Kushbu
"ரஜினிகாந்த் நல்ல நடிகர்
மட்டும் அல்ல; நல்ல மனிதரும் கூட'' என்று நடிகை குஷ்பு
கூறினார்.
தர்மத்தின் தலைவன், மன்னன், பாண்டியன், அண்ணாமலை ஆகிய
படங்களில் ரஜினியுடன் நடித்தவர் குஷ்பு.
தமிழ் திரை உலகுக்கு ரஜினிகாந்த் 25 காலம்
பணியாற்றியதையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் குஷ்பு
எழுதியிருப்பதாவது:-
ரஜினியின் ரசிகை
"பாம்பேயில் இருக்கும்போதே நான் ரஜினி சாரின் ரசிகையாக
இருந்தேன். "அந்தாகானூன்'' படத்தில் அவர் நடித்ததைப்
பார்த்ததிலிருந்து ரஜினி சார் மீது எனக்கு செம கிரேஸ். ஒரு
வித்தியாசமான ஹீரோவாக எனக்குத் தெரிந்தார்.
அந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்பு வரை ரஜினி சார் பற்றி
எனக்கு அவ்வளவாகத் தெரியாது. படம் பார்த்து, அவருடைய
நடிப்பைப் பார்த்த பிறகுதான் அவரைப்பற்றி அறிந்து கொண்டேன்.
தமிழில் பெரிய சூப்பர் ஸ்டார் என்று சொன்னார்கள்.
பாம்பேயிலிருந்து பெங்களூர் வந்து கன்னடப்படங்களில்
நடித்துக் கொண்டிருந்தபோது ரஜினி சார் பற்றி மேலும் பல
விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அவர் படங்களைப் பார்த்து
ஒரு ரசிகையாக எனக்கு ஏற்பட்ட கிரேஸ், பெங்களூரில் அவரைப்
பற்றி தெரிந்து கொண்ட பிறகு அவருடன் சேர்ந்து நடிக்க
வேண்டும் என்ற ஆசையாக வளர்ந்தது.
அழைப்பு
என் ஆசை நிறைவேறும் சூழ்நிலை வெகுவிரைவிலேயே வந்தது. "தர்மத்தின்
தலைவன்'' படத்தில் நடிக்க என்னை அப்ரோச் பண்ணினார்கள்.
அதில் ரஜினி சார்தான் ஹீரோ என்று தெரிந்ததும் கதையைக்
கேட்காமல், சம்பளம் பற்றிக் கவலைப்படாமல் உடனே நடிக்க
சம்மதம் சொன்னேன்.
திரையில் பார்த்து வியந்த ரஜினி சாரை நேரில் பார்த்தபோது
அவரிடம் ஒரு வசீகரம், ஈர்ப்பு சக்தி இருப்பதை என்னால் உணர
முடிந்தது.
அந்தப் படத்தில் நடித்த அனைவருமே சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள்.
நான் மட்டுமே புதுமுகம். அதில் நடிக்கும்போது நான்
புதுமுகம் என்ற பீலிங்கே எனக்கு இல்லை. காரணம் ரஜினி சார்
என்னை அந்தளவுக்கு டிரீட் பண்ணியதுதான். அவருக்கு சமமாக
மதித்து என்னுடன் பழகினார்.
தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினி சார் ஜோடியாக சுஹாசினி
மேடம் நடித்தாங்க. நான் பிரபு சாருக்கு ஜோடியாக நடித்தேன்.
என்றாலும் ரஜினி சார் காம்பினேஷனில் நிறைய சீன்ஸ் இருந்தன.
அந்த சீனில் நடிக்கும்போது ஜாலியாக இருக்கும். காரணம் ரஜினி
சார் செய்யும் காமெடிதான்!
தர்மத்தின் தலைவன் படத்திற்குப் பிறகு பல படங்களில்
நடித்தேன். ஆனாலும் எனக்கு பெரிய வேல்ï வரவில்லை. அது
எனக்கு வருத்தமாகவே இருந்தது. `ரஜினி சாருடன் ஒரு படத்தில்
ஜோடியாக நடித்தால் போதும். நீ பெரிய ஸ்டாராகி விடலாம்'
என்று சிலர் சொன்னார்கள்.
அண்ணாமலை
எனக்கு சான்ஸ் கேட்க தயக்கமாக இருந்தது. நாமாக சான்ஸ்
கேட்பதை விட அவராக சான்ஸ் தருவதுதான் பெருமையாக இருக்கும்
என்று நான் நினைத்தேன். `சின்னத்தம்பி' ஹிட்டான பிறகுதான்
என் ஆசை நிறைவேறியது. பாண்டியன், அண்ணாமலை என தொடர்ந்து
இரண்டு படங்களில் எனக்கு சான்ஸ் கொடுத்தார். `மன்னன்'
படத்தில் நான் நடித்தாலும், பாண்டியன், அண்ணாமலை படங்களில்
நடித்ததுதான் எனக்கு பெருமை சேர்த்தது.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அண்ணாமலை படத்தை
என்னால் மறக்கவே முடியாது. பொதுவாக ரஜினி சாருடைய படங்களில்
அவருக்கு மட்டும்தான் முக்கியத்துவம் இருக்கும். அண்ணாமலை
படத்தில் எனக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தார்.
ஆனந்தக் கண்ணீர்
`கொண்டையில் தாழம்பூ' பாடலில் என்னுடைய பெயரையும் சேர்த்து
பாடலை உருவாக்கினார்கள். படம் வெளிவந்தபோது அந்தப்பாடல்
காட்சிக்கு கிடைத்த வரவேற்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
அண்ணாமலை படம் வந்த நேரத்தில் நான் எங்கு போனாலும் என்
முதுகுக்குப் பின்னால் கொண்டையில் தாழம்பூ பாடல்! அப்படி
கேட்கும்போதெல்லாம் மானசீகமாக ரஜினி சாருக்கு நன்றி
சொல்வேன். அவரால்தானே இத்தனை பெருமை, பாராட்டு என்று
நினைக்கும்போது என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கும்.
இப்படி பலமுறை ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறேன்.
இந்த விஷயத்தை இதுவரை நான் யாரிடமும் சொன்னதில்லை. ஏன்...
ரஜினி சாரிடம்கூட நான் சொன்னதில்லை. இப்போதுதான் முதல்
தடவையாக சொல்கிறேன்.
இத்தனை நாள் சொல்லாமல் இப்போது சொல்வது ஏன் என்று சிலர்
கேட்கலாம். இப்போது சொல்வதுதான் பொருத்தமான நேரம். ரஜினி
சாரின் கலை உலக சேவையை நம் நாடே கொண்டாடும் நேரம் இது.
இப்போது சொல்லப்படும் கருத்துக்களை ஒவ்வொருவரும்
உன்னிப்பாக கவனித்து வருவார்கள். அதனால்தான் இப்போது சொல்ல
வேண்டும் என்று தோன்றியது. சொல்கிறேன்.
நல்ல மனிதர்
ரஜினி சார் நல்ல நடிகர் என்றுதான் எல்லாரும் சொல்வார்கள்.
என் அனுபவத்தில் அவர் நல்ல நடிகர் மட்டுமல்ல. நல்ல மனிதர்.
அவருடன் சேர்ந்து நடித்தது என் வாழ்க்கையில் எனக்குக்
கிடைத்த மாபெரும் பாக்கியம். இதற்கு ஈடான விஷயம் வேறொன்றும்
இல்லை. ரஜினி சாரை புகழ வேண்டும் என்பதற்காக இதைச்
சொல்லவில்லை. என் உள்ளத்தில் இருந்து வரும் உண்மையான
வார்த்தைகள் இவை.''
இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
|