ரஜினியின் நிஜ சண்டை (பாகம் 24)
''படப்பிடிப்பு இல்லாத போது ரஜினி எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார். பிள்ளைகளோடு வெளியில் போவதுண்டு. உரிமையோடு உதவிகளைக் கேட்டுப் பெறுவார்.''
ஒரு நாள் காலையில் ரஜினி படப்பிடிப்பிற்குப் புறப்படும் அவசரத்தில் அறையை மூட மறந்துவிட்டார். அன்று மாலை மீண்டும் அவர் ஹோட்டலுக்குத் திரும்பிய போது, ஹோட்டல் நிர்வாகி தடுத்து நிறுத்தி, "ஏன் அறையை மூடாமல் போனீர்கள்?" என்று கேட்டார். அதற்கு வருத்தம் தெரிவித்த அவரிடம் மேற்கொண்டு கேள்விகள் கேட்க, ரஜினி எரிச்சல் அடைந்தார்.
"இப்ப என்ன ஆச்சு? அறையில் களவு போவதற்கு என்னுடைய உடைமைகள் ஏதுமில்லை. ஒரு செட் உடைகள் மட்டும்தான். அறையில் ஹோட்டலின் விலை உயர்ந்த பொருளும் கிடையாது" என்று ரஜினி யதார்த்தமாகச் சொல்ல, நிர்வாகி அவரை ஏளனமாகப் பேசி திட்ட ஆரம்பித்தார். ரஜினிக்கு கடும் கோபம் வந்துவிட்டது. அவரை ஓங்கி ஒரு அறை விட்டார். அவ்வளவுதான். ஹோட்டலின் அத்தனை ஊழியர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள்.
அவர்கள் கத்தி, கம்பு இப்படிக் கிடைத்த ஆயுதங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு விட்டார்கள். சமையல் அறையில் இருந்த பாத்திரங்களும் இதில் பங்குக்கு வந்துவிட்டன. கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயையும் கொண்டு வந்துவிட்டார்கள்.
ரஜினி இதையெல்லாம் கண்டு பயந்துவிடாமல் தன் சக்திக்கு முடிந்த மட்டிலும் சமாளித்தார். அவர்களிடம் இருந்த ஆயுதங்களைப் பிடுங்கித் தாக்கினார். ரஜினியின் வேகம் அவர்களைத் தடுமாற வைத்தது. அதற்குள் விஷயத்தைக் கேள்விப்பட்ட, அருகில் மற்றொரு ஹோட்டலில் இருந்த நான் எனது காரில் மயூராவிற்கு சென்றேன்.
நான் சென்ற நேரத்தில் மயூரா ஏதோ போர்க்களம் போல் காட்சி அளித்தது. நாம் சமாதானம் செய்துவிடலாம் என்ற என் நினