Sivakumar
தலைவருடன்
ஆரம்ப காலத்தில் இணைந்து நடித்தவர் சிவக்குமார். சமீபத்தில்
ஒரு நிகழ்ச்சியில் சிவக்குமார் பகிர்ந்து கொண்ட நினைவு இது.
தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலிலும் இதனைக்
குறிப்பிட்டுள்ளார் சிவக்குமார். இதோ அவரது பேச்சு விவரம்!
அது 1977, அக்டோபர் மாதம், 16ம் தேதியென்று நினைக்கிறேன்.
புவனா ஒரு கேள்விக்குறி படத்தின் வெற்றி விழா, செங்கல்பட்டில்
உள்ள ஒரு மைதானத்தில் நடந்தது. நான், ரஜினி, எஸ்பிமுத்துராமன்,
சுமித்ரா... என படத்துடன் தொடர்புடைய அத்தனை பேரும்
சென்றிருந்தோம்.
நாங்கள் முன்னே சென்றுவிட்டோம். ரஜினி சரியான நேரத்துக்கு
மைதானத்துக்குள் நுழைந்தார். அவர் காரைப் பார்த்ததும்
கோடிக்கணக்கான மக்களிலிருந்து மற்றுமொரு புதிய கலைஞன்
பிறந்துவிட்ட மகிழ்ச்சியின் அறிகுறி அது.
முதலில் நான்தான் பேசுவதாக இருந்தது. ஆனால் நான், ரஜினியைப்
பேசுமாறு கேட்டுக் கொண்டேன்.
பலத்த கைத்தட்டல்களுக்கிடையே ரஜினி பேச வந்தார். ரசிகர்களின்
அன்பு வெள்ளம் அவரைத் திக்குமுக்காட வைத்தது. உணர்ச்சி
வசப்பட்டு கண்கலங்க, இப்படிக் கூறினார்:
"எனக்கு மேடையில் பேசுவது புதிய அனுபவம். இந்தப் படத்தில்
இப்படி ஒரு வேடத்தில் என்னை நடிக்க வெச்சி பெயர் வாங்கிக்
கொடுத்த முத்துராமன் சாருக்கு நன்றி. உங்க எல்லாருடைய
அன்புக்கும் நன்றி", என்றவர், 'என் பக்கம் திரும்பி,
சிவக்குமார் சார்...' உங்களுக்கும் நன்றி என்றார் நிறைந்த
சபையில்.
ரஜினி என்ற மனிதரின் பண்பு எனக்குப் புரிந்த சம்பவம் அது.
இதைக் குறிப்பிட காரணமிருக்கிறது.
மகரிஷி எழுதிய புவனா ஒரு கேள்விக்குறி நாவலில் நல்லவன் போல்
தோற்றமுள்ள பெண் பித்தன், வில்லன் மாதிரி தெரியும் நல்லவன்
என இரு வேடங்கள். அன்றைக்கு ரஜினி பிரபல வில்லனாகத்
திகழ்ந்தார்.
இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் நண்பர்
பஞ்சு அருணாசலம். அவரிடம், 'எப்பப் பார்த்தாலும் நல்லவனா
நடிக்கிறது போரடிக்குது. அதனால ஒரு மாற்றத்துக்கு இந்தக்
கதையில் வரும் பெண்பித்தன் வேஷத்துல நான் நடிக்கிறேன், என
கேட்டுக் கொண்டேன். ரஜினிக்கு சம்பத் என்ற நல்லவன் வேடம்.
எங்கள் இருவரின் தோற்றப் பொருத்தமும் மகரிஷி அந்த நாவலில்
எழுதியிருந்ததைப் போலவே அமைந்திருந்ததுதான் இந்தப் படத்தின்
வெற்றிக்கே காரணம்.
சம்பத் வேடத்தில் நடித்த ரஜினிக்கு நல்ல புகழ், புகழேணியில்
மளமளவென்று நாலு படியேறிட்டார்.
'சார் அநியாயமா ரஜினிக்கு இந்த வேடத்தைக் கொடுத்து, அவரை
தூக்கி விட்டுட்டீங்களே', என சில சினிமா உலக நண்பர்களும்
ரசிகர்களும் அங்கலாய்த்தனர்.
அவர்களின் அறியாமையை நினைத்து மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.
ஒரு மனிதன் எவ்வளவு உயர வேண்டும்; எப்படியெல்லாம் அல்லல்பட
வேண்டும் அல்லது சந்தோஷப்பட வேண்டும் என்பது இறைவனால்
ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவை. என்னதான் கடுமையாக
உழைதச்தாலும் நமக்கு என்ன விதிக்கப்பட்டதோ அதுதானே கிடைக்கும்!
'ரஜினிக்கு வானுயர புகழ் வந்தேயாக வேண்டும் என்று
எழுதப்பட்டிருக்கிறபோது யார் தடுத்தாலும், எவர்
பொறாமைப்பட்டாலும் அவரது உயர்வைத் தடுக்க முடியாது', என்றேன்
என்னிடம் குறை சொன்னவர்களிடம்.
அதிர்ஷ்டம் வாயிற் கதைவைத் திறந்து ஆரத்தி எடுத்து அவரை
வரவேற்ற காலகட்டம் அது.
அந்தப் புகழுக்கு இயற்கை அவரிடம் பெற்ற விலை அதிகம்.
என்றாலும் பின்னாலும் பக்குவப்பட்ட மனிதாக, பன்முகக் கலைஞனாக
நின்ற ரஜினியிடம் அந்தப்புகழும் நிரந்தரமாகவே நின்றுவிட்டது!
-சங்கநாதன்
|