இயல்புக்கு மாறான வெட்டியான் வேடத்தில் ரஜினி (பாகம் 32)
கம்பீரமான விஸ்வாமித்திரர் வேடம் என்னை விட ரஜினிக்குத்தான் பொருத்தமாக இருக்கும். ஆனால் வெட்டியான் வேடம் சற்று மென்மையானது. வசனங்களை மெதுவாகப் பேச வேண்டும். அது ரஜினியின் இயல்புக்கு மாறானது. அதனால் எங்களது தேர்வு ஆசிரியர் ரஜினியின் இயல்புக்கு மாறான வெட்டியான் வேடத்தில் நடிக்கச் செய்தார். ரஜினி அதையும் நன்றாகச் செய்தார்.
அசோக், ரஜினி பற்றி மேலும் கூறினார்:
எங்களது நண்பர் ஒருவருக்கு காலரா வந்து மருத்துவமனையில் அனுமதிக்கும்படி ஆனது. சிகிச்சை செய்தபின் எங்களை அறைக்குக் கொண்டு வந்து சில நாட்கள் இருந்தார்.
காலரா தொற்று நோய் என்பதால் அறையில் 'வெனிகர்' பயன்படுத்தும்படி டாக்டர் சொல்லியிருந்தார். அதனால் வெனிகர் பாட்டில் வாங்கி வைத்திருந்தோம். அது மிகவும் கசப்பாக இருக்கும். அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது ரஜினிக்கும் சதீஷ¨க்கும் ஒரு போட்டி எழுந்தது.
ஒரு பாட்டில் வெனிகரையும் ரஜினி குடித்துவிட்டால், அவருக்கு பிராந்தி பாட்டில் வாங்கித் தர வேண்டும் என்பது பந்தயம். அவ்வளவு கசப்பானதை ரஜினியால் குடிக்க முடியாது என்று எங்களுக்கெல்லாம் நம்பிக்கை.
ஆனால் ரஜினியோ, ஒரே மூச்சில் மடமடவென்று வெனிகரைக் குடித்துவிட்டு, பாத்ரூம் போய் மறுமூச்சில் அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டு 'எங்கே பிராந்தி பாட்டில்' என்று சதீஷிடம் வந்து நின்றார். சதீஷ் அசடு வழிந்தபடியே பாட்டிலை வாங்கி வந்தார்.
நாங்கள் அமைந்தகரையில் பிலிம் சேம்பருக்கு 47-ம் எண் பஸ்ஸில் செல்வது வழக்கம். இடம் கிடைக்காமல் புட்போர்டிலும் பஸ் சக்கரத்தின் மட்கார்டிலும் காலை வைத்து பக்கவாட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது எங்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதற்கும் விடுதலை கிடைத்தது. எப்படி?
எனக்கொரு சமயம் காய்ச்சல் வந்து ஒரு வாரமாகக் கல்லூரிக்குப் போகாமல் அறையிலேயே படுத்துக் கொண்டேன். அதற்குமேல் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை எனக்கு.
நண்பர்கள் தடுத்தும் கேட்காமல், பிடிவாதமாக பஸ் ஏறிவிட்டேன். பஸ்ஸில் இடமில்லாமல் நிற்க வேண்டியதாயிற்று. சிறிது தூரத்திலேயே எனக்குத் தலை சுற்றி மயக்கம் வந்து கீழே விழப் போனேன்.
ரஜினி என்னைத் தாங்கி பிடித்துக் கொண்டு சீட்டிலிருந்தவர்களை எழுப்பி என்னை உட்காரச் செய்து தானும் உட்கார்ந்து என்னைத் தன் மேல் சாய்த்துக் கொண்டார். அப்புறம் இதுவே எங்களுக்குத் தந்திரமாக அமைந்துவிட்டது.
பஸ்ஸில் உட்கார இடமில்லாமல் போகும் சமயங்களில், யாராவது மயங்கி விழுவது போல் நடித்து இடம் பிடித்துக் கொள்வோம்.
ஒரு நாள் அண்ணா சாலையில் 'மொகலே ஆஸம்' இந்திப் படம் இரவுக் காட்சி பார்த்துவிட்டு, புகாரியில் சாப்பிட்டுவிட்டு அமைந்தகரைக்கு நடக்க ஆரம்பித்தோம். வழியில் கோலமாவு ஏற்றிச் சென்ற லாரியில் எங்களுக்கு லிப்ட் கிடைத்தது.
மாவு மூட்டைகளின் மேல் நின்றபடி ஜாலியாக ராஜாக்களைப் போல் எங்களை எண்ணிக் கொண்டு, பாடிக் கொண்டு வந்தோம். எங்கள் இருப்பிடத்தில் இறங்கியபோது அத்தனை பேரும் வெள்ளை வெளேர் ஆகிவிட்டோம். கோல மாவெல்லாம் எங்கள் மீது அபிஷேகம் ஆகியிருந்தது.
இப்படி எங்கள் திரைப்படக் கல்லூரி வாழ்க்கையில் சம்பவங்கள் பல உண்டு.
ரஜினியும் நாங்களும் சில நாடகங்களில் நடித்திருக்கிறோம். சென்னையிலுள்ள கர்நாடக என்ஜின்யர்கள் அசோசியேஷன் நடத்திய வருடாந்திர விழாவில் மூன்று கன்னட நாடகங்கள் நடத்தப்பட்டன. அதில் நான், ரஜினி, சதீஷ், ரவீந்திரநாத் நால்வரும் நடித்தோம்.
'குண்டா குண்டா குருவத்தி' என்ற நாடகத்தில் மட்டும் ரஜினி இல்லை. 'வெக்தி' என்ற நாடகத்தில் ரவீந்திரநாத் அரசியல்வாதியாகவும் நானும், ரஜினியும் சி.பி.ஐ. அதிகாரிகளாகவும் நடித்தோம்.
'சர்வேஜனா சுகினோ பவந்து' என்ற நாடகத்தில் நான் ராஜாவாகவும் ரஜினி சேனாதிபதியாகவும், ரவீந்திரநாத் மக்களில் ஒருவராகவும் நடித்தோம்.
இந்த நாடகத்தில் ஒத்திகை பிலிம் சேம்பர் வளாகத்திலேயே நடைபெற்றது. நடத்தியவர் உஷா அரசு என்ற திரைப்படக் கல்லூரி நடிப்புப் பயிற்சி ஆசிரியர். எனக்கு நகைச்சுவையான ராஜா வேடம். திடீரென்று ரஜினியிடம் உஷா, "நீ சேனாதிபதி வேடத்தில் நடிக்கிறாயா?" என்று கேட்டார். ஒத்திகையிலேயே அந்த வேடத்தில் ரஜினி அசத்திவிட்டார்.
கல்லூரி ஆண்டு இறுதியில் எங்களது தேர்வுக்கான நாடகமாக அமைந்தது 'சம்பத் தர்மா'. அதில் நான் விஸ்வாமித்திரராகவும், ரஜினி வெட்டியானாகவும் நடித்தோம்.
கம்பீரமான விஸ்வாமித்திரர் வேடம் என்னை விட ரஜினிக்குத்தான் பொருத்தமாக இருக்கும். ஆனால் வெட்டியான் வேடம் சற்று மென்மையானது. வசனங்களை மெதுவாகப் பேச வேண்டும். அது ரஜினியின் இயல்புக்கு மாறானது. அதனால் எங்களது தேர்வு ஆசிரியர் ரஜினியின் இயல்புக்கு மாறான வெட்டியான் வேடத்தில் நடிக்கச் செய்தார். ரஜினி அதையும் நன்றாகச் செய்தார்.
கன்னடப் பிரிவு தேர்வில் நான் முதலாவதாகவும், ரவீந்திரநாத் இரண்டாவதாகவும், ரஜினி மூன்றாவதாகவும் வந்தோம்.
கல்லூரி வகுப்பில் அவ்வப்போது நாங்கள் இசைக்குத் தகுந்தபடி நடனமாடுவோம். நானும் மற்றவர்களும் வெள்ளை அரைக்கால் டிரையார், பனியனை அணிந்து ஆடுவோம். ரஜினியிடம் அதெல்லாம் வாங்கப் பணம் இல்லை. அதனால் வகுப்பு நேரத்தில் ரஜினி பேண்ட்டைக் கழற்றிவிட்டு ஜட்டியோடு ஆட ஆரம்பித்துவிட்டார்.
ரஜினி அணிந்திருந்த ஜட்டி, கிராமத்திலுள்ளவர்கள் அணியும் பட்டை பட்டையாக உள்ள நீளமான அரைக்கால் டிரவுசர் போலிருக்கும். எங்களோடு விஜயலட்சுமி (முதலில் இதே பெயரில் 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' உட்பட சில படங்களில் நடித்தவர், சில்க் ஸ்மிதா வந்தபின் 'நைலக்ஸ் நளினி' என்று பெயர் மாற்றிக் கொண்டார்), ஹேமா சவுத்ரி ('மன்மதலீலை'யில் அறிமுகமானவர்) ஆகிய மாணவிகளும் ஆடினார்கள்.
ரஜினியைப் பார்த்த தேவதாஸ் என்ற தெலுங்கு லெக்சரர், "நீ பேண்ட் போட்டே ஆடு" என்று சொல்ல, அந்த இடத்தில் சிரிப்பு அடங்க நீண்ட நேரமாயிற்று.
தேவதாஸின் தெலுங்கு வகுப்பில் இருபது மாணவர்கள் இருந்தனர். அவர்களோடு ஒப்பிட்டால் கன்னட மாணவர்கள் குறைவுதான். ஆனால் மாணவர்கள் எண்ணிக்கைக்கும் படம் காட்டுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. தெலுங்கு மாணவர்களுக்குப் பயிற்சிக் காலத்தில் அதிகமான படங்கள் காட்டப்பட்டன. அந்த அளவுக்குக் கன்னட மாணவர்களுக்குக் காட்டப்படவில்லை.
இந்தப் பாகுபாட்டைக் கண்டித்து நான் குரல் எழுப்பினேன். அதற்காக முதல்வர் ராஜாராம் என்னை விசாரணை செய்து கொண்டிருந்தார். அவரது அறையில் அவரிடம் நான் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க, வெளியே அனந்தராமன் என்ற தெலுங்கு மாணவர் என்னைப் பற்றித் தவறாகப் பேசப் போய், ரஜினி அவரை அடித்து உதைத்து விட்டார்.
இந்தக் காரணங்களால் நான் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுக் கல்லூரிக்குப் போக முடியாமல் ஆனது.
எங்களது பயிற்சியும் தேர்வும் முடிந்து எல்லா மாணவர்களும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் வீடுகளுக்குப் வாய்ப்புத் தேடிப் படை எடுத்தோம். எங்களது புகைப்படங்களை எல்லாம் அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தோம்.
கல்லூரி வாழ்க்கை முடிந்தாலும் பிலிம் சேம்பரில் திரையிடப்படும் படங்களில் பெரும்பாலானவற்றை அழைப்பு இல்லாமலே பார்த்து விடுவோம். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்பதால் அங்கு எங்களை யாரும் தடுக்க மாட்டார்கள். ஆனால் படம் ஆரம்பித்த பின்பே உள்ளே செல்வோம். தெரிந்த ஆள் இல்லாவிட்டால், முன் வரிசையில் அமர்ந்து பார்ப்போம். இடமில்லாவிட்டால் தரையில் உட்கார்ந்தும் பார்த்திருக்கிறோம். அப்படிப் பார்த்த படங்களில் ஒன்று 'பிரேமத காணிக்கை' என்ற கன்னடப் படம்.
படத்தில் கதாநாயகி ஆர்த்தி போலீஸ் நிலையத்துக்கு வருவார். அவரிடம் இன்ஸ்பெக்டர், கேடிகளின் படங்களைக் கொடுத்து அடையாளம் காண்பிக்கச் சொல்வார். ஆர்த்தி பார்வையிடும் படங்களில் ரஜினி, ரவீந்திரநாத், சதீஷ், என்னுடைய மற்றும் பல மாணவர்களின் புகைப்படங்கள் இருந்தன.
முதலில் அது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இப்படியாவது வாய்ப்பு வந்ததே என்று திருப்திப் பட்டுக் கொண்டோம். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது படத்தின் டைரக்டர் சோமசேகர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் படத்தில் எங்களது புகைப் படங்களைக் காண்பித்தமைக்கு நன்றியைச் சொன்னபோது அசடு வழிந்து நின்றார்.
பெங்களூருக்கு ரஜினி வந்தால் நாங்கள் ஒருவரையொருவர் சந்திக்காமல் இருந்ததில்லை. விடிய விடியப் பேசிக் கொண்டிருப்போம். சமீபத்தில் ரஜினி நேபாளம் செல்வதற்கு முன் பெங்களூர் வந்தபோது கூடச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.
நான் பாலசந்தர் அறிமுகத்தில் 'கல்யாண அகதிகள்' படத்தில் நடித்தேன். அந்த நேரத்தில் ரஜினி சென்னை வேளச்சேரியில் பெரிய மாளிகையொன்று எழுப்பிக் கொண்டிருந்தார். அந்த வீட்டைப் பற்றி அடிக்கடி அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். நானும் அங்கு அடிக்கடி செல்வேன்.
இப்போதிருக்கும் ராகவேந்திரா கல்யாண மண்டபம் போல் அதுவும் இடித்து இடித்துக் கட்டப்பட்ட வீடு. 'கட்டி' முடித்தபின் அங்கு அழைத்துச் சென்ற ரஜினி, "நீ சென்னை வந்தால்..... இது உன் அறை.... இது என்னோட அறை" என்றெல்லாம் சொன்னார்.
அதில் 40 அடிக்கு 80 அடி அளவில் நீளமான ஹால் ஒன்று இருந்தது. "இதுதான் ஹாலா?" என்று கேட்டேன். "இல்லை! இதுதான் மாஸ்டர் பெட்ரூம்" என்றாரே பார்க்கலாம்.
அந்த வீடு செண்டிமென்டாக ரஜினிக்கு ராசியாக அமையவில்லை. அது அவருக்குப் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தியது" என்றார் அசோக்.
ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?
அடுத்த இதழில்
Previous |
|
Next |
|