ரஜினியின் மீது நான்கு சூன்யம் (பாகம் 38)
நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவள் என்றாலும், மற்றவர்களது மத உணர்வுகளையும் மதிப்பவள். அதனால் ரஜினி சொன்ன காரணம் கேட்டு நெகிழ்ந்து போனேன்.
ரெஜினா வின்சென்ட் தொடர்ந்து கூறினார்:
ரஜினி தன் குடும்ப சூழ்நிலைகள், சிறு வயதிலேயே தாயார் இறந்து போனது, தன்னிடம் அன்பு காட்டாமல் உதாசீனப்படுத்திய உறவுகள், நட்புகள், தொழிலில் தன்னை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் என்று உள்ளத்திலிருந்தவற்றைக் கொட்டிய போது ரஜினியின் அடிமனதில் எவ்வளவு காயங்கள், ஏக்கங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்த எனக்கு ரஜினியின் மீது பரிவும் ஆழ்ந்த அனுதாபமும் உண்டானது.
அவனுக்கு அன்பான வார்த்தைகளால் ஆறுதல் கூறினேன். அப்படி ஆறுதல் கூற யார் இருக்கிறார்கள் என்று தேடினானோ என்னவோ, பிள்ளை இல்லாதவள் எப்படி ஒரு பிள்ளையைத் தத்து எடுத்துக் கொள்கிறாளோ, அதுபோல் அன்னையை இழந்த தாய்ப் பாசம் அறியாத ரஜினி என்னைத் தாயாகத் தத்து எடுத்துக் கொண்டான். அது அவனது வார்த்தைகளில், உணர்ச்சிகளில் தெரிந்தது. அவனது உணர்ச்சிக்குத் தடை போட விரும்பவில்லை நான்.
அந்த நேரத்தில் ரஜினியின் உணர்ச்சிகள் அவ்வளவுதான் இருக்கும். ஏனென்றால் அவன் ஒரு சினிமா நடிகனாயிற்றே என்று நினைத்தேன். ஆனால் பின்னர் நடந்த சம்பவங்களில் அவன் அதைப் பொய்யாக்கி விட்டான்.
மறுநாள் காலையில் ரஜினியிடமிருந்து எனக்கு போன் வந்தது. ''அம்மா, இன்று பகலில் நான் உங்கள் வீட்டிற்கு சாப்பிட வருவேன்'' என்று. என்னால் எப்படி மறுக்க முடியும்? வரச் சொன்னேன். எங்கள் வீட்டில் உள்ள அத்தனை பேரையும் ரஜினியுடன் உட்காரச் செய்து சாப்பிடச் செய்தேன்.
இது ஒரு நாளோடு நின்று விடவில்லை. தினமும் தொடர்ந்தது. என் கணவரோ, ''என்ன இது, ஒரு சினிமா நடிகரைத் தினமும் வீட்டில் அனுமதித்து சாப்பிடச் செய்வது?'' என்று சங்கடப்பட்டார். எனக்கும் பணிகள் நிறைய இருந்தன. ஆனாலும் என்னை அம்மா என்று நினைத்து அன்பை எதிர்பார்த்து வரும் ரஜினியை நோகடிக்க விரும்பவில்லை.
தினமும் ரஜினி என் வீட்டிற்கு வருவதைப் பற்றி ''ஆமா, ஏன் என் வீட்டிற்கு தினசரி வருகிறாய்? யார் உன்னை வரச் சொன்னார்கள்?'' என்று கேட்டேன்.
ரஜினிக்கு ராகவேந்திர சுவாமிகளைத் தினமும் தியானித்து வணங்கும் வழக்கம் உண்டு. அதைப் பற்றிக் குறிப்பிட்டு, ''ராகவேந்திரர் தான் உன் மம்மியைப் போய்ப் பார் என்று எனக்குச் சொன்னார்'' என்றான். நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவள் என்றாலும், மற்றவர்களது மத உணர்வுகளையும் மதிப்பவள். அதனால் ரஜினி சொன்ன காரணம் கேட்டு நெகிழ்ந்து போனேன்.
தினசரி வீட்டிற்கு வந்த பழக்கத்தில், ரஜினி வேலை நேரத்தில் குடிப்பதில்லை என்று அறிந்தேன். அதற்கு முன் ரஜினியின் சில நண்பர்கள் பகலில் அவனை வெளியில் அழைத்துச் சென்று, தாங்கள் குடிப்பதற்காக ரஜினியைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று அறிந்தேன்.
ரஜினியின் போக்கில் பின்னர் மாறுதல் தெரிந்தது. தினசரி வீட்டிற்கு வரும் ரஜினி, நான்கு நாட்கள் வருவது இல்லை. மீண்டும் வருவது, அப்புறம் இடைவெளி. இதற்கு காரணம் புரியவில்லை. ஒரு நாள் நான் கேட்டேன்.
''அப்பல்லாம் நான் '..... மருத்துவமனை'யில் இருந்தேன். போன முறை '...மருத்துவமனை'யில் இருந்தேன். என்னை அங்கு கொண்டு போய் விட்டுட்டாங்க'' என்றான்.
அப்போது எனக்கு சில உண்மைகள் புரிய வந்தது. இரவு-பகல் ஓயாமல் படப்பிடிப்பு, மது அருந்துதல், ஜரீதா பீடா போன்ற சில பழக்கங்களால் ரஜினியின் உடல் நிலையில் மட்டுமின்றி, மன நிலையிலும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.
அந்த போதை வஸ்துகளால் ரஜினியிடம் மாற்றம் ஏற்படுவதை நானும் உணர்ந்தேன். அதையெல்லாம் பார்த்து அவனுக்கு நல்லதொரு பாதுகாப்பு தேவையென்று கருதினேன். அவனது செயல்களைக் கண்டு வெறுப்பு வராமல் அன்பும் இரக்கமும் தான் என் மனதில் சுரந்தது.
ஒரு நாள் பிராமண நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். எப்போதும் போல் ரஜினி பிற்பகலில் வீட்டிற்கு வந்தான். அவன் தொடர்ந்து வருவதால் அவன் நடிக்கும் படம் சம்பந்தப்பட்டவர்களும் அவனைத் தேடி வருவார்கள். அன்று அவனைப் பார்ப்பதற்காக, அவனது படமொன்றின் ஆல்பம் கொடுத்துவிட்டுப் போனார்கள். அதை ரஜினி பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனைக் கவனித்துக் கொண்டிருந்த பிராமணர் என்னிடம், 'இவனை வீட்டிற்குள் நுழைய விடாதீர்கள். ஏனென்றால் இவனுக்கு நான்கு சூன்யம் வைக்கப்பட்டிருக்கிறது' என்றார்.
எனக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல. ரஜினிக்கு அந்த நேரத்தில் நிச்சயமாக ஒருவர் அன்பும் ஆதரவும் காட்டுவது அவசியம் என்று உணர்ந்தேன்'' என்றார் திருமதி வின்சென்ட்.
ரஜினி மறுபடியும் திருமதி. வின்சென்ட் வீட்டுக்கு சென்றாரா....
அடுத்த இதழில்
Previous |
|
Next |
|