|
ரஜினியின் எளிமை (பாகம் 11)
ஒவ்வொரு ஷாட்டுக்கும் நடுவில் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தேன். ரஜினியைத் தனியாக எடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவர், "என்ன ஒவ்வொரு ஷாட்டுக்கும் நடுவிலே எடுத்துக்கிட்டே இருக்கீங்க?" என்று எரிச்சல்படுவது போல் கேட்டார். எனக்கு மிகுந்த மனக்கஷ்டமாகி, கேமராவை எடுத்துக் கொண்டு ஸ்டூடியோவின் கடைசி தளத்திற்குச் சங்கடமாக நடந்துப் போனேன்.
'புவனா ஒரு கேள்விக்குறி' எழுத்தாளர் மகரிஷி எழுதி 'மாலை மதி'யில் வெள்ளிவந்த நாவலாகும். அந்தப் படத்தைப் பொறுத்த வரையில் ஸ்டைல், வேகம் இல்லாமல் மிதமாக, நிதானம் தவறாதவராக ரஜினி நடிக்க வேண்டும். தவிர அதில் வசனங்கள் அதிகம். அதிலும் இலக்கிய வசனங்கள் அதிகமிருந்தது.
படபிடிப்பிற்கு வந்த ரஜினி வசனங்களைப் பார்த்து மலைத்துப் போனார். தயங்கினார். "நீண்ட வசனங்களை ஒரே ஷாட்டில் பேச வேண்டிய அவசியமில்லை. முடிந்த மட்டும் பேசுங்கள் ஷாட்டை கட் பண்ணி எடுத்துக் கொள்ளலாம்" என்று டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் யோசனை சொன்னார்.
படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீரா. 'பட்டினப் பிரவேசம்' படத்தில் (நிஜமாகவே) நாக்கால் மூக்கைத் தொட்டு அறிமுகமானவர் அவர். 'புவனா ஒரு கேள்விக் குறி'யில் ரஜினி அவரை சீண்டிப் பார்ப்பதற்காக 'உன்னைக் காதலிக்க முடியாது. கல்யாணம் பண்ண முடியாது' என்று கூறுவார். அதைக் கேட்டு மீரா கோபத்தில் கிணற்றில் விழுந்து விடுவார். ரஜினி கிணற்றில் குதித்து காப்பாற்றும்போது மீரா இறந்து விடுவார்.
இந்தக் காட்சிக்கான படப்பிடிப்பு சென்னை போரூர் அருகில் நடந்தது. அதற்காக அதிக ஆழமில்லாத கிணறு ஒன்று கிடைத்தது. ஆனால் அதில் 'மணம்' கமழும் அழுக்குத் தண்ணீர் இருந்தது. ஆனால் அந்தப் பகுதியில் அதைவிட்டால் வேறு பொருத்தமான கிணறு இல்லை. அப்படியே கிணறு இருந்தால், நிறைய தண்ணீர் இருந்தது. ரஜினிக்கோ நீச்சல் தெரியாது. வேறு லொகேஷனுக்குப் போய்ப் பார்க்கலாமா என்று யூனிட்டார் யோசித்தபோது, அதை அறிந்த ரஜினி, "தண்ணீர் அழுக்கா இருந்தாலென்ன? கொஞ்ச நேரம் தானே நடிக்கப் போறேன்...!" என்று அவர்களது தயக்கத்தைப் போக்கி, முகம் சுளிக்காமல் அழுக்குத் தண்ணீரில் குதித்து நடித்தார்.
எளிமை என்றால் ரஜினிதான்
இதே படத்திற்காக "விழியிலே மலர்ந்தது. உயிரிலே கலந்தது" என்ற பாடல் காட்சியில் ரஜினி-மீரா நடிக்க அதை ஒரே நாளில் படமாக்க முடிவு செய்திருந்தார்கள். சத்தியவேடு அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டது. படப்பிடிப்பு நடைபெற்றபோது ஒலி அமைப்பு கெட்டுப் போனது. அதனால் மீதியை மறுநாள் படமாக்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்த படப்பிடிப்புக் குழுவினர் இரவு அங்கேயே தங்கும்படி ஆனது. அந்தப் பகுதியில் தங்குவதற்கு எந்த வசதியுமில்லை. தன் வீட்டு மொட்டை மாடியில் தங்க இடமளித்தார் ஒருவர். விரிப்பதற்கு எதுவுமின்றி வெறுந்தரையில் படுத்துறங்கினார் ரஜினி. நல்ல கொசுக்கடி வேறு.
