V.C.
Ghukanathan
மாங்குடி
மைனர்
ஆயா கிரியேஷன்ஸ் தயாரிப்பான இந்தப் படத்தின் திரைக்கதை,
வசனம், டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை வி.சி.குகநாதன்
ஏற்றிருந்தார்.
இந்தப்படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவம் பற்றி டைரக்டர்
குகநாதன் கூறியதாவது:-
"இந்தியில் வெளியான `ராம்பூர்-கா-லட்சுமண்' என்ற படத்தை
பார்த்தேன். அதில் சத்ருகன் சின்கா புதுமாதிரியாக
நடித்திருந்தார். அந்தக் கதையைத் தமிழில் தயாரித்து, அதில்
ரஜினி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினோம்.
அதன்படி, அந்தக் கதையை வாங்கி, "மாங்குடி மைனர்'' என்ற
பெயரில் தயாரித்தோம்.
அதுவரை வில்லனாகவும், ஆன்டி ஹீரோவாகவும் நடித்து வந்த ரஜினி,
முதன் முதலாக ஆக்ஷன் வேடத்தில் நடித்தார்.
இரவு பகலாக நடித்தார்
இந்த காலக்கட்டத்தில் ஏராளமான படங்களில் ரஜினி நடித்து
வந்தார்.
எங்களுக்கு 17 நாட்கள் `கால்ஷீட்' கொடுத்திருந்தார். அதில்
8 நாட்களை மற்ற படங்களுக்கு ஒதுக்க நேர்ந்தது. எங்களுக்கு
கிடைத்தது 9 நாட்கள்தான்.
ரஜினி, சிரமம் பாராமல் இரவு பகலாக நடித்தார். அப்போது `மாங்குடி
மைனர்' படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. காலை, விமானம்
மூலமாக ஐதராபாத்துக்கு வருவார். பகல் முழுவதும் நடிப்பார்.
மாலை 7 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்குத் திரும்புவார்.
அங்கு இரவில் "இளமை ஊஞ்சலாடுகிறது'' படப்பிடிப்பு நடக்கும்.
அதில் விடிய விடிய நடிப்பார்.
எங்களுக்கு அவர் கொடுத்த 9 நாள் கால்ஷீட்டில், அவர்
சம்பந்தப்பட்ட எல்லா காட்சிகளையும் நடித்துக் கொடுத்தார்.
பட அதிபர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படக்கூடாது
என்பதற்காக, தன்னை வருத்திக்கொள்ள தயங்காதவர், ரஜினி''
இவ்வாறு குகநாதன் கூறினார்.
தனிக்காட்டுராஜா
இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியதோடு,
டைரக்ஷனையும் கவனித்தவர் வி.சி.குகநாதன்.
இப்படத்தில் ஸ்ரீபிரியா, சத்யகலா, ஒய்.விஜயா, ஸ்ரீலட்சுமி,
சில்க் சுமிதா, ஜெய்சங்கர், விஜயகுமார், ராஜேஷ்,
சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா,
சங்கிலிமுருகன், வி.எஸ்.ராகவன், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஐசரி
வேலன், செந்தாமரை, ஒய்.ஜி.மகேந்திரன், ஐ.எஸ்.ஆர். என்று ஒரே
நட்சத்திரக் கூட்டம் நிறைந்திருந்தது.
12-3-1982-ல் வெளியான இப்படம், சூப்பர் ஹிட்டாக அமைந்தது.
இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் "டப்'' செய்யப்பட்டது.
இந்தப்படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, படத்தின்
டைரக்டரும், கதை-வசன கர்த்தாவுமான வி.சி.குகநாதன்
கூறியதாவது:-
"பட அதிபர் ராமா நாயுடு தயாரித்த 4, 5 தெலுங்குப் படங்களை
நான் டைரக்ட் செய்து, அவை மாபெரும் வெற்றிப்படங்களாக
அமைந்தன.
அவர் என்னை அழைத்து, "உங்கள் திறமையாலும், உழைப்பினாலும்
பல வெற்றிப் படங்களை என்னால் தயாரிக்க முடிந்தது.
உங்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். என்ன வேண்டும்?''
என்று கேட்டார்.
நான் வீடு, கார் என்று ஏதாவது கேட்பேன் என்று அவர்
நினைத்தார். ஆனால் நான் வேறு விதமாக என் விருப்பத்தைத்
தெரிவித்தேன்.
ரஜினி - கமல்
"தமிழில் உங்களுக்காக ஒரு பிரமாண்டமான படத்தை தயாரிக்க
விரும்புகிறேன். அதில் ரஜினி, கமல் இருவரும் நடிக்க
வேண்டும். அவர்களை `புக்' செய்து கொடுங்கள்'' என்று
கூறினேன்.
அதற்கு ராமாநாயுடு சம்மதித்தார். ரஜினி, கமல் இருவருக்கும்
அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது.
படத்தை "70 எம். எம்''ல் பிரமாண்டமாக எடுக்கத்
தீர்மானித்தோம்.
கமல் வாபஸ்
ஆனால், திடீரென்று ஒருநாள் கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன்
வந்து ராமாநாயுடுவை சந்தித்தார். ரஜினியும், கமலும்
சேர்ந்து நடிப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு
செய்திருப்பதாகவும், அதனால் இப்படத்தில் கமல் நடிக்க இயலாது
என்றும் கூறி, அட்வான்சை திருப்பிக் கொடுத்துவிட்டார்.
இதனால் ராமாநாயுடு வருத்தம் அடைந்தார். என்னை அழைத்து, "என்ன
செய்யலாம்?'' என்று கேட்டார்.
"பரவாயில்லை. புகழ் பெற்ற நட்சத்திரங்கள் நிறைய பேரை
நடிக்க வைத்து படத்தை சிறப்பாகவே தயாரிப்போம்'' என்றேன்.
அதன்படி பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டதுதான் "தனிக்காட்டுராஜா.''
இவ்வாறு குகநாதன் குறிப்பிட்டார்.
|