Director
Durai
சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்தை 4 படங்களில் இயக்கியவர் துரை.
ரஜினிகாந்த், தமிழ்ப்பட உலகில் முன்னேறிக் கொண்டிருந்த
காலக்கட்டம் அது. அதே சமயத்தில், பட அதிபர்கள் விரும்பிய
டைரக்டராக துரை விளங்கினார். குறைந்த செலவில், குறித்த
காலத்தில் படத்தை முடித்துக் கொடுப்பவர் என்று பெயர் பெற்று
இருந்தார்.
"துரையை வைத்து படம் எடுத்தால், குறைந்தது 50 நாட்களாவது
படம் ஓடிவிடும். யாருக்கும் நஷ்டம் வராது'' என்று
விநியோகஸ்தர்கள் கூறினார்கள்.
ரஜினி நடிக்கும் படத்தை இயக்க வேண்டும் என்று துரை
விரும்பினார். அவர் ஆசை நிறைவேறியது. அதுபற்றி துரை
கூறியதாவது:-
ஒரு படத்தில் 3 கதைகள்
"கன்னடப் பட உலகின் பிரபல இயக்குனர் புட்டண்ணா கனகல், ஒரே
படத்தில் 3 கதை சொல்லியிருந்தார். இந்த 3 கதைகளில் ஒரு
கதையில் வரும் முக்கியமான கேரக்டரை ரஜினி ஏற்று
நடித்திருந்தார். அந்த `கேரக்டர்' மூலம் அவர் `ஓஹோ'வென
பேசப்பட்ட நேரம் அது.
அதோடு ராசியான டைரக்டர் கே.பாலசந்தரால் தமிழில்
அறிமுகப்படுத்தப்பட்டதால் ரஜினி மேலும் பிரபலமானார்.
நான் ஏற்கனவே கன்னடப் படங்களை இயக்கிய நேரத்தில், கன்னடம்
பேசக் கற்றுக் கொண்டிருந்தேன். அதனால் ரஜினியிடம்
கன்னடத்திலேயே பேசுவேன். என் மனைவியும் பெங்களூரைச்
சேர்ந்தவர் என்பதால் கன்னடம் சரளமாக வரும்.
அப்போதெல்லாம் ரஜினி எங்கள் பெங்களூர் வீட்டுக்கு அடிக்கடி
வருவார். என் கூடப்பிறந்த சகோதரர் மாதிரி பாசம் காட்டுவார்.
வேறு டைரக்டர்களின் செட்டில் எப்போதாவது பார்க்க நேர்ந்தால்
உடனே எழுந்து நின்று, கை கொடுப்பார். இப்போது அதிரடிப்
படங்கள் வரை பிரமாதமாகச் செய்து, புகழின் உச்சிக்கு சென்று
விட்டார்.
அப்படிப்பட்டவர், என்னுடைய "சதுரங்கம்'' படத்தில், ஒரு
அப்பாவி கேரக்டரை செய்தார். அற்புதமாக நடித்தார்.
"பாவத்தின் சம்பளம்'' படத்தில் கதையே ரஜினியிடம்
இருந்துதான் ஆரம்பமாகும். கதையில் எழுத்தாளராக வருவார்.
அவர் நினைத்துப் பார்க்கிற `பிளாஷ்பேக்'தான் கதை என்பதால்,
நடிக்க நிறைய வாய்ப்புள்ள கேரக்டர்.
ஆயிரம் ஜென்மங்கள்
பத்திரிகையாளர் மதிஒளி சண்முகம், மலையாளத்தில் தயாரித்த
படம் "யக்ஷகானம்'' (பேயின் பாட்டு). இதில் ஷீலா
கதாநாயகியாக நடித்து, அவரே டைரக்ட் செய்தார்.
"ஆயிரம் ஜென்மங்கள்'' படப்பிடிப்பு ஆழியார் அணைப்பகுதியில்
நடந்தது.
அங்கு மூன்று அறைகள்தான் இருந்தன. ஒரு அறை, கதாநாயகி
லதாவுக்கு. இன்னொரு அறையில், விஜயகுமார் தங்கினார்.
மூன்றாவது அறை டைரக்டரான எனக்கும், ரஜினிக்கும்
ஒதுக்கப்பட்டது.
அந்த அறையில் ஒரு கட்டில்தான். மற்றொருவருக்காக தரையில் `பெட்'
விரிக்கப்பட்டிருந்தது.
"நீங்கள் கட்டிலில் படுத்துக்கொள்ளுங்கள். நான் தரையில்
உள்ள படுக்கையில் படுத்துக் கொள்கிறேன்'' என்று கூறினேன்.
அதை ரஜினி ஏற்கவில்லை. "நீங்க கட்டிலில் படுங்க. நான் கீழே
படுத்துக்கிறேன்'' என்று கூறி, அப்படியே படுத்துக்கொண்டார்.
அவருடைய பெருந்தன்மை என்னை நெகிழச் செய்துவிட்டது.
அப்பாவி வேடம்
சீரியசான கேரக்டரில் அறிமுகமாகி, ஸ்டைல் வில்லனாக
நடித்துக்கொண்டிருந்த ரஜினி, "சதுரங்கம்'' படத்தில்,
பெண்களைப் பார்த்து பயப்படும் அப்பாவியாக நடித்தார். அவர்
நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ரஜினி, தொழில் மீது பக்தி மிக்கவர். குறிப்பிட்ட
நேரத்துக்கு வந்து விடுவார். கடும் உழைப்பாளி. படப்பிடிப்பு
நேரங்களில், தான் அடுத்து நடிக்க வேண்டிய சீன் பற்றி
தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பார்.
அவர் என்னை எங்கு பார்த்தாலும், அன்பாக இரண்டு
வார்த்தைகளாவது பேசாமல் போகமாட்டார்.
முன்வைத்த காலை பின்வைக்காமல் வெற்றி நடை போடும் ரஜினி,
பல்லாண்டு வாழவேண்டும்.''
என் டைரக்ஷனில் ரஜினி நடித்த மற்றொரு படம் "ரகுபதி ராகவ
ராஜாராம்.'' என்னிடம் பல படங்களுக்கு உதவி இயக்குனராகப்
பணியாற்றிய எம்.ஏ.காஜா, தன் நண்பர் ராம.நாராயணனுடன் இணைந்து
சொன்ன கதைதான் இது. படத்தில் "கதை: ராம்-ரஹீம்'' என்று
கார்டு போடப்பட்டது. ராம் என்பது ராம.நாராயணனையும், ரஹீம்
என்பது காஜாவையும் குறிக்கும்.
பிற்காலத்தில் இவர்கள் இருவரும் டைரக்டர்களாக புகழ்
பெற்றார்கள். ராம.நாராயணன், பல மொழிகளில் நூற்றுக்கும்
மேற்பட்ட படங்களை டைரக்ட் செய்து சாதனை புரிந்தார்.
அண்ணன் தம்பிகள் மூவரை
சுற்றிப் பின்னப்பட்ட கதை. கதாநாயகியின் முறை
மாப்பிள்ளையான வீரய்யன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தார்.
எஸ்டேட்டில் சைக்கிள் கடை வைத்திருந்த வீரய்யன், யார்
வம்புக்கும் போகமாட்டான்; வந்த வம்பையும் விடமாட்டான்!
முறைப்பெண்ணை காதலிக்கும் வீரய்யன், அவள் வேறு ஒருவனை
காதலிக்கிறாள் என்பதை அறிந்து, ஒதுங்கிக் கொள்வான்.
இந்த நிலையில், முறைப்பெண்ணை ஒருவன் கெடுத்துவிட்டான்
என்பதை அறியும்போது துடித்துப்போவான். "உன்னைக் கெடுத்தவனை,
உயிருடனோ, அல்லது பிணமாகவோ உன் காலடியில் போடும்வரை
ஓயமாட்டேன்'' என்று சபதம் செய்துவிட்டு வெளியேறுவான்.
சொன்னது போலவே, வில்லனை கொன்று, பிணத்தை முறைப்பெண் முன்
கொண்டு வந்து போட்டுவிட்டு போலீசில் சரண் அடைவான்.
இன்றைக்கு ரஜினியின் உயரமே தனி. ஆனால், அன்று பழகிய அதே
ரஜினியைத்தான் இப்போதும் பார்க்கிறேன். அதே எளிமை; அதே
பண்பு. இறைவன் அவருக்கு நீடிய ஆயுள் கொடுத்து, இன்னும் பல
வெற்றிப்படங்களைத் தரவேண்டும்.''
இவ்வாறு துரை கூறினார்.
|