Director P. Vasu

"விஜயா - வாஹினி பட நிறுவனம் 20 வருட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் படமெடுக்க முன்வந்தபோது எடுத்த முதல் படம்தான் "உழைப்பாளி.'' படம் எடுப்பது தொடர்பாக அவர்கள் ரஜினி சாரிடம் பேசியபோது, அவர்தான் `பி.வாசு டைரக்ட் செய்யட்டும்' என்று சொல்லியிருக்கிறார். படத்தயாரிப்பு வேலைகள் மளமளவென தொடர்ந்தன.
இந்த சமயத்தில்தான் நடிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, ரஜினி படத்தை வாங்கக் கூடாது என்று தடை போட்டு விட்டார்கள்.
அப்போது "உழைப்பாளி'' படத்துக்கு பூஜை போடப்போகிற நேரம். அடுத்து என்னாகுமோ என்ற அசாதாரணமான சூழ்நிலை நிலவியது.
மறுபரிசீலனை
ரஜினி சாரிடம் ஒரு வித்தியாசமான குணாதிசயம் உண்டு. தனது கருத்தில் மற்றவர்களுக்கு மாறுபாடு இருப்பதாகத் தெரிந்தால், தான் செய்தது சரிதானா என்பதை மறுபரிசீலனை செய்வார். விநியோகஸ்தர்கள் முடிவு அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள் என்னிடம் போனில் பேசினார். "நான் அந்தக் கூட்டத்தில் பேசியது சரியா, தப்பா? அவசரப்பட்டுட்டேனா?'' என்றெல்லாம் கேட்டார்.
நமது வார்த்தைகள் மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்று ஏற்கனவே என்னிடம் படப்பிடிப்பு தளத்தில் சொல்லியிருக்கிறார். "வாசு! ஒரு நாள் காலையில் தொடங்கி ராத்திரி நாம் படுக்கைக்கு போகிற வரைக்கும் நம்மோட செயல்களால், யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டிருக்குதான்னு யோசிச்சுப் பார்க்கணும். நான் அப்படித்தான் யோசித்துப் பார்ப்பேன். யாரையாவது என் வார்த்தைகளாலோ, செயல்களாலோ காயப்படுத்தியிருப்பதாகத் தோன்றினால் அப்போதே போன் போட்டு மன்னிப்பு கேட்டுடுவேன். இதனால் மறுநாள் எந்த உறுத்தலும் இல்லாமல் நம்ம வேலைகளை தொடங்க முடியும்'' என்று சொன்னார்.
அவரது இந்த உயர்ந்த சிந்தனை என்னுள் ஆழப்பதிந்தது. அன்று முதல் இன்று வரையிலும் நானும் அவரது இந்த கொள்கையை கடைப்பிடித்து வருகிறேன்.
"உழைப்பாளி'' படம் இப்படி பிரச்சினைகளுடன் தொடங்கியது.
படம் வளரும்போதே பிரச்சினைகள் மறையத் தொடங்கின. சினிமா என்பது ஒரு குடும்பம். அண்ணன், தம்பிகளைக்கொண்ட கூட்டுக்குடும்பம். அதனால் பிரச்சினைகள் சினிமா என்ற எங்கள் வீட்டுக்குள்ளேயே பேசி தீர்த்து வைக்கப்பட்டன.
மொத்தப் படப்பிடிப்பையும் 58 நாட்களில் முடித்தேன்.
"விழா வேண்டாம்''
படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்தபோது ரஜினியிடம் `விழா எடுக்கலாமே' என்று கேட்டேன். அதற்கு அவர், "விழா வேண்டாம்'' என்று கூறிவிட்டார்.
பல பிரச்சினைகளை கடந்து படம் வெளிவந்து வெற்றி பெற்றதை, `கொண்டாட்டம்' என்ற பெயரில் பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று ரஜினி நினைத்ததே இதற்குக் காரணம்.
செலவுகள்
எனக்கு பட வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளருக்கு, தேவையில்லாத எந்த செலவும் வைக்கக்கூடாது என்பதை நான் கொள்கையாகவே வைத்திருக்கிறேன். என்னைப்பற்றி தெரிந்த தயாரிப்பாளர்கள் எவரும், நான் இயக்கும் படங்களின் செட்டுக்குக்கூட வருவதில்லை. நான் அவர்களிடம், "உங்க கேஷியரையும், அக்கவுண்டண்டையும் மட்டும் அனுப்புங்க போதும். மற்ற எந்த விஷயமானாலும் எனது படங்களின் தயாரிப்பு நிர்வாகி ராமதுரை பார்த்துக்கொள்வார் என்று சொல்லி விடுவேன்.
இந்தப் படத்திலும் அதுதான் தொடர்ந்தது. படப்பிடிப்புக்காக மங்களூரில் இருந்து சிக்மகளூர் போகவேண்டும். பயண நேரம் எவ்வளவு என்று கேட்டதற்கு, "காரில் போனால் 4 மணி நேரத்தில் போய்விடலாம்'' என்றார்கள்.
ரஜினி மாலை 4 மணிக்கு காரில் கிளம்பிப் போனார். மற்றவர்களை அனுப்பிவிட்டு நான் கடைசியாக புறப்படும்போது மாலை 6:30 மணி ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 7 மணி நேரம் பயணமாகிவிட்டது.
நான் சிக்மகளூரை அடைந்தபோது நள்ளிரவு 2 மணி. அங்கு நாங்கள் தங்குவதாக இருந்த ஸ்டார் ஓட்டலில் போய் இறங்கி ரூம் கேட்டேன். `ரூம் இல்லை' என்று சொல்லிவிட்டார்கள்.
அப்போதுதான் எனது மானேஜர்களில் ஒருவர் அட்வான்ஸ் கொடுத்து ரூம் `புக்' பண்ணாததும், எங்கள் வருகையில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக அவர் தனது அறையில் தூங்கிவிட்டதும் தெரியவந்தது.
நான் ரிசப்ஷனில் இருந்தவரிடம், "நான் டைரக்டர் பி.வாசு. படப்பிடிப்புக்காக வந்திருக்கிறோம். உங்கள் ஓட்டலில் ஒரு வாரம் தங்க ஏற்பாடு செய்திருக்கிறோம். இப்போது ரூம் கொடுத்தீர்களானால், காலையில் எங்கள் மானேஜர் பணத்தை கொடுத்து ஒரு வாரத்துக்கு புக் செய்து விடுவார்'' என்றேன்.
அவர்கள் கேட்பதாக இல்லை. "எங்கள் ஓட்டல் நிர்வாகத்தின் விதிப்படி, `அட்வான்ஸ்' செலுத்தாதவர்கள் யாராக இருந்தாலும் ரூம் கொடுப்பதாக இல்லை'' என்றார்கள், விடாப்பிடியாக.

ரஜினி எங்கே?
அப்போதுதான் எனக்கு இன்னொரு அதிர்ச்சி. நாம் 2 மணிக்கு வந்திருக்கிறோம். நமக்கு முந்தி புறப்பட்ட ரஜினி சார் எப்படியும் ராத்திரி 12 மணிக்குள் இங்கே வந்திருப்பார். அவருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டதா?'' என்று மனசுக்குள் ஒரு பரபரப்பு கேள்வி எழுந்தது.
உடனே நான் பதட்டமாகி, "எனக்கு முன்னால் ரஜினி சார் வந்திருப்பாரே. அவருக்காவது ரூம் கொடுத்தீர்களா, இல்லையா?'' என்று கேட்டேன்.
அவர்களோ ரொம்ப கூலாக, "ராத்திரி 11:30 மணிக்கு வந்தார். அவருக்கும் ரூம் கொடுக்கவில்லை'' என்றார்கள்.
"அடப்பாவிகளா!'' என்று அதிர்ச்சி தாங்காமல் அலறியவன், "அப்படீன்னா ரஜினி சார் எங்கேதான் போயிருப்பார்?'' என்று படபடக்கும் இதயத்துடன் ஓட்டலை விட்டு வெளியே ஓடிவந்தேன்.
ஓட்டலையொட்டி கொஞ்ச தூரத்தில் ரஜினி வந்த கார் நின்றது. ரஜினிக்கு உதவியாளராக வந்த பையன் வெளியில் நிற்க, உள்ளே காரின் பின்சீட்டில் வெள்ளைத் துணியால் உடம்பை மூடிப் படுத்திருந்தார் ரஜினி.
இதைப் பார்த்ததும் என் கோபம் அதிகமாகிவிட்டது. "என்னதான் ரூல்ஸ் என்றாலும் வருகிற ஆள் யாரென்று தெரியவேண்டாம்? ஒரு பிரபல நடிகரை, மக்கள் அபிமானம் பெற்றவரை, சூப்பர் ஸ்டாரை இப்படி காருக்குள் படுக்க வைத்திருக்கிறீர்களே. இப்போதாவது ரூம் கொடுத்துங்கள். நான் டைரக்டர் பி.வாசு. ஒரு டைரக்டருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா? என்று சூடாக குமுறல் வார்த்தைகளை கொட்டியபோது, என் முதுகில் தட்டியது ஒரு கை. திரும்பிப்பார்த்தால் புன்னகை முகத்துடன் நிற்கிறார் ரஜினி!
