ரஜினி. அவரைப் போயி இப்படியெல்லாம்
பேசுறாங்களே நம்மாளுங்க... ரொம்ப வருத்தமா இருக்குண்ணே...
யாருக்கு எப்போ வாய்ப்புக் குடுக்கணும்னு சரியா புரிஞ்சு,
தெரிஞ்சு வச்சிருக்கிறவர் ரஜினி. அவர் என்னிக்குமே நம்ம
ஆளுதாங்க. அவரை வேற மாநிலத்துக்காரரா பாக்கிறதே தப்பு.
யாரைப் பத்தி யார் பேசறதுன்னே ஒரு வரைமுறை இல்லாமப்
போயிடுச்சி... அதனாலதான் போற வாரவிங்கெல்லாம் ஒரு கல்ல
விட்டெறிஞ்சிட்டுப் போறாய்ங்க.
பெங்களூர்ல குசேலன் ஓடலன்னா அவருக்கு என்னங்க நஷ்டம்?
அவருக்கென்ன கன்னட ரைட்ஸூக்கும் சேர்த்தா காசு
கொடுத்தாய்ங்க. அவருக்கு இதுல சம்பந்தமே இல்ல என்கிறார்.
ரஜினியைப் போன்ற உயர்ந்த குணமுள்ள உத்தம மனிதனை என்
வாழ்நாளில் கண்டதில்லை. அவருக்கு கோயில் கட்டி கும்பிடணும்
என்று நெகிழ்கிறார் வைகைப் புயல் வடிவேலு.
இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தின் தோல்விக்குப் பிறகு
எந்தப் பத்திரிக்கையாளரிடமும் பேசுவதில்லை என
முடிவெடுத்திருந்த வடிவேலு, ஒரு வழியாக தன் கோபத்தை ஒதுக்கி
வைத்துவிட்டு, மீடியாக்களிடம் பேசத் தொடங்கியுள்ளார்.
குசேலன் படப்பிடிப்பு முடிந்த பிறகு, அந்தப் பட
அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது:
குசேலன் படத்துல நான் நடிக்கக் காரணமே அண்ணன் சூப்பர்
ஸ்டார் ரஜினிதான். அவரைப் பத்தி ஒரே வார்த்தையில
சொல்லணும்னா... மனிதருள் மாணிக்கம். சந்திரமுகி படத்தைவிட
இந்தப் படத்துலதான் அண்ணன் ரஜினியின் அருமைகளைத் தெரிந்து
கொண்டேன்.
நான் ஒரு நடிகனானதுக்குக் காரணம் ராஜ்கிரண். ஆனா இன்னிக்கு
இவ்வளவு பெரிய ஸ்டார் நடிகனாகி இருக்கேன்னா அதுக்கு அண்ணன்
ரஜினிதான் காரணம். நான் சாதா வடிவேலுவா இருந்தப்பவே
என்னையும் ஒரு ஆளா மதிச்சு முத்து படத்துல காமெடியனா வேஷம்
கொடுத்தார். அந்த சூப்பர் ஸ்டாரோட ஒட்டிக் கிட்டதால
எனக்கும் ஒரு அந்தஸ்து கிடைச்சதுண்ணே... அப்பலருந்துதான்
இந்த பவிசெல்லாம் (கண் கலங்குகிறார்).
நானெல்லாம் அவரு முன்னாடி ஒரு தூசுண்ணே... ஆனா அந்தப்
பெரிய மனுசன், குசேலன் பட ஷூட்டிங்கப்போ எல்லா பிரஸ்காரங்க
முன்னாடியும் தன்னோட என்னைச் சரிசமமாக்கிக்கிட்டார். நான்
25 சதவிகிதம், வடிவேலு 25 சதவிகிதம்னு சொல்லி என்னை ஒரு
நிமிஷம் ஆட வெச்சுட்டார்னே... எவ்ளோ பெரிய மனசு.
நானும் எத்தனையோ பெரிய ஸ்டார் கூட நடிச்சிருக்கேன். ஆனா,
படம் நடிச்சாலும் சரி, நடிக்கலன்னாலும் சரி, இன்னிக்கு
வரைக்கும் அவர் எங்கிட்ட காட்ற அன்பு பிரமிக்க வைக்குது.
என்னோட இத்தனை வருஷ அனுபவத்துல அவரை மாதிரி நல்ல மனிதரைப்
பார்த்ததில்லை. கோயில் கட்டிக் கும்பிட வேண்டியவர் ரஜினி
அண்ணன்...
பட்டாதாண்ணே தெரியுது என்னை மாதிரி ஆளுக்கெல்லாம். ஒரு படம்
ஊத்திக்கிட்ட உடனே, ஒழிஞ்சான்யா வடிவேலு... இனி அவனை வளர
விடக் கூடாதுன்னு ஒரு கூட்டமே கொக்கரிச்சது. ஆனா அந்த
நேரத்துல அண்ணன் கூப்பிட்டார்.
இதெல்லாம் சகஜம்ப்பா... நம்ப அடுத்த படத்துல நீதான்.
கலக்கிடணும்னார். அதுவும் துண்டு துக்கடா வேஷம் இல்ல...
அவருக்கு அடுத்தபடியா நான் வர்ற மாதிரி பாத்துக்கிட்டார்.
இதுக்கு மேல என்னண்ணே செய்யணும்...என்று நெகிழ்ச்சியுடன்
கூறுகிறார் வடிவேலு.
Vadivelu
- Report 2
"சந்திரமுகி'', "முத்து'',
"வள்ளி'' ஆகிய படங்களில் ரஜினியுடன் சேர்ந்து நடித்த
வடிவேலு கூறியதாவது:-
"என்னை வளர்த்துவிட்ட மவராசன்கள்ல ரஜினி சாரும் ஒருத்தர்.
மதுரையில் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்
கொண்டிருந்த எனக்கு ராஜ்கிரண் சார் நல்ல வாழ்க்கை அமைத்துக்
கொடுத்தார். என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி படங்களில்
எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து அறிமுகப்படுத்தினார்.
அந்த இரு படங்கள் வெளிவந்ததும் எனக்கு நிறைய பாராட்டுகள்
கிடைத்தன. பாராட்டுகள் கிடைத்த அளவுக்கு வருமானமோ,
நகைச்சுவை நடிகன் என்ற அந்தஸ்தோ கிடைக்கவில்லை. அப்படி
இருந்த என்னை ரஜினி சார்தான் கை தூக்கிவிட்டார். "வள்ளி''
படத்திற்கு என்னை அழைத்து வாய்ப்புக் கொடுத்தார்.
அவர் மட்டும் சான்ஸ் கொடுக்கவில்லை என்றால் என் வளர்ச்சி
கேள்விக்குறியாகி இருக்கும்.
"வள்ளி''யில் என்னை அவர் நடிக்க வைத்த பிறகுதான்
திரையுலகின் பார்வை என் மீது திரும்பியது. நிறைய படங்களும்
என்னைத் தேடி வர ஆரம்பித்தன. அதற்காக ரஜினி சாருக்கு
அன்றும் இன்றும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
மதுரையில் இருந்தபோது தீவிர சினிமா பைத்தியமாக இருந்தேன்.
ஒரு படத்தைக்கூட மிஸ் பண்ணமாட்டேன். பகல் முழுக்க கண்ணாடி
கடையில் வேலை பார்த்துவிட்டு, ராத்திரியானால்
சினிமாவுக்குப் போய்விடுவேன். அதிலும் ரஜினி சார் படம்
என்றால் முதல் நாள், முதல் காட்சியே பார்த்துவிட்டுத்தான்
மறுவேலை.
அந்தளவுக்கு ரஜினி சார் மீது மதிப்பும், மரியாதையும்
வைத்திருந்தேன். திரையில் பார்த்து வியந்த ரஜினி சாருடன்
சேர்ந்து நடிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று கனவிலும்
நான் நினைத்துப் பார்த்தது இல்லை.
அதனாலோ என்னவோ வள்ளி படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது
என்னால் நம்பவே முடியவில்லை. ஷூட்டிங் ஆரம்பித்து, கேமரா
முன் நின்றபோதுதான் எனக்கு நம்பிக்கையே வந்தது.
முதல் நாள் ரஜினி சாரை பார்த்தபோது நான் அடைந்த
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
சினிமாவில் ஜாலியாக நடிக்கும் அவர் நேரில் ரொம்ப சீரியசாக
இருந்தார். அதனால் அவர் நம்மிடம் பேசுவாரோ என்னவோ என்ற
அச்சத்துடன் கொஞ்சம் தள்ளியே இருந்தேன். அதைக் கவனித்த
ரஜினி சார் என்னைக் கூப்பிட்டு அவர் அருகிலேயே உட்கார
வைத்துக்கொண்டார்.
அதுமட்டுமல்ல, என்னைப் பற்றியும் என் குடும்பப் பின்னணி
பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார். நான் நடித்த படங்களை
எல்லாம் பார்த்ததாகவும், என் நடிப்பு வித்தியாசமாக
இருப்பதாகவும் பாராட்டினார். அதோடு `சினிமாவில் நீடித்து
நிற்க வேண்டும் என்றால் நம்முடைய குணம் நல்ல மாதிரி இருக்க
வேண்டும். மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்'
என்றும் அறிவுரை வழங்கினார்.
இந்த நிமிஷம் வரைக்கும் சினிமாவில் எதையும் சாதித்ததாக நான்
நினைக்கவில்லை. ரஜினி சாரின் அன்பைப் பெற்றது மட்டுமே என்
சாதனை!''
இவ்வாறு வடிவேலு கூறினார்.
|