ரஜினி நடித்த புவனா ஒரு கேள்விக்குறி, காயத்ரி, ஆடுபுலி ஆட்டம் ஆகிய படங்களின் ஸ்டில் போட்டோ கிராபர் அழகப்பன். மஞ்சள் சிலக் சட்டையோடு வேஷ்டி அணிந்து பார்க்க 'பளிச்' சென்று காட்சியளிக்கும் இவர், யாருடனும் அநாவசிய பேச்சு வைத்துக் கொள்ளமாட்டார். அது ஹீரோவாக இருந்தாலும் சரி, டைரக்டராக இருந்தாலும் சரி.
'புவனா ஒரு கேள்விக்குறி' படப்பிடிப்பில் ஒரு நாள் அழகப்பன் சிவக்குமாரை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். அதை கவனித்துக் கொண்டிருந்த ரஜினி அழகப்பனிடம் சென்று, "சார், என்னையும் படமெடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அப்போதிருந்த சூழ்நிலையில் வளர்ந்து வரும் நடிகரான ரஜினியின் கோரிக்கையை அவர் நிராகரித்திருக்கலாம். அவர் முடியாது என்று சொல்லியிருந்தால் ரஜினி பேசாமல் போயிருக்க வேண்டியதுதான். ஆனால் அழகப்பன் ரஜினியை நிற்கச் செய்து பல கோணங்களில் படமெடுத்தார். அது ரஜினிக்குப் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அழகப்பனுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனார்.
ரஜினிக்குப் பிடித்த பானம்
ரஜினிக்கு அப்போதெல்லாம் இளநீர் அருந்துவதென்றால் மிகவும் இஷ்டம். யூனிட் ஆட்களிடம் இளநீர் வாங்கித் தரச் சொல்லுவார். ஆனால் யாரும் அவரைப் பொருட்படுத்தமாட்டார்கள். அதனால் தன்னிடமுள்ள பணத்தைக் கொடுத்து இளநீர் வாங்கி வரச் செய்து அருந்துவார்.
ஒரு நாள் தன்னிடம் பணமில்லையென்று அழகப்பனிடம் பத்து ரூபாய் வாங்கி இளநீர் அருந்தினார். சில நாட்களில் பணத்தை ரஜினி திரும்பக் கொண்டு வந்து கொடுத்த போது அழகப்பன் வாங்க மறுத்தார். ரஜினி, "நீங்கள் வாங்கிக் கொள்ளவில்லையென்றால் என் மனம் கஷ்டப்படும்" என்று பிடிவாதமாகக் கொடுத்துவிட்டார்.
இப்படி ரஜினிக்கு இளநீர் வாங்கித் தர மறுக்கும் யூனிட்டிலுள்ளவர்களைக் கண்ட தயாரிப்பு நிர்வாகி, அவர்களிடம், "இப்படி அவரை நீங்க இளக்காரமா நினைக்கிறீங்க. அவர் ஒரு நாள் பெரிய நடிகராக வரப்போறாரு பாருங்க" என்று ஆதரவாகப் பேசுவார்.
கார்
ஸ்டூடியோவிற்கு வரும் கார்களையெல்லாம் ரஜினி ஆர்வமாகக் கவனித்துக் கொண்டிருப்பார். தனக்குத் தெரிந்த டிரைவர்களிடமெல்லம், "இந்த கார் என்ன விலை?" இதில் எது நல்ல கார்? எது ரொம்ப நாளைக்கு உழைக்கும்?" என்றெல்லாம் கேட்பார். அத்தோடு "நானும் இப்படி ஒரு கார் வாங்க முடியுமா?" என்று அவர்களிடம் கேட்பார்.
இதற்கு ஆறேழு ஆண்டுகள் கழித்து, ரஜினி பெரிய அந்தஸ்துக்கு வந்த நிலையில், தன்னுடன் திரைப்படக் கல்லூரியில் படித்த நண்பர்களான விட்டல்-ஞானம் இயக்கும் 'சித்திரமே சித்திரமே'யில் கௌரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். படத்தில் அவர் ஒரு சண்டைக் காட்சியில் மட்டுமே வருவார். அதில் நடிப்பதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களிடம், "எந்தக் காரணம் கொண்டும் என்னைப் புகைப்படமெடுக்கக் கூடாது" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். கௌரவ வேடத்தில் தான் நடிப்பதைப் பெரிதாக விளம்பரப்படுத்தி விட்டால் அதனால் ரசிகர்கள் ஏமாறக் கூடுமென்று ரஜினி அப்படி நிபந்தனை விதித்திருந்தார்.
படத்திற்கு புகைப்படமெடுத்த அழகப்பனிடம் ரஜினியின் நிபந்தனை பற்றிச் சொன்னார்கள். அவரும் 'சரி' என்றார்.
படப்பிடிப்புக்கு வந்த ரஜினி வேலைகளை முடித்த பின் அழகப்பன் அங்கிருப்பதைக் கவனித்தார். மகிழ்ச்சியோடு அவரது அருகில் சென்று "சார் எப்படியிருக்கீங்க? பார்த்து ரொம்ப நாளாச்சுல்லே?" என்று கேட்டபடி சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அழகப்பன் ரஜினியிடம், "ஸ்டில் எடுத்துக்கலாமா?" என்று கேட்டார் "ஓ தாராளமா" என்று முகச்சுளிப்பு ஏதுமின்றி புகைப்படத்திற்குப் போஸ் தந்துவிட்டு விடை பெற்றுக் கொண்டார்.
அதைப் பார்த்த அத்தனைப் பேருக்கும் வியப்பு. அழகப்பனைச் சூழ்ந்து கொண்டு, "எங்ககிட்ட அவ்வளவு கண்டிப்பா ஸ்டில் எடுக்கக் கூடாதுன்னு சொன்ன ரஜினி, நீங்க கேட்டதும் மறுக்கவே இல்லையே, எப்படி சார்?" என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டார்கள்.
இதற்குப் பல மாதங்களுக்குப் பின் ஒரு நாள் ஏவிஎம்மில் படப்பிடிப்பிலிருந்தார் ரஜினி. மதிய உணவு இடைவேலை முடிந்து மீண்டும் செட்டுக்கு வந்து கொண்டிருந்தவர், அருகிலிருந்த ஹாலில் அழகப்பன் இருந்ததை அரைகுறையாகக் கவனித்து விட்டு, செட் வாசல் வரை போய், மீண்டும் ஹால் பக்கம் வந்தார். "சார், நல்லா இருக்கீங்களா?" என்று நலம் விசாரித்து விட்டு, "நான் வரும்போது நீங்க தானோன்னு சந்தேகத்தில் வாசல் வரை போயிட்டேன். எதுக்கும் சந்தேகத்தைத் தௌ¤வுப்படுத்திக் கொள்ளலாமுன்னு திரும்பி வந்தேன். வர்றேன் சார்" என்று வணக்கம் சொல்லிவிட்டுப் போய்விட்டார். ரஜினி வேகமாக வந்ததும், வேகமாக திரும்பிப் போனதும் அழகப்பனுக்கு கனவு போலிருந்தது.
சீனியர் புகைப்படக்காரரான அழகப்பனிடம் ரஜினி அப்படி மரியாதை காட்டியிருக்கிறாரென்றால் இளைஞரான ரவியிடம் எப்படி நடந்து கொண்டார்.
ரஜினி முதன் முதலாக கதாநாயகனாக நடித்த பைரவி, ஜானி, துடிக்கும் கரங்கள், கை கொடுக்கும் கை, சிவா, கங்குவா (இந்தி) ஆகிய படங்களில் போட்டோகிராபர் ரவி.
அப்படித்தான் ரவி, ரஜினியை 'மூன்று முடிச்சு' படப்பிடிப்பில் சந்தித்தார். அவர் அங்கு சென்றது ஸ்ரீதேவியைப் படமெடுக்க.
"அதற்கு முன் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்து விட்டு அவரை பாலச்சந்தர் போகச் சொல்லி விட்டார். ஆனால் ரஜினி போகாமல் ஸ்ரீதேவி வசனம் பேசி நடிக்கும் காட்சியை எப்படி படமாக்குகிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த இடத்தில் அவருக்கு வேறு எந்த சிந்தனையும் வரவில்லை. அப்போதே ரஜினி பெரிய அளவில் வரப்போகிறார் என்று நினைத்தேன்.
'பைரவி' நேரத்தில் ரஜினியால் ஓரளவுதான் தமிழில் பேச முடியும். புரிவதற்கும் சற்று சிரமப்படுவார். அதனால் தனக்கு ஷாட் இல்லாத நேரத்தில் பிறடம் ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்காமல் உதவி இயக்குநரிடம் 'இந்த வசனம் எப்படிப் பேச வேண்டும்?' 'இந்த வசனத்திற்கு அர்த்தம் என்ன?' என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பார் ரஜினி.
அதுமட்டுமின்றி, கையில் சாட்டையை வைத்து நடிக்கின்ற காட்சிகளில், சாட்டையைப் பல விதமாக ஸ்டைலாக வீசிப் பார்ப்பார். இப்படி ஏதாவது துடிப்புடன் செய்வாரே தவிர அரட்டை அடிப்பது, வம்பு பேசுவது என்பதெல்லாம் கிடையாது. இந்த குணம் இன்றைக்கும் உண்டு.
இன்றும் ஷாட் இல்லாதபோது சும்மா உட்கார்ந்திருக்காமல் எந்த ஷாட்டில் எப்படி முகபாவம் காட்டலாம் எப்படி ஸ்டைஸ் பண்ணலாம் என்றுதான் யோசிப்பாரே தவிர அனாவசிய அரட்டை இருக்காது.
'பைரவி'யில் ஓடுகின்ற பாம்பைத் தூக்கி எறிவது போல் ஒரு காட்சி. அந்த சமயம் ரஜினியிடம் பாம்பைத் தூக்கிப் பிடிக்கச் சொல்லி சொன்னேன். மற்றவர்கள் வேண்டாமென்று தடுத்தாலும், ரஜினி பயப்படாமல் பாம்பைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அந்த போஸ் செய்தார். அது படத்தில் இடம் பெறாவிட்டாலும் நான் எடுத்த புகைப்படம், போஸ்டர் விளம்பரங்களுக்கு பெரிதும் பயன்பட்டது" என்ற ரவி, ரஜினியோடு தனக்கு ஏற்பட்ட பிற அனுபவங்களைச் சொன்னார்.
"ஜானி' படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். இதில் சுஹாசினி கேமரா உதவியாளராக இருந்தார். 'ஜானி' வளரும் நேரத்தில்தான் சுஹாசினி 'நெஞ்சத்தைக் கிள்ளாதே'யில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பகுதி முடித்து விட்டு மீண்டும் 'ஜானி'யில் வேலை செய்ய வந்துவிடுவார். அப்போது ரஜினி, "சுஹாசினி நடிகையாயிட்டாங்க. அவரை கனமான லைட்டுகளை (ஒளிப்பதிவு உதவியாளர்கள் வேலைகளில் அதுவும் ஒன்று) தூக்கச் சொல்லாதீங்க! பார்த்து நடந்துக்குங்க..." என்று யூனிட்டிலுள்ளவர்களிடம் மரியாதையாகச் சொல்வது போல் பேசி கலாட்டா செய்வார்.
'நினைத்தாலே இனிக்கும்' அல்லது 'ப்ரியா' படமென்று நினைக்கிறேன். அதன் படப்பிடிப்பிற்காக ரஜினி சிங்கப்பூர் செல்லவிருந்தார். அது பற்றி அவரிடம் பேசுகையில், "நான் சிங்கப்பூரில் கேமரா ஒன்று வாங்கப் போகிறேன்" என்றவர் "உங்களுக்கு ஏதாவது தேவையா?" என்று கேட்டார்.
எனக்கு ஒரு கேமரா வாங்கி வரும்படி சொன்னேன். 'சரி' என்றார். சிங்கப்பூர் சென்று திரும்பியவரிடம், ''கேமரா வாங்கி வந்தீர்களா?" என்று கேட்டேன்.
"ரவி எனக்கு பணம் சரியா கிடைக்கலே. அதனாலே எனக்கு மட்டும் ஒரு கேமரா வாங்கினேன்" என்றார். எனக்கு கோபமாகிவிட்டது. "நீங்களும் உங்க கேமராவும்...." என்று முறைப்பாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டேன். அதைப் பின்னாளில் நினைவு வைத்து "இப்பவும் கோபப்படுறீகளா?" என்று கேட்பார். எனது மைத்துணி (நடிகை) சுமலதாவை எங்காவது படப்பிடிப்பில் பார்த்தாலும் "என்ன, உங்க ரவிக்கு முன் கோபம் ஜாஸ்தி போலிருக்கே, இப்பவும் அப்படித்தானா?" என்று விசாரிப்பார்.
'சிவா' படத்தின் புகைப்பட ஆல்பம் பார்த்து ரஜினி பிரமித்து போய் 'சூப்பர்' என்று ஐந்து முறை திரும்பத் திரும்பச் சொன்னார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதே படத்தில் முதல் நாள் படப்பிடிப்பில் ஒரு சம்பவம்.
ஏவிஎம்மில் ரஜினியும் ஷோபனாவும் பங்கு கொண்ட பாடல் காட்சியொன்று படமாக்கினார்கள். பாடல் காட்சி என்பதால் இருவருக்கும் உடைகள் 'ரிச்'சாக இருந்தது. அதனால் ஒவ்வொரு ஷாட்டுக்கும் நடுவில் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தேன். ரஜினியைத் தனியாக எடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவர், "என்ன ஒவ்வொரு ஷாட்டுக்கும் நடுவிலே எடுத்துக்கிட்டே இருக்கீங்க?" என்று எரிச்சல்படுவது போல் கேட்டார். எனக்கு மிகுந்த மனக் கஷ்டமாகி, கேமராவை எடுத்துக் கொண்டு ஸ்டூடியோவின் கடைசி தளத்திற்குச் சங்கடமாக நடந்துப் போனேன். சிறிது நேரத்தில் ரஜினியின் உதவியாளர் ஜெயராமன் என்னைத் தேடிக் கொண்டு வந்தார். ரஜினி கூப்பிடுவதாகச் சொன்னார். சரி என்று நானும் ரஜினியிடம் சென்றேன்.
ரஜினி என்னிடம், "ரொம்ப கோபமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்" என்றார். "ஆமா, சார். என்னை நீங்க மோசமா திட்டியிருந்தாகூட கவலைப்பட்டிருக்க மாட்டேன். என் தொழிலை இழிவு செய்வது போல் பேசினால் என்னால் தாங்க முடியாது" என்றேன்.
அதற்கு ரஜினி, "தப்பா நினைக்காதீங்க. உங்ககிட்ட அப்படி நான் பேசியிருக்கக் கூடாதுதான். இன்னிக்கு எனக்கு உடம்பு சரியில்லே. அதனால்தான் அப்படி எரிச்சல் பட்டுட்டேன், ஸாரி" என்றார். ரஜினி இருக்கும் அந்தஸ்துக்கு என்னிடம் அவர் வருத்தம் தெரிவிக்கத் தேவையில்லைதான். ஆனாலும் மனமறிந்து யாரையும் புண்படுத்தாத பண்புடையவர் அவர்."
ரஜினிபற்றி கமல் என்ன சொல்கிறார்?
அடுத்த இதழில்....
Previous |
|
Next |
| |