அப்போது ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? "வாசு! நாம யாருன்னு அவங்கதான் நமக்கு சொல்லணும். ரூம் கிடைக்காததுக்கு காரணம் நம்மவங்க செய்த தப்புதானே! முன்கூட்டியே நாம் அனுப்பியிருந்தவங்க அட்வான்ஸ் புக்கிங் பண்ணாததால், நாம் இவங்களை கோபிச்சுக்கிறதில் நியாயம் இல்லை. நம்ம மேலே தப்பு வெச்சிக்கிட்டு நாம அவர்களை குறை சொல்லக்கூடாது'' என்றார்.
இப்படியொரு சம்பவம் வேறு நடிகருக்கு ஏற்பட்டிருந்தால், உடனே கோபித்துக்கொண்டு போயிருப்பார். ஆனால், கவனக்குறைவால் ஏற்பட்ட தடங்கல்களை புரிந்து கொண்டு, காருக்குள் படுத்துக்கொண்டது மட்டுமல்ல, நிதானமாய் அந்தப் பிரச்சினையை அணுகினார்.
மறுநாள் படப்பிடிப்பு எந்த சிரமமுமின்றி நடந்தது.
இதற்குப்பிறகு இன்று வரை நான் என்னைப்பற்றி யாரிடமும் சொல்லிக்கொண்டதில்லை. "சந்திரமுகி'' படத்தின் பெரிய வெற்றிக்குப்பிறகு வெளியில் என்னைப் பார்த்த ஒருவர், "நீங்க டைரக்டர் பி.வாசுதானே'' என்று கேட்டபோதுகூட, எனக்கு ரஜினி சார் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது.
இப்படி தன்னுடன் பழகுபவர்களுக்கும் ஒரு பக்குவ நிலையை ரஜினி சார் தந்துவிடுவார். சந்திரமுகி படம் 700 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் போதும், இந்த வெற்றிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் அதே எளிமையும் இனிமையுமான ரஜினியைத்தான் இப்போதும் பார்க்கிறேன்.''
இவ்வாறு டைரக்டர் பி.வாசு கூறினார்.

ரஜினிகாந்த் நடித்த "சந்திரமுகி'' வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. 2005 ஏப்ரல் 14-ந்தேதி திரையிடப்பட்ட இந்தப்படம் 700 நாட்களைத் தாண்டி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்ப்பட உலகின் வசூல் சாதனைகளை எல்லாம் முறியடித்துவிட்டது.
சந்திரமுகி, சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு. ரஜினியுடன் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த சாதனை படத்தை இயக்கியவர் பி.வாசு.
இவர் ஏற்கனவே ரஜினியின் "பணக்காரன்'', "மன்னன்'', "உழைப்பாளி'' ஆகிய படங்களை இயக்கியவர்.
கதையின் கதை
"சந்திரமுகி'' படத்தின் கதை உருவானதிலும், அது படமானதிலும், அதை வாசு டைரக்ட் செய்ததிலும் பெரிய கதையே அடங்கியிருக்கிறது.
அதுபற்றி வாசு கூறியதாவது:-
"சிவாஜி பிலிம்சுக்காக ரஜினி சாரை ஏற்கனவே "மன்னன்'' படத்திற்காக இயக்கினேன். அது வெள்ளி விழா படமாக அமைந்தது. அதே சிவாஜி பிலிம்சுக்காக மீண்டும் ரஜினியை இயக்க வாய்ப்பு கிடைத்தபோது, அளவிட முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.
"மன்னன்'' படத்தில் ரஜினி சாரை இயக்கிய பிறகு, எந்தக் கதையென்றாலும் அதை என்னுடன் பகிர்ந்து கொள்வார். அடுத்து வந்த "அண்ணாமலை'', "பாட்ஷா'', "படையப்பா'' படங்களின் கதைவரை, என்னிடம் சொல்லி எனது கருத்துக்களையும் கேட்டுக்கொள்வார். கதைகளை காட்சி ரீதியாக அவர் சொல்லும் போதே படம் பார்த்த பீலிங்' ஏற்பட்டு விடும். இந்த கதைப் பட்டியலில் பாபா' படத்தின் கதை பற்றி மட்டும் என்னிடம் அவர் பேசவில்லை.
கதை பற்றிய எனது கருத்துக்களை கூறும்போது அதை தனது கையில் இருக்கும் குறிப்பேட்டில் எழுதிக்கொள்வார். அதுமாதிரி படம் முடிந்து "பிரிவியூ'' காட்சி பார்க்கவும் என்னை அழைப்பார். படம் பார்த்து முடிந்ததும் படம் பற்றி எதுவும் சொல்லாமல் போனால்கூட, அவரே வீட்டுக்கு போன் பண்ணி விடுவார். பொதுவாகவே, மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லி விடுபவர்களிடம் அவருக்கு பிரியமும் அதிகம். நம்பிக்கையும் அதிகம். இப்படி அவரது நம்பிக்கைக்குரிய இடத்தில் நானும் இருந்தேன் என்பதில் இன்றளவும் எனக்குப் பெருமை.
விமானத்தில் சந்திப்பு
"பாபா'' படம் வெளியான பிறகு, புதிய படம் எதையும் ரஜினி ஒப்புக்கொள்ளாமல் இருந்த நேரம். விமானத்தில் நாங்கள் தற்செயலாக சந்தித்துக் கொண்டோம். அப்போது நான் கன்னடத்தில் "ஆப்த மித்ரா'' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பை முடித்துவிட்டு, பெங்களூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது, அதே விமானத்தில் ரஜினி சாரும் வர, நலம் விசாரித்துக் கொண்டோம்.
பிறகு அவரிடம், "என்ன சார்! புதிய படம் பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லையே?'' என்று கேட்டேன்.
அதற்கு அவர், "பாட்ஷா'', "படையப்பா'' படத்துக்குப்பிறகு இனிமே புதுசா என்ன படம் பண்ணிட முடியும்? அதிருக்கட்டும். நீங்க இப்ப என்ன படம் பண்றீங்க? என்று கேட்டார்.
நான் அவரிடம், கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தனை வைத்து `ஆப்த மித்ரா' என்ற கன்னடப் படத்தை இயக்கி வருவது பற்றி தெரிவித்தேன். அப்போதும் கூட கதை பற்றி அவரிடம் சொல்லவில்லை.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற "மணிச்சித்ரதாழ்'' படம்தான், எனக்கு "ஆப்த மித்ரா'' கன்னடப் படத்துக்கு இன்ஸ்பிரேஷன். அந்தப் படத்தின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய கேரக்டர்கள் வடிவமைப்புடன் "ஆப்த மித்ரா''வை உருவாக்கினேன். இந்தப்படம்தான் பின்னாளில் "சந்திரமுகி''யாக உருப்பெறும் என்பதை அப்போது நினைத்துக்கூட பார்க்கவில்லை.
கோவிலுக்கு வந்த நல்ல செய்தி
"ஆப்த மித்ரா'' ரிலீசானதும் கேரளாவில் உள்ள சக்குளத்து பகவதி அம்மன் கோவிலுக்கு போனேன். இது "பெண்களின் சபரிமலை'' என்று சொல்லப்படும் கோவில். தரிசனம் முடிந்து வெளிவந்த நேரத்தில் கோவில் குருக்கள் என்னிடம், "27 வெள்ளிக்கிழமை தொடர்ந்து வாங்க. நல்ல செய்தி வரும்'' என்றார்.
அவர் சொன்னபடி 27-வது வெள்ளிக்கிழமை தரிசனம் முடித்துவிட்டு குருவாயூருக்கு வந்தேன். மதியம் 1:30 மணிக்கு பிரபு சார் போனில் பேசினார். "யப்பா! ஒரு சந்தோஷமான விஷயம். ரஜினி சார் நம்ம பேனர்ல ஒரு படம் பண்றார்'' என்றார்.
இதைக் கேட்டதும் எனக்கு பெரிய மகிழ்ச்சி. உடனே பிரபு விடம், "ரொம்ப சந்தோஷமான விஷயம் சொல்லியிருக்கீங்க'' என்றேன்.
"சந்தோஷம் இதோடு முடிந்து விடவில்லை. படத்தை நீதாம்ப்பா டைரக்ட் பண்றே'' என்றார்.
"நானா?'' ஒரு கணம் எனக்கு இன்ப அதிர்ச்சி. உடனே பிரபு, "ரஜினி சாரே சொன்னார். உன்னைத்தான் நம்ம பேனர் படத்துக்கு டைரக்டரா போடணும்னு கேட்டுக்கிட்டார்'' என்றார்.
இப்போது நிஜமாகவே எனக்கு வியப்பு. நான் அவரை "மன்னன்'' படத்தில் இயக்கி 9 வருஷம் ஆகிவிட்டது. அதற்குப்பிறகு அதுமாதிரி ஒரு பெரிய வெற்றிப்படம் எதுவும் நான் கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் ரஜினி சார் என்னை அவர் நடிக்கும் புதிய படத்தை இயக்க சொல்லியிருக்கிறார் என்றால், எப்படி?
"ஆப்த மித்ரா'' ரிலீசாகி முதல் வாரமே பெரிய வெற்றிக்கான அடையாளம் தெரிய ஆரம்பித்திருந்தது. இந்த நேரத்தில் சிவாஜி பிலிம்சுக்காக ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில், வரும் வழியிலேயே ரஜினி சாருக்கு என்ன கதை பண்ணலாம் என்று யோசிக்கத் தொடங்கி விட்டேன். அப்போது என்னிடம் "வலது கை'' என்ற பெயரில் ஒரு "கமர்ஷியல்'' கதை இருந்தது. இந்தக் கதைக்குள் ரஜினி எந்தெந்த மாதிரி பிரகாசிப்பார் என்று கதைக்காட்சிகளை மனக்கண் முன் ஓடவிட்டேன்.
சென்னை வந்து ராம்குமாரை பார்த்தபோது, "யப்பா! ரஜினி சாரே போன் செய்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பாட்டுவேளை, திடீர்னு ரஜினி சாரிடம் இருந்து போன். "என்ன பண்றீங்க?'' என்று கேட்கிறார். "சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறோம்'' என்றேன். "நம்ம பேனர்ல ஒரு படம் பண்ணுவோமா?'' என்கிறார். "பண்ணலாம் சார்'' என்கிறேன். உடனே அவரே "வாசு டைரக்ஷன்ல "ஆப்த மித்ரா''ன்னு ஒரு படம் வந்திருக்கு. நாம அதை அப்படியே தமிழில் பண்ணலாம்" என்றார். "சந்தோஷமா பண்ணலாம் சார்''னு சொல்லிட்டேன் என்றார், ராம்குமார்.
எனக்குள் இப்போது விவரிக்க முடியாத உணர்ச்சி அலைகள். "மணிச்சித்ரதாழ்'' படத்தின் கருவை மட்டுமே எடுத்துக்கொண்டு என் பாணியில் சில கேரக்டர்களை உருவாக்கி "ஆப்த மித்ரா''வை இயக்கினேன். அந்தப்படம் ரசிகர்களை கவர்ந்த மாதிரியே ரஜினி சாரையும் கவர்ந்திருக்கிறதே!
மாறு வேடத்தில் ரஜினி
இதைத்தொடர்ந்து ராம்குமார் பெங்களூரில் இருந்த ரஜினியை பார்க்கப் போனார். அவரிடம், "என் நண்பர் காந்தி பெங்களூர் சந்தோஷ் தியேட்டரில் "ஆப்த மித்ரா'' படத்தை பார்த்திருக்கிறார். அவர்தான் படம் பற்றி என்னிடம் பாராட்டி சொன்னார். அதோட நம்ம வாசுதான் டைரக்ட் பண்ணியிருக்கார்'னு சொன்னார். காந்தி ஒரு படத்தை அவ்வளவு சுலபமா பாராட்டற ஆளில்லை. அதனால் காந்தியை அழைத்துக்கொண்டு மாறுவேடத்தில் நானும் சந்தோஷ் தியேட்டரில் `பிளாக்'கில் டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன். அதில் கட்டில் தானா மேலே தூக்கற சீனைப் பார்த்ததும் அப்படியே ஆடிப்போயிட்டேன். படம் பெரிசா வரும்னு நம்பிக்கை இருக்கு'' என்றிருக்கிறார்.
நான் சந்தித்தபோது என்னிடமும் படம் பற்றி ரஜினி பாராட்டினார். நான் அவரிடம், "சார்! ஒரேயொரு வார்த்தை. டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் உங்களை வெச்சு ஏற்கனவே `ஜக்குபாய்' படம் இயக்கறதா இருந்தது. இப்ப உள்ள சூழ்நிலையில் நீங்க புதுசா ஏதாவது படம் பண்ணினாக்கூட அதை கே.எஸ்.ரவிக்குமாரே டைரக்ட் பண்ணினாத்தான் சரியாக இருக்கும்'' என்றேன்.
இப்படிச் சொன்னதும் ரஜினி முகத்தில் ஆச்சரியம். "என்ன இது! நீங்களும் ரவிக்குமாரும் ஒரே மாதிரி இருக்கீங்க? அவர்கிட்ட இந்த கதை பற்றி சொன்னேன். "மணிச்சித்ரதாழ்'' படத்தை அவர் பார்த்திருக்கிறார். அவர் என்கிட்டே, "என்ன சார் கலாட்டா பண்றீங்களா? நாங்க உதை வாங்கணும்னு ஆசையா உங்களுக்கு? படத்தில் மோகன்லால் கரெக்டா இடைவேளை நேரத்தில்தான் வரார். நீங்க நடிக்கிற ஒரு படத்துல இடைவேளை வரைக்கும் உங்களைக் காட்டலைன்னா ரசிகர்கள் எங்களை சும்மா விடுவாங்களா?'' என்று கேட்டார். அவர் சொன்னப்புறம்தான் நானும் "மணிச்சித்ரதாழ்'' பார்த்தேன். அப்பத்தான் அதுக்கும் "ஆப்த மித்ரா''வுக்கும் உள்ள ஏகப்பட்ட வித்தியாசம் தெரிஞ்சுது. இந்த விஷயத்தை நான் ரவிக்குமார் கிட்டே சொன்னபோது, "அதனால்தான் சார் சொன்னேன். டைரக்டர் வாசு இந்தப் படத்தை பண்ணினால்தான் சரியாக இருக்கும்'' என்று சொன்னார்.
இதை என்னிடம் விவரித்த ரஜினி, "நீங்களே டைரக்ட் பண்ணனும்னு ஆசைப்பட்டதுக்கு இதுவும் முக்கிய காரணம்'' என்றார்.
"தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்து கொள்வோம்'' என்றும் கூறினார்.
அதன் பிறகு மளமளவென பட வேலைகள் தொடங்கின. நான் சில காட்சிகளை மாற்றம் செய்தேன்.
கன்னடத்தில் வடிவேலு கேரக்டர் கிடையாது. தமிழுக்காக அதை சேர்த்தேன். `தேவுடா தேவுடா' பாட்டு கிடையாது. அதை சேர்த்தேன். இதைவிடவும் முக்கியம், கன்னடத்தில் வேட்டையன் கேரக்டரே கிடையாது. தமிழுக்காக உருவானவன்தான் வேட்டையன்.
"சந்திரமுகி''யில் சிம்ரன் நடிப்பதாக இருந்த சந்திரமுகி வேடத்தில், ஜோதிகா நடித்தார். இதற்கான காரணத்தை டைரக்டர் பி.வாசு வெளியிட்டார்.
"சந்திரமுகி'' அனுபவங்கள் பற்றி பி.வாசு தொடர்ந்து கூறியதாவது:-
"சந்திரமுகி''யில் ரஜினி சார் நடிக்கிறார் என்றதும், அடுத்து 2 விஷயங்கள் முக்கியமாகப்பட்டது. ஒன்று: கதாநாயகி. அடுத்து: இசை.

சவுந்தர்யா
கன்னடத்தில் சவுந்தர்யா நடித்திருந்தார். 100 சதவீதம் சந்திரமுகியாகவே மாறிப்போனார். சவுந்தர்யா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் `சந்திரமுகி' கேரக்டருக்கு வேறு ஒரு நடிகையை யோசித்திருக்கவே மாட்டோம். துரதிர்ஷ்டவசமாக, அவர் விமான விபத்தில் இறந்து விட்டார்.
சந்திரமுகியாக யாரைப் போடலாம் என்று யோசித்தேன். இப்போது என் மனதுக்குள் சந்திரமுகியாக வந்து போனவர் நடிகை சிம்ரன்.
சிம்ரன் சிறந்த நடனக்கலைஞர். அவர் நாயகி என்று முடிவானதும் இசைக்கு என் மனதில் வந்து போனவர் வித்யாசாகர். வித்தியாசமான இசையை கதைக்கு தேவையான விதத்தில் தருபவர் என்பதால் என் விருப்பத்தில் அவர் இருந்தார். தெலுங்கில் வரும் "ராரா''பாட்டு ரொம்பப் பிரபலம். அதுபற்றி வித்யாசாகரிடம் பேசியபோது, "அதே டியூன் வேண்டாம். நான் ஒரு டியூன் போடுகிறேன். பிடித்திருந்தால் வைத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.
அப்படி அவர் புதிதாக டியூன் போட்டு ஹிட்டானதுதான் சந்திரமுகியில் வரும் "ராரா'' பாட்டு.
புதிய சந்திரமுகி ஜோதிகா
"சந்திரமுகி'' கேரக்டரில் நடிக்க சிம்ரன் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டார். திருமணமாகி அவர் கருவுற்றிருந்த நேரம் அது. படத்தில் `ராரா' பாட்டில் சந்திரமுகி குதித்துக் குதித்து சுழன்றாடியபடி நடனமாட வேண்டும். அப்படி சிம்ரன் ஆடும்போது நிச்சயம் கருவில் வளரும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடியும் வாய்ப்பு அதிகம்.
இதை சிம்ரனிடம் சொல்லி "சந்திரமுகி வாய்ப்பா? குழந்தையா?'' என்ற முடிவை அவரிடமே விட்டோம். சிம்ரனின் தாய்மையுணர்வு வென்றது. அதனால் அவர் விலகிக்கொள்ள "சந்திரமுகி''யாக என் மனதில் அடுத்த கணமே வந்து போனவர்தான் ஜோதிகா.
இயல்பில் நடனக் கலைஞராக இல்லாவிட்டாலும், ஜோதிகா தனது ஆர்வத்தில் அந்த சந்திரமுகி கேரக்டரோடு கலந்து போனார் என்பதே உண்மை.
ரஜினி சாரை பற்றி சொல்ல வேண்டுமானால், தனது கேரக்டர் என்னவென்று உறுதியானதுமே, அந்த கேரக்டரை தனது மனதுக்குள் டிசைன்' பண்ணத் தொடங்கிவிடுவார். சரவணன் கேரக்டர், வேட்டையன் கேரக்டர் இந்த இரண்டும் எப்படி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி என்னிடம் விவாதித்துக் கொள்வார். இந்தப் படத்தில் ரஜினி சாருக்கே உரிய பஞ்ச் டயலாக்குகள் கிடையாது என்பதை முதலிலேயே முடிவு செய்து கொண்டோம். இருந்தாலும், படத்தில் என்னென்ன செய்யலாம் என்பதை அவர் மனதுக்குள் டிசைன்' செய்து விட்டார்.
ஒருநாள் என்னை அழைத்த ரஜினி, "படத்தில் வேட்டையன் வரும்போது ஏதாவது புதுமையாக இருந்தால் நல்லது'' என்றார். அதோடு நில்லாமல், "இப்போ நான் ஒரு சீன் பண்ணிக் காட்டுகிறேன். எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள்'' என்றவர், ஒரு பத்து அடி தூரம் நடந்து போனார்.
அடுத்த கணம் அதே வேகத்தில் திரும்பினார். என்னை நெருங்கியதும் முகத்தில் ஆக்ரோஷமான பாவனையுடன் `லகலகலகலக' என்று செய்து காட்டினார்.
நான் என்னையும் அறியாமல் `சூப்பர்' என்றேன்.
என்றாலும் அவருக்கு சந்தேகம். "அதெப்படி உடனே `சூப்பர்'னு சொல்லிட்டீங்க...?'' என்று கேட்டார்.
பதிலுக்கு நான் அவரிடம், "ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னது மாதிரி'' என்று நீங்கள் முன்பு கூறிய வசனம் ரசிகர்களிடம் எப்படி ரீச்' ஆனதோ, அதுமாதிரி இந்த லகலகலகலக'வும் பிரபலம் ஆகும். முதலில் நான் ஒரு ரசிகனா உங்களைப் பார்க்கிறேன். பார்த்ததும் பிடித்துப் போய்விட்டது. இதையே வேட்டையனுக்கான கெட்டப்பில் நீங்கள் செய்யும்போது இன்னும் பிரமாதமாய் இருக்கும்'' என்றேன்.
தெலுங்கிலும் சாதனை
இந்தப்படம் தமிழில் ரிலீசான 14-4-2005 அன்றே தெலுங்கிலும் டப்' செய்து வெளியிடப்பட்டது. 280 நாட்கள் ஓடி பெரிய ஹிட்.'
அந்த ஆண்டு தெலுங்கில் நேரடிப்படமாக வந்த தெலுங்கு ஹீரோக்கள் நடித்த படங்களைவிட, இந்தப்படம் அதிகம் வசூல் செய்தது.
இந்தப்படத்தின் பெயரை சொல்லத் தெரியாத சிறுவர்கள் கூட தங்கள் பெற்றோர்களிடம் "லகலகலகலக படத்துக்குப் போவோம்'' என்று நச்சரிப்பு செய்து, தங்கள் பெற்றோரை தியேட்டருக்கு அழைத்துப்போனதாக அறிந்தபோது, ரஜினி சாரின் `லகலக' மகத்துவம் தெரிந்தது.
வேட்டையன் கேரக்டருக்குள் ரஜினி சார் எப்படி ஒன்றிப்போனார் என்பது இன்னும் ஆச்சரியம். லகலக' சொல்லிவிட்டாரே தவிர, வேட்டையன் கெட்டப்பில் எப்படியிருப்பார் என்பது முடிவாகவில்லை. அதற்கும் அவரே விடையாக வந்தார். குஷால்தாஸ் கார்டனில் படப்பிடிப்பு நடந்தபோது, வேட்டையன் கேரக்டரை ஸ்டில்' எடுக்கலாமே என்று பேசினோம். "வாசு சார்! ஒரு மணி நேரத்தில் வருகிறேன்'' என்று சொல்லிவிட்டு கேரவனுக்கு போனவர், அடுத்த ஒரு மணி நேரத்தில் படத்தில் நீங்கள் பார்த்த அந்த வேட்டையன் "கெட்டப்''பில் வெளிப்பட்டார். முதலில் அவரை யாரென்றே யூனிட்டில் உள்ளவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. வெறித்தனமான பார்வையில் கம்பீரம் கலந்த வேட்டையனாக ரஜினி சாரை பார்த்தபோது, என் மனதில் இருந்த வேட்டையன் என் எதிரே நிற்பதாகவே உணர்ந்தேன்.
கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் தொடர்ந்து 6 இரவுகள் எடுத்தோம். எந்தவித தயக்கமும் இன்றி இரவு 9 மணிக்கு தொடங்கும் படப்பிடிப்பில், விடியகாலை 4 மணி வரை நடித்துக் கொடுத்துவிட்டுப் போனார் ரஜினி.
80 நாட்கள்
மொத்தப் படத்தையும் 80 நாட்களில் எடுத்து முடித்தேன். படத்தில் நடிகர் - நடிகைகள் தவிர கதவு, படி, வீடு மூன்றையும் கேரக்டராக்கியதையும் ரஜினி சார் பாராட்டினார்.
இந்த படத்துக்கான காட்சிகள் சென்னை குஷால்தாஸ் கார்டனில் படமாக்கப்பட்டது போல தெரியும். உண்மையில் வீட்டின் படிகள் மைசூரிலும், கதவுகள் பெங்களூரிலும், வேட்டையன் அறை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், "சந்திரமுகி'' ஜன்னல் வழியாக பார்க்கிற காட்சி பெங்களூரில் இந்திரா கார்டனிலும் படமாக்கப்பட்டது. இந்தக்கதையின் ஒவ்வொரு காட்சியுமே `ஆப்த மித்ரா' மூலம் எனக்குள் பதிவாகியிருந்ததால் குழப்பம் எதுவும் இன்றி இந்த மாதிரியான காட்சிகளை கையாள முடிந்தது.
வாழ்த்து
படத்தில் நூறாவது நாளில் இருந்து 200-வது நாள், 300-வது நாள் என தொடர்ந்து ரஜினி சார் என்னிடம் போனில் வாழ்த்து தெரிவித்து விடுவார். படம் 700-வது நாள் வந்தபோது, என்னிடம் பேசி வாழ்த்தியவர், "நான் இப்போது ராகவேந்திரா கோவிலில் இருந்து உங்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறேன்'' என்றார். கோவிலுக்கு வந்த இடத்திலும் மறக்காமல் வாழ்த்துகிற அந்த பண்பு என்னை ரொம்ப நேரம் பரவசத்தில் வைத்திருந்தது.
படம் பிரிவியூ'வின்போது ரஜினி சார் மனைவி லதாவுடன் வந்திருந்தார். படம் முடிந்து போகும்போது வரேன்' என்று மட்டும் சொல்லி கை கொடுத்துவிட்டுப் போய்விட்டார். மறுநாள் என்னை வீட்டுக்கு அழைத்தவர், நான் போனதும் உற்சாகமாய் வரவேற்றார். அப்போது அவர் என்னிடம், "எனது ஒவ்வொரு படத்தையும் என்னுடன் இருந்து லதா (மனைவி) பார்ப்பார். படம் அவருக்கு பிடித்திருந்தால், படம் முடியும்போது எனது வலது கை மணிக்கட்டை அழுத்தமாக ஒரு பிடி பிடிப்பார். அப்போதே அவருக்கு படம் பிடித்து விட்டதை உணர்ந்து கொள்வேன். படம் ரொம்ப பிடித்திருந்தால் இந்த பிடி' அழுத்தமாக இருக்கும். நேற்று "சந்திரமுகி'' பார்த்து முடித்த பிறகு அவரிடம் ஒரு சின்ன ரியாக்ஷன்' கூட இல்லை. வீட்டுக்கு வந்த பிறகுதான் அதற்கான காரணத்தை கேட்டேன்.
அதற்கு லதா என்ன சொன்னார் தெரியுமா? "படம் முடிந்தபோது ஏற்பட்ட பிரமிப்பில் இருந்து நான் விடுபடவே ரொம்ப நேரம் ஆயிற்று. பிறகு எப்போது உங்கள் கையை அழுத்தி படம் பற்றிய ரிசல்ட்டை சொல்றது? இப்ப சொல்றேன். இதுமாதிரி படம் இதுவரைக்கும் நீங்க பண்ணலை. அந்த அளவுக்கு அற்புதமான படம்.''
அதைக் கேட்ட பிறகுதான் எனக்கு உயிரே வந்தது. உடனே உங்களை பாராட்ட வேண்டும் என்றே நேரில் வரச்சொன்னேன்'' என்றார், ரஜினி.
சாதனை
எம்.கே.தியாகராஜ பாகவதரின் 3 தீபாவளி கண்ட "ஹரிதாஸ்'' பட சாதனையை சந்திரமுகி முறியடிக்கும் என்கிறார்கள். லதா ரஜினிகாந்தின் பிரமிப்பை படம் பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் அடைந்ததால்தான் இந்த சாதனையை "சந்திரமுகி'' படைக்கிறது என்பேன்.''
இவ்வாறு பி.வாசு கூறினார்.