Peter
Selvakumar -
Writer & Producer
அம்மன்
கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், பொன்மனச் செல்வன்
ஆகிய படங்களைத் தயாரித்த, 'தாயம் ஒண்ணு' படத்தைத் தயாரித்து
இயக்கிய பீட்டர் செல்வகுமார் ஆரம்பத்தில் கதாசிரியராக
இருந்தவர். 'மூன்று முகம்' படத்தின் கதாசிரியர் அவரே.
பீட்டர் செல்வகுமார் ரஜினியைச் சற்று வித்தியாசமாக நமக்கு
அறிமுகம் செய்கிறார்.
ரஜினியை விட நான் வயதில் மூத்தவன் என்றாலும் 'ரஜினி சார்'
என்பேன். அதற்கு அவர், "ரஜினி என்று சொல்லுங்கள் போதும். ஏன்
'சார்' போடுகிறீர்கள்?" என்று தன் சங்கடத்தைத் தெரிவித்தார்.
"சார் போட்டு அழைக்குமளவிற்கு தகுதியுடையவர் நீங்கள்" என்றேன்.
இப்போதும் நான் அவரை அப்படித்தான் அழைக்கிறேன்.
''ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படம் 'பைரவி'. அதில் நான்
வசன உதவியாளராக இருந்தேன். வேகமாக வசனம் பேசும் ரஜினிக்கு
வசனம் சொல்லிக் கொடுப்பது என் வேலைகளில் ஒன்று.
'Time is Money' என்பதைப் போல் நேரத்தின் மதிப்பை உணர்ந்தவர்
ரஜினி. அந்த உணர்வு ரஜினியிடம் இன்றைக்கும் உண்டு.
அப்போதே ரஜினியிடம் உயர்வு, தாழ்வு மனப்பான்மையெல்லாம்
கிடையாது. தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் அவர்.
ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவே பல படங்களில் பிஸியாக நடித்துக்
கொண்டிருந்த நேரம் அது. 'பைரவி'யில் ரஜினிக்கு எதிரான வில்லன்
வேடம் அவருக்கு. ரஜினிக்கு அது சங்கடம்தான். தன்னைவிட
சீனியரான ஸ்ரீகாந்துக்கு மதிப்பளிக்க வேண்டி,
படப்பிடிப்புக்கு வந்து அவர் முதலில் வேண்டிக் கொண்டது. "டைட்டிலில்
ஸ்ரீகாந்த் சார் பெயர் முதலில் வரட்டும். என் பெயர் அடுத்து
வந்தால் போதும்" என்பதைத்தான். ரஜினியின் இந்த சினிமா தைரியம்
என்னை மிகவும் கவர்ந்தது. அவர் மீது அதிக மதிப்பும், அன்பும்
கொள்ளச் செய்தது.
'பைரவி' முதல் கட்ட படப்பிடிப்பு கிளைமாக்ஸில் ஆரம்பமானது.
கையில் சவுக்கை எடுத்துக் கொண்டு ரஜினி ஸ்ரீகாந்தை விரட்டுவது
மாதிரி காட்சி. அதற்காக கண்ணாடி முன் நின்று சவுக்கை
கழுத்தில், இடுப்பில்..... இப்படிப் பலவிதமாக சுற்றிக் கொண்டு
போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் ரஜினி.
அதையெல்லாம் பார்த்து 'ரஜினி என்ன இப்படிக் கிறுக்குத்தனமாக
செய்கிறார்' என்று நான் யோசித்ததுண்டு. ஆனால் அந்தப்
படப்பிடிப்பில் அவர் ரசிக்கும்படியாகச் செய்தபோதுதான் என்
தவறை உணர்ந்தேன்.
முதலாளி ஸ்ரீகாந்திடம் விசுவாசமாக இருக்கிறார் ரஜினி. ஆனால்
அதே முதலாளி தன் தங்கையைக் கற்பழித்துக் கொன்றவன் என்று
அறியும் போது ஆவேசத்துடன், "நீ சுட்டு விரலைக் காட்டினப்ப
நான் வேட்டை நாய் மாதிரி பாய்ஞ்சேன்" என்று சொல்வார்.
நான் ரஜினியிடம் அந்த வசனங்களைச் சொல்லி, சொடக்கு போட்டுக்
காண்பித்த போது, "இப்படிச் செய்தால் சிவாஜி சார் மாதிரி
இருக்குமே" என்றார். நான் அதற்கு "உங்களது வசனம் பேசும்
வேகத்தில் சிவாஜி சார் சாயல் வராது" என்றேன். அதை ரஜினி
ஒத்துக் கொண்டார்.
படத்தில் ரஜினிக்கு ஒரு கால் இருக்காது. அதற்காக கட்டையைக்
கட்டிக் கொள்வார். அப்படிக் காலில் ஒன்றைக் கட்டிக் கொண்டு
கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில், காரமடை (கோவை அருகிலுள்ளது)
அருகில் பாறைகள் நிறைந்த பகுதியில் சிரமம் பாராமல் நடித்தார்.
அடுத்து 'தர்மயுத்தம்'. நான் கதை,
வசனம் எழுதிய முதல் படம். ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்ட
நேரம் அது. ஆனால் அவரால் படப்பிடிப்பில் எந்தப்
பிரச்னையுமில்லை.
படத்தில் பௌர்ணமியன்று ரஜினியைக் கட்டிப் போடுவார்கள்.
அப்போது அவர் அலறுவார். அது போல் ஒரு காட்சி அடையாறு ஆலமரம்
பகுதியில் படமாக்கப்பட வேண்டும். எல்லோரும் தயாராக இருந்தபோது
ரஜினி வரவில்லை. ரஜினி பிரச்னையில் பாதிக்கப்பட்ட நேரம் அது.
படப்பிடிப்பு தொடங்கிய வீடு திருமதி. ரெஜினா வின்சென்ட்
என்பவருக்குச் சொந்தமானது. ரஜினி அவர்மீது மிகுந்த அன்பும்,
பாசமும் கொண்டிருந்தார். அவரைத் தன் தாயாகவே நேசித்தார்.
ரஜினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணமானபின், முதலில்
கலந்து கொண்ட படப்பிடிப்பு 'தர்மயுத்தம்'. அதற்கு முன் 'நமக்கு
இது முதல் படம். அவர் குணமாகி வருவாரோ, மாட்டாரோ' என்று நான்
மட்டுமின்றி, தயாரிப்பாளர் ஜாக்பாட் சீனிவாசனும் சஞ்சலத்தில்
இருந்தார்.
ரஜினி படப்பிடிப்புக்கு வந்தபின் எதுவும் நடக்கவில்லை. ஆனால்
எல்லோருக்கும் உதறல் இருந்தது. என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ
என்று கற்பனையில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.
ரஜினியிடம் 'ரீ டேக்'கிற்கு கூட தயங்கினார்கள். ஒரு சமயம்
டைரக்டர் ஆர்.சி.சக்திக்கு இன்னொரு டேக் தேவைப்பட்டது. அவர்
ரஜினியிடம் கேட்கத் தயங்கினார். என்னைத் தூண்டிவிட்டார். நான்
ரஜினியிடம் மெதுவாகச் சென்று வேறு விஷயங்களைப் பற்றி பேச்சுக்
கொடுத்து கடைசியில் "ஒண்ணுமில்ல. இன்னொரு டேக் எடுத்தா
நல்லதுன்னு படுது" என்றேன். "அதனாலென்ன நடிக்கிறேனே" என்றார்.
ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்த அளவு ரஜினியிடம் உரிமையோடு வேலை
வாங்க முடியவில்லை. சண்டைக் காட்சிகளை இன்னும் சிறப்பாக
எடுத்திருக்கலாம் என்று அபிப்ராயப்பட்டோம். இதே எண்ணம்
ரஜினிக்கும் இருந்தது. படம் முடிந்தபின், "நான் நல்ல நிலையில்
இருந்திருந்தால் இன்னும் சரியாகச் செய்திருப்பேனோ?" என்று
வருந்தினார். இந்த வருத்தம் ரஜினிக்கு எப்போதும் உண்டு.
ஆனாலும் அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது எல்லோருக்குமே
மகிழ்ச்சி.
மகேந்திரன்
இயக்கிய ஜானியில் ஒரு கதாசிரியர் என்ற முறையில் ஸ்டோரி
டிஸ்கஷனில் மட்டுமின்றி, படப்பிடிப்பிலும் கலந்து கொள்வேன்.
'ஜானி' படத்திற்காக ஊட்டியில் ரஜினி ஓடிய ஓட்டம் இருக்கிறதே,
எத்தனை கிலோ மீட்டர் தூரம் என்று கணக்கு பார்க்காமல்
ஓடியிருக்கிறார். அதற்கு ஒலிம்பிக்கில் ஓடியிருந்தாலும் ரஜினி
முதல் பரிசு வாங்கியிருப்பார்.
ஜானி போலீஸ?க்கு பயந்து ஓடிய பின், பார்பர் வித்யாசாகர் (இதுவும்
ரஜினி) ஸ்ரீதேவியிடம் வருவார். ஜானியைப் போல் நடித்து
கடைசியில் 'நான் வித்யாசாகர்' என்று அறிமுகம் செய்து கொள்வார்.
அந்தக் காட்சி முடிந்தபின் ஸ்ரீதேவியின் நடிப்பைப் பற்றி
சுமார் அரை மணி நேரம் புகழ்ந்து பேசி மகிழ்ந்தார். "என்ன
நடிப்பு..... என்ன நடிப்பு...." என்று
ஸ்ரீதேவியை அப்படிப் பாராட்டினார் என்றால், படத்திற்காக
டப்பிங் பேசுகையில், வித்யாசாகர் வேடத்தைப் பார்த்துவிட்டு,
"அட என்னம்மா நடிக்கிறார் பாருங்க' என்று தன் கேரக்டரையே அவர்
ரசித்தபோது, அதைப் பார்த்து நான் ரசித்தேன்.
'ஜானி' படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது சில தினங்கள்
தொடர்ந்து நள்ளிரவு தாண்டியும் படப்பிடிப்பு நடக்கும்.
மறுநாள் காலையில் 5 மணிக்கு டப்பிங் வைத்துக் கொள்வார். 7
மணிக்கு அல்லது பாலச்சந்தர் எப்போது அழைத்தாலும் 'தில்லு
முல்லு' படப்பிடிப்பிற்குச் செல்வார். அங்கு சென்று வந்தபின்
மாலையில் மீண்டும் 'ஜானி' படப்பிடிப்பு.
இதற்காக ரஜினியைப் புதுப்பேட்டை கார்டனில் இருந்த வீட்டிற்கு
நள்ளிரவில் கொண்டு விடுவது, திரும்ப அதிகாலையில் அழைப்பது
எல்லாம் வீட்டுக்காரர்களுக்குச் சிரமமாக இருக்குமென்று,
தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. ஒரு ஏற்பாடு செய்தார்.
'ஜானி' படம் முடியும் வரை பாம்குரோவ் ஓட்டலில் ரஜினிக்கு ஒரு
அறை ஏற்பாடு செய்யப்பட்டது. நள்ளிரவு 2 அல்லது 3 மணிக்குத்
திரும்பும் ரஜினி உடைகளை, ஷ?வைக் கூடக் கழற்றாமல் அப்படியே
காலை விரித்துக் கொண்டு அசந்து தூங்குவார். தன்னை எழுப்ப
வசதியாக இருக்க வேண்டுமென்பதற்காக கதவைத் திறந்தே
வைத்திருப்பார். நான் 4.45க்கு சென்று நிற்பேன். ஒரு நிமிடம்
கூட அதிகமாகாது. நான் எழுப்பாமலே எழுந்து நிற்பார் ரஜினி. அது
எப்படி என்று ஆச்சர்யப்படுவேன். எழுந்ததும் அவரது உடைகளைக்
கழற்ற நானும் உதவுவேன். "என்ன பீட்டர் சார், உங்களுக்கேன்
இந்த வேலை?" என்று சங்கடப்படுவார். "உங்க சகோதரனா இருந்து
நான் செய்யக் கூடாதா?" என்று கேட்டதும் நெகிழ்ந்து போவார்.
"ஒரு பதினைந்து நிமிடம் ஷேவிங், குளியல், கடவுளைத்
தியானித்தல், இது முடிந்து 5 மணிக்கெல்லாம் ரெடியாகி விடுவேன்"
என்பார். சொன்னது போலவே ஷேவிங், குளியல், ராகவேந்திரரை
வணங்கிவிட்டு தயாராக நிற்பார். அப்படி ஒரு அசாத்திய வேகம்
மட்டுமின்றி, கடுமையான உழைப்பும் அவருக்கே உரித்தானது."
'மூன்று
முகம்' படத்தில் ரஜினிக்கும் மூன்று வேடம். நான் அந்தப்
படத்தில் கதை, வசனம் எழுதினேன். நான் எழுதியதையெல்லாம் ரஜினி
தன் அபார திறமையால் மெருகேற்றி நடித்தார்.
அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி வேடத்திற்காக
மேக்கப்பில் தானே சில வித்தியாசங்களைச் செய்து கொண்டார். விக்,
மீசை இவற்றில் மட்டுமின்றி, முகத்தில் மேலும் முரட்டுத்தனம்
வேண்டுமென்பதற்காக கீழ்த் தாடையை பெரிதாக்கிக் கொள்ள பொய்யான
தாடையொன்றைப் பொருத்திக் கொண்டு நடித்தார். தாடையில் அது
உறுத்தலாக இருக்குமென்றாலும், கேரக்டரின் சிறப்புக்காக ரஜினி
அதைப் பொறுத்துக் கொண்டார்.
படத்தில் அலெக்ஸ்
பாண்டியனைச் சாராய முதலாளி ஆளவந்தார் (செந்தாமரை) காவல்
நிலையத்தில் வந்து மிரட்டுவார். அதற்கு அலெக்ஸ் மசிய மாட்டார்.
மாறாக ஆளவந்தாரையே சிறையில் தள்ளுவார். இந்தக் காட்சியில்
ரஜினிக்கும் செந்தாமரைக்கும் சற்று நீண்ட வாக்குவாதம்
இருக்கும். அதில் ரஜினிக்குச் சற்று மாறுபட்ட கருத்து
இருந்தது. "பீட்டர் சார்! போலீஸ்காரன் எதுக்கு சாராய
முதலாளிகிட்ட விவாதம் பண்ணனும். பிடிச்சு உள்ளே தள்ள
வேண்டியதுதானே?" என்று கேட்டார்.
நான் அதற்கு, "சாராய முதலாளி சாதாரண ஆளல்ல. பெரிய பின்னணி
உடையவன். அவ்வளவு எளிதில் யாரும் அவனை உள்ளே தள்ள முடியாது
என்று இருந்தால்தான் கதையில் சாராம்சம் வலுவாக இருக்கும்"
என்றதை ரஜினி ஏற்றுக் கொண்டார். ரஜினியின் விருப்பப்படி
அந்தக் காட்சியில் சில திருத்தங்களையும் செய்தேன்.
படமாக்கி முடித்தபின் ரஜினி என்னிடம் தனியாக "நான் உங்கள்
வேலையில் குறுக்கிடுகிறேனா?" என்று கேட்டார்.
"நீங்கள் செய்வது தவறே அல்ல. ஏதோ வந்தோம் நடித்தோம்
என்றில்லாமல் உங்கள் கேரக்டரில் ஈடுபாடு இருப்பதால்தான்
உங்களுக்கு சந்தேகங்களும், யோசனைகளும் எழுகிறது. உங்கள்
யோசனைகள் நியாயமானதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம்.
இல்லையென்றால் உங்களுக்கு விளக்கம் சொல்லி ஒத்துக் கொள்ளச்
செய்கிறோம்" என்றபோது ரஜினி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
'மூன்று முகம்' படத்தில் ரௌடியாக மற்றொரு கேரக்டரில் ரஜினி
வருவார். அந்த ரஜினியை கராத்தே தெரிந்த ராதிகா அடித்து கீழே
தள்ளுவதாக ஒரு காட்சி இருந்தது. யூனிட்டிலிருந்து சிலர்
ரஜினியிடம் "உங்களை ராதிகா அடித்துத் தள்ளுவதாக இருந்தால்
உங்கள் இமேஜ் பாதிக்கும். ரசிகர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்"
என்று கூறியிருக்கிறார்கள். அப்படி நடித்தால் தவறாகுமோ என்று
ரஜினியும் யோசித்திருக்கிறார்.
வாகினியில் படப்பிடிப்பு நடந்தபோது, ரஜினி என்னை அழைப்பதாகச்
சொன்னார்கள். மேக்கப் ரூமில் இருந்த ரஜினியைப் பார்க்கச்
சென்றேன். படத்தில் ராதிகா தன்னை அடிப்பது பற்றிய சந்தேகம்
கேட்டார்.
படத்தில் இரண்டு கேரக்டர்களில் ஒன்று ஹீரோ இமேஜ்
உடையது. மற்றொன்று செந்தாமரைக்கு உதவும் ரௌடியாக;
வில்லத்தனமான வேடம். வில்லன் அடிபட்டால்தான் கேரக்டருக்கு
பலம். அதனால் கராத்தே தெரிந்த ஒரு பெண்ணிடம் அடிபடுவதாக
நடித்தால் தவறாகாது என்று காட்சியின் தன்மையைப் பற்றிச்
சொன்னபோது, ரஜினி சரிதான் என்று ஒத்துக் கொண்டார்.
ரௌடி வேடத்தில் ரஜினி ஜாலியான வசனங்கள் சிலவற்றைப் பேசுவார்.
சாராயத்தைக் கையில் ஊற்றிக் குடிப்பார். அதெல்லாம்
படப்பிடிப்பின் போது ரஜினியே சேர்த்துக் கொண்டது. அதற்கு
நல்ல வரவேற்பும் இருந்தது.
'சிவப்பு சூரியன்' படத்திற்கு கதாசிரியராக இருந்தபோது
படப்பிடிப்பு நாட்களில் யூனிட்டிலுள்ளவர்களுடன் மதிய உணவில்
அமர்ந்து கொள்வேன். சில சமயம் ரஜினி அழைப்பு விடுப்பார். "நம்மை
மட்டும் அழைக்கிறாரே மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?" என்று.
நான் சங்கடப்படுவேன். ஆனால் யூனிட்டிலுள்ளவர்கள் "போங்க சார்.
ரஜினி கூப்பிடும்போது ஏன் தயங்கறீங்க?" என்று அனுப்பி
வைப்பார்கள்.
"இன்றைக்கு வீட்டிலிருந்து தலைக்கறி வந்திருக்கு. நீங்களும்
சாப்பிடுங்க" என்று ரஜினி சாப்பிட வைப்பார். "லதா
அனுப்பியிருக்காங்க" என்று தன் மனைவியைப் பற்றி பெருமையோடு
சொல்வார்.
"அவங்க (லதா) பிராமணராச்சே. எப்படிச் செய்றாங்க?" என்று
ரஜினியிடம் கேட்டபோது, "எனக்காக செய்றாங்க" என்று ரஜினி
சொல்வதைக் கேட்டு, அவரது மனைவியின் செயலை நினைத்து
வியப்படைவேன். பின்னர் ரஜினி வீட்டில் அசைவம் சாப்பிடுவதையே
நிறுத்திக் கொண்டார். "லதாவுக்கு அசைவம் சமைப்பதிலிருந்து
விடுதலை கொடுத்துவிட்டேன்" என்றார் ரஜினி. அந்தளவு மனைவியின்
உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில் அவருக்கு நிகர் அவரே.
ரஜினி தன் மனைவியைப் பற்றிப் பிறரிடம் பேசும்போது 'அவ, இவ'
என்று குறிப்பிடுவதே இல்லை. 'அவங்க, இவங்க' என்று
மரியாதையாகத் தான் சொல்வார்.
ஒருநாள்
திருமண நாள் என்று விருந்துக்கு அழைத்தார். குறிப்பிட்ட சில
பேர்களில் நானும் ஒருவனாக அவர் வீட்டிற்கு அழைக்கப்பட்டதில்
பெருமை கொண்டேன். விருந்து முடிந்து முக்தா பிலிம்ஸ் காரில்
சென்று விடலாமென்று கிளம்பினேன். வாசல் வரை வந்த ரஜினி
என்னிடம் ஏதோ சொல்ல வந்தார். "சரி நாளை பேசிக் கொள்ளலாம்"
என்று என்னை அனுப்பி வைத்தார்.
மறுநாள் படப்பிடிப்பில் ரஜினியைச் சந்தித்தபோது, "நேத்து
உங்களோட டிரிங்க்ஸ் சாப்பிடலாம்னு நினைச்சேன். ஆனால் நேத்து
எல்லா ஏற்பாடும் லதாவோடது" என்றார். "நல்லதுதான் நடந்திருக்கு"
என்று பாராட்டினேன்.
நான் தயாரிப்பாளராக மாறியபின் ரஜினியைச் சந்திக்கும்
சந்தர்ப்பங்கள் குறைந்துவிட்டன. அவருடன் நெருக்கமான நட்பு
இருக்க வேண்டுமென்பதற்காக கதாசிரியராகவே இருந்திருக்கக்
கூடாதா என்று ஏங்குகிறேன்.
எனது 'அம்மன் கோவில் கிழக்காலே' படத்தின் வெள்ளி விழாவில்
கலந்து கொண்டு ரஜினி பரிசுகள் வழங்கியதும், 'நினைவே ஒரு
சங்கீதம்' கேசட் வெளியிட்டதும் ரஜினி என் மீது கொண்டுள்ள
பாசத்தின் பிரதிபலிப்புகளில் ஒன்றாகும்."
'பணம் படைத்தவன்' எம்.ஜி.ஆர். நடித்து 1965-ல் வெளிவந்த படம்.
இதில் அவருக்கு ஜோடி கே.ஆர்.விஜயா. இதன் படப்பிடிப்பு
கல்கத்தாவில் சில நாட்கள் நடைபெற்றபோது எம்.ஜி.ஆருடன் கே.ஆர்.
விஜயாவும் கலந்து கொண்டு நடித்தார்.
எம்.ஜி.ஆருக்கு கல்கத்தாவிலுள்ள தமிழர்கள் வரவேற்பு கூட்டம்
ஒன்றை நடத்தினார்கள். அதற்கு நன்றி தெரிவித்து பேசிய
எம்.ஜி.ஆர்., கே.ஆர்.விஜயாவையும் கூட்டத்தினரிடம் அறிமுகம்
செய்து வைத்து 'சிறந்த நடிப்பாற்றல் உள்ள நடிகை' என்ற
ரீதியில் உயர்வாகச் சொன்னார். அப்படி விஜயாவை எம்.ஜி.ஆர்.
அறிமுகம் செய்து வைத்திருக்க வேண்டியதில்லைதான். காரணம் அது
எம்.ஜி.ஆருக்கான கூட்டம். கே.ஆர்.விஜயா அப்போது முன்னுக்கு
வந்து கொண்டிருக்கும் ஒரு புதுமுக நாயகி. ஆனாலும் தான்
சார்ந்த படப்பிடிப்புக் குழுவிலுள்ளவருக்கும் மரியாதை
கிடைக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் பண்பு கே.ஆர்.விஜயாவை
நெகிழச் செய்துவிட்டது. இந்த நிகழ்ச்சி பற்றி அவர்
குறைந்தபட்சம் பத்து பதினைந்து முறையாவது தனது பத்திரிகைப்
பேட்டிகளில் குறிப்பிட்டிருப்பார். தன் சினிமா அனுபவங்களை
அவர் வெளிப்படுத்திய போதெல்லாம் இந்தச் சம்பவத்தைச் சொல்லாமல்
இருந்ததில்லை.
இதே போன்ற பண்பு ரஜினிகாந்திற்கும் உண்டு. அதற்கு உதாரணமாக
மதுரையில் நடைபெற்ற 'மூன்று முகம்' படத்தின் வெற்றி விழாவைப்
பற்றிச் சொல்லலாம். அந்த விழாவில் பேசியவர்களெல்லாம்
ரஜினியைப் பெரிதும் பாராட்டினார்கள். கடைசியாக பேசிய ரஜினி,
"இங்கு எல்லோரும் என்னையே பாராட்டினார்கள். ஆனால் படத்தின்
வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்தான்" என்று மேடையில் பின்
வரிசையில் இருந்த கதாசிரியர் பீட்டர் செல்வகுமாரை மேடையின்
முன்புறம் வரச் செய்து, ரசிகர்களிடம் அறிமுகம் செய்து
வைத்தார். அதை செல்வகுமார் எதிர்பார்க்கவில்லை. கண்கள்
கலங்கிவிட்டன. ரஜினியிடம், "என்ன இப்படி பண்ணிட்டீங்க?" என்று
கேட்டார். "நான் செய்தது நியாயம்தானே?" என்று ரஜினி அவரிடம்
பதிலுக்கு கேட்டார். செல்வகுமாருக்கு பேச நா எழவில்லை.
|