ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர் (பாகம் 16)
நாடகத்தில் வசனம் பேசும்போது வேகம் இருக்கும். வேகத்தைக் குறைக்கச் சொன்னால் 'சரி' என்பான். அவனையும் மீறி வேகம் வந்துவிடும்.
ர‘ஜ்பகதூரை பெங்களூர் சிட்டி மார்க்கெட் பஸ் நிலையத்தில் டிரைவராக சந்தித்தபோது, ரஜினியைப் போலவே அதிகம் பேசாத இயல்புடையவராக இருந்தார்.
"நானும் ரஜினியும் பெங்களூரில் அதிகம் சந்தித்துப் பேசிய இடங்கள் (கண்டக்டராக இருந்தபோது) ராமகிருஷ்ணா மடமும், சாம்ராஜ் பேட்டை சர்க்கிளில் உள்ள ஆயூர்வேத மெடிக்கல் ஷாப் ஜன்னல் திண்டிலும்தான்!" என்ற ராஜ்பகதூர், ரஜினி தனக்கு 1970-ல் அறிமுகமானதாகச் சொன்னார்.
"நான் ரஜினியை 'சிவாஜி' என்றுதான் அழைப்பேன். கெட்ட வார்த்தைகளுடன் சரமாரியாகப் பேசிக் கொள்வோம்.
அப்போதெல்லாம் ரஜினிக்கு அடிதடியில் நாட்டம் அதிகம். வம்புக்கு போக மாட்டான். வந்த சண்டையை லேசில் விடமாட்டான்.
எப்போதும் வில்லத்தனமாகத்தான் பார்ப்பான். நடவடிக்கையும் முறைப்பாக இருக்கும். ரஜினி நாடகத்தில் மட்டுமின்றி, சினிமாவிலும் வில்லனாகத்தான் நடிக்க ஆசைப்பட்டான்.
சிவாஜியின் படங்கள்தான் ரஜினிக்கு அதிகம் பிடிக்கும். ஒரே படத்தைப் பல முறை பார்த்து இருக்கிறோம். தியேட்டரில் கூட்டம் அதிகமாக இருந்தால் ரகளை செய்துதான் டிக்கெட் எடுப்போம். ரஜினி சிவாஜியின் பயங்கர வெறியன் என்றால் அது சரியாகத்தான் இருக்கும்.
படங்களைப் பார்த்து விட்டு கதை சொல்லும் போது, எந்தெந்த நடிகர் எப்படி நடித்தார் என்பதை ரஜினி அப்படியே செய்து காட்டுவான். மிமிக்ரி அவனுக்குக் கைவந்த கலை. கன்னடப் படங்களை எல்லாம் அவன் அதிகம் பார்க்க மாட்டான்.
இப்போதிருப்பதை விட அப்போது நான்கு மடங்கு தாட்டியாக இருந்தான். உடையில் ஒரு ஒழுங்கு இருக்காது. அவனுடைய தனித்தன்மை அந்த வேகம்தான்.
நான் ரஜினியுடன் பேசிக் கொண்டே நடந்து செல்லும்போது, அவன் முகத்தைத் திரும்பிப் பார்க்கலாமென்றால் எனக்கு முன்னே தூரமாக நடந்து போயிருப்பான். நான் ஓடிப்போய் ரஜினியிடம், "ஏண்டா கொஞ்சம் மெதுவாகத்தான் போயேன். உன் வேகத்துக்கு என்னால் நடக்க முடியாதடா"என்றால், "அட போடா உனக்காகத்தான் நான் மெதுவாக நடக்கறேன். இதையே நீ வேகம்னு சொல்றே. சரியான சோம்பேறிடா நீ" என்பான்.
ரஜினி எனக்கு அறிமுகமானதில் இருந்தே ஓயாமல் சிகரெட் பிடிப்பான். எனக்கு அந்தப் பழக்கமில்லை. நாளடைவில் ரஜினி சிகரெட்டிலும் ஸ்டைல் பண்ண ஆரம்பித்தான். எனக்கு அது வேடிக்கையாக இருந்தது. கேட்டால், "சினிமாவில் நடிக்கப் போகிறேன். நான் நடிச்சா யார் பார்க்கறது? பார்க்கறதுக்கு ஏதாவது புதுசா பண்ணனும். அதுக்காகத்தான் இந்த ஸ்டைலெல்லாம்" என்றான்.
பஸ்ஸில் செல்லும்போது ரஜினி 'ரைட்' என்று இழுத்துக் குரல் கொடுப்பதே ஒரு லயத்தோடு இருக்கும். கல்லூரி மாணவிகள் எல்லாம் ரஜினியின் சிகரெட் ஸ்டைலை வேடிக்கை பார்ப்பார்கள். டிகக்கெட் புத்தகத்தின் மீது சிகரெட்டை வைத்து, அப்படியே தூக்கி அடித்து வாயில் கவ்விக் கொள்வான்.
தலைமுடி நெற்றியில் வந்து விழுந்து அடிக்கடி முகத்தை மறைக்கும். அப்படியே தலையைக் குலுக்கி முன் முடியைப் பின்னுக்குத் தள்ளுவான். இல்லாவிட்டால் தலைமுடியைக் கோதி விட்டுக் கொள்வான்.
பஸ் சென்று கொண்டு இருக்கும்போது சிறு இடைவெளி கிடைத்தாலும் சிகரெட் புகைக்காமல் இருக்க மாட்டான். ஏதாவது ஒரு நிறுத்தத்தில், சில விநாடிகள் பஸ் நிற்கும் இடைவெளியில் சிகரெட் பற்ற வைத்து வேகமாக இரண்டு மூன்று முறை இழுத்துப் புகைத்துவிட்டுத் தூக்கி எறிந்துவிடுவான்.
அடிக்கடி பஸ்ஸில் சில்லறை காரணமாக தகராறு, அடிதடியெல்லாம் ஏற்படும். அதனால் ரஜினிக்கு 'மெமோ' கொடுப்பார்கள். இது ரஜினிக்கு ரொம்ப சகஜம்.
ரஜினி பெண்களிடம் அவ்வளவாக பேச்சு வைத்துக் கொள்வதில்லை. பஸ் நிலையத்தில், நிறுத்தங்களில் யாரையும் விட்டு வைக்காமல் எல்லோரையும் ஏற்றிக் கொண்ட பின்பே 'ரைட்' கொடுப்பான்.
கல்லூரியில் படிக்கும்போதே ரஜினிக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவான். ஆனாலும் நொறுக்கு தீனியோ, உணவோ எடுத்துக் கொள்ள மாட்டான்.
மது அருந்தினாலும் ரஜினி வீட்டுக்கு சாப்பிடப் போய்விடுவான். ஓட்டலில் எல்லாம் சாப்பிடுவது இல்லை. இரவு தாமதமாக வீட்டுக்குப் போனாலும் காலை 5 மணிக்கு வேலைக்கு வந்துவிடுவான். ரஜினிக்கு இப்படி மதுப் பழக்கம் இருந்தாலும் கூட அவன் உடல் வாகைப் பார்த்து நான் வியப்படைவேன். அவ்வளவு அழகான உடல் கட்டு அவனுக்கு.
ரஜினி கறுப்பு நிறமென்பதால் 'கரியா' என்றுதான் அழைப்போம். அப்போதே ரஜினிக்கு கறுப்பு உடையில்தான் அதிக நாட்டம். என் வீட்டுக்கு வந்தால் எனது உடைகளைத் தானே எடுத்துப் போட்டுக் கொள்வான். அதிலும் அடர்த்தியான வண்ணத்தில்தான் உடையைத் தேர்ந்தெடுத்து அணிவான்.
நாடகம்
எங்கள் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடக்கும் ஊழியர் விழாவில் நாடகம் நடத்துவோம். ரஜினி கண்டக்டரான புதிதில் நடிப்பில் நாட்டமின்றி இருந்தான். அவனை வற்புறுத்தி ஒரு விழாவில் நடிக்க வைத்தேன்.
ரஜினி பங்கு கொண்ட முதல் நாடகம் 'யார் சூளை?' (யார் வேசி? என்று அர்த்தம்) அதில் அவனுக்கு தந்தை வேடம். முதல் முறை மேடை அனுபவம் என்றே தெரியாத அளவுக்கு நன்றாக நடித்துவிட்டான். தொடர்ந்து பதினைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தான்.
'எச்சம நாயக்கர்' என்ற சரித்திர நாடகத்தில் ரஜினி எச்சம நாயக்கராக நடித்தான்.
'துரியோதனன்' நாடகத்தில் ரஜினி துரியோதனனாக நடித்தான். இந்த நாடகத்தில் ரஜினி, கதையை (ஆயுதம்) ஸ்டைலாகச் சுழற்றியபடியே கைகளில் மாற்றி மாற்றிப் பிடித்து வசனம் பேசுவான். அதற்கு பயங்கர கைத்தட்டல் இருக்கும்.
வேகம்
நாடகத்தில் வசனம் பேசும்போது வேகம் இருக்கும். வேகத்தைக் குறைக்கச் சொன்னால் 'சரி' என்பான். அவனையும் மீறி வேகம் வந்துவிடும்.
இப்படி அவன் நடிப்பில் திறமை கூடி ஆர்வம் வளர்ந்தபோது, ஒருநாள் என்னிடம், "சென்னையில் எனக்கு திரைப்படக் கல்லூரியில் சேர ஆசையாக இருக்கிறது. இடமும் கிடைத்துவிடும். ஆனால் அங்கு சேருவதற்கு 900 ரூபாய் கட்ட வேண்டும். என்னிடம் பணமில்லையே' என்றான்.
"கவலைப்படாதே. நான் உனக்கு உதவுகிறேன்" என்றேன். கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்தேன். "இதை வைத்து பணமாக்கிக் கொள்" என்று கூறியபோது நெகிழ்ந்து போய் கைகளைப் பற்றிக் கொண்டான்.
"இது போதாது. இரண்டு வருடம் பயிற்சி முடியும் வரை உதவுவாயா?" என்று கேட்டான். நான் 'உதவுகிறேன்' என்று உறுதி கூறினேன். கையில் சத்தியம் வாங்கிக் கொண்டான். அதன்படி ரஜினி சென்னை சென்ற பின் மாதம் தவறாமல் பணம் அனுப்பி வைத்தேன். அவனது வீட்டில் இருந்தும் பணம் அனுப்புவார்கள். அதுவும் போதாமல் மேலும் பணம் கேட்டு கடிதம் எழுதுவான். நானும் அனுப்பி வைப்பேன்.
ரஜினி நடிகராகி சம்பாதித்த பின் நகையை மீட்டுக் கொண்டு வந்தான். "என் நினைவாக உன்னிடமே இருக்கட்டும்" என்று திருப்பிக் கொடுத்துவிட்டேன்.
மூன்று முடிச்சு
பாலச்சந்தர் ரஜினியிடம் 'மூன்று முடிச்சு' படத்தில் நடிக்க சந்தர்ப்பம் தந்தபோது, "தமிழை நன்றாகக் கற்றுக் கொள்" என்று கூறியதாக பெங்களூர் வந்தான். நானும் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். இரவு பகல் பாராமல் ஒரே மூச்சில் தமிழைக் கற்றுக் கொண்டான். அவனது வேகமும், ஆர்வமும் எனக்கு இன்றைக்கும் வியப்பைத் தருகிறது.
நடிகரான பின் ரஜினி எப்போது பெங்களூர் வந்தாலும், என்னைப் பார்க்காமல் சென்றதில்லை. நேராக நான் இருக்கும் இடம் தேடி வந்துவிடுவான். தன் காரில் ஏற்றிக் கொண்டு தான் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று விடுவான்.
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சென்னை வரச் சொல்வான். என்னால் முடிந்த வரையில் போவேன். இப்போதெல்லாம் எப்போதாவதுதான் போக முடிகிறது.
சில சமயம் ரஜினி தன் அண்ணனுக்கு போன் செய்ய, அவர் டிக்கெட் எடுத்துக் கொடுத்து சென்னைக்கு அனுப்புவார். சென்னையில் ரஜினியோடு இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வருவேன். சென்னையில் ரஜினியின் வீட்டில்தான் தங்குவேன். அவனுடைய உடைகளைத்தான் அணிந்து கொள்வேன்.
சென்னையில் ஒரு நாள் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் இரவு 10.00 மணிக்கு மது அருந்தியபடியே பேச ஆரம்பித்தது, மறுநாள் காலை 10.00 மணி வரை நீடித்தது. அன்று அவனுக்குப் பல பிரச்னைகள். அதை எல்லாம் சொல்லி தன் துயரங்களைத் தீர்த்துக் கொண்டான்.
லட்சம்
ரஜினியிடம் எனக்கிருக்கும் நட்பில் எத்தனை லட்சம் பணம் கேட்டாலும் தந்து விடுவான். ஆனால் நான் கேட்டதில்லை. ஒரு சமயம் "பெங்களூரில் உனக்கு ஒரு பெரிய வீடு கட்டித் தருகிறேன்" என்றான். நான் ஒப்புக் கொள்ளவில்லை. இன்னொரு சமயம் தன்னுடன் இருந்து தன் சினிமா விஷயங்களைக் கவனிக்கச் சொன்னான். மறுத்துவிட்டேன்.
ரஜினிக்கு நான் ஆத்மார்த்த நண்பனாகத்தான் இருக்க விரும்புகிறேனே தவிர, அவனது பணத்தில், செல்வாக்கில் நான் குளிர்காய நினைக்கவில்லை. பெரும் புகழ் பெற்ற நடிகனின் நண்பன் என்ற அந்த ஒரு பெயரே எனக்குப் போதும்.
ரஜினிக்கு ஆரம்பத்தில் கன்னடப் படங்களில் நடிக்க விருப்பம் இருந்தது. ஆனால் சரியான சந்தர்ப்பங்கள் இல்லாததாலும், தமிழில் பிசியானதாலும், கன்னடத்தில் அதிகம் நடிக்கவில்லை. பின்னர் எத்தனையோ தயாரிப்பாளர்கள் கன்னடப் படங்களில் நடிக்கக் கேட்டும் ரஜினி ஒத்துக் கொள்ளவில்லை.
'சட்டம் ஒரு இருட்டறை' கன்னடப் படத்தில் நடிப்பதற்காக ரஜினியிடம் கால்ஷீட் கேட்டார் துவாரகீஷ். (அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை படங்களின் தயாரிப்பாளர்) அப்போது நானும் உடன் இருந்தேன்.
ரஜினி நடிக்க ஒப்புக் கொண்டாலும், "தமிழில் எனக்கு என்ன சம்பளம் தருகிறார்களோ, அதைத் தருவீர்களா?" என்று கேட்டான். துவாரகீஷ் அந்தச் சம்பளத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் சங்கர்நாக் அந்தப் படத்தில் நடித்தார். அதே காரணத்தால் 'மூன்று முகம்' கன்னடப் படத்திலும் அவரே நடித்தார்."
ரஜினிப் பற்றி நடிகை ராதா....
அடுத்த இதழில்...
Previous |
|
Next |
|