Roja
"வீரா'', "உழைப்பாளி''
ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ரோஜா
கூறியதாவது:-
"என்னுடைய கேரியரில் மறக்க முடியாத மனிதர்கள் பலர்
இருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் யார் என்றால்
ரஜினி சாரைத்தான் சொல்வேன். அதுமட்டுமல்ல. என் வாழ்க்கையில்
நான் வியந்த ஒரே மனிதரும் அவர்தான்.
எப்படி என்று சொல்கிறேன்.
நடிப்பு என்பது எல்லோருக்கும் வாய்த்து விடாது. என்னைப்
பொறுத்தவரை அது ஒரு வரம். நடிப்பதற்காக மேக்கப்
போட்டுக்கொண்டு செட்டுக்கு வந்துவிட்டால் சொந்த சோகங்களை
எல்லாம் மறந்து விடவேண்டும். வீட்டை நினைத்துக்
கொண்டிருந்தால் நடிப்பில் கோட்டை விட்டு விடுவோம்.
அதே சமயம் எல்லோராலும் இப்படி டெடிகேஷனாக இருந்துவிட
முடியாது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் என்னால் கூட
முடியாது. நானும் சராசரியான மனுஷிதானே?
செட்டுக்குள் வரும்போது சில சமயம் சொந்தப் பிரச்சினைகள்
மண்டையைக் குடைந்து கொண்டே இருக்கும். அதனால் இன்வால்வ் ஆகி
நடிக்க முடியாது. அப்படியான சந்தர்ப்பங்களில் ரீடேக் வாங்க
வேண்டியதாகி விடும். என்னால் மனதை ஒருமுகப்படுத்தவே
முடியாது.
இப்படி இருந்த நான், இப்போது எப்படி இருக்கிறேன் தெரியுமா?
என் சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சோகம், கஷ்டம்
இருந்தாலும் செட்டில் கரெக்ட்டாக இருக்கிறேன். என்
பிரச்சினைகளை என் முகத்தில் கண்டுபிடிக்கவே முடியாது. இந்த
பக்குவத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது ரஜினி சார்தான்.
அவர் படத்தில் படு ஜாலியாக நடிப்பார். ஆனால் நிஜ
வாழ்க்கையில் படு சீரியசான மனிதர். நடித்து முடித்து விட்டு
சேரில் வந்து உட்கார்ந்து, சிகரெட்டை பற்ற வைப்பார். கையில்
சிகரெட் புகைந்து கொண்டிருக்கும். அவரது சிந்தனைகள் எங்கோ
இருக்கும். படு சீரியசாக ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பார்.
அவர் அப்படி உட்கார்ந்திருக்கும்போது எதிரில் எது
நடந்தாலும் அவருக்குத் தெரியாது. தவத்தில் இருப்பது போல்
இருப்பார்.
அதே சமயம், "ஷாட் ரெடி'' என்று குரல் கேட்டதும், மான் போல
துள்ளிக் குதித்து எழுந்து, படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.''
இவ்வாறு ரோஜா கூறினார்.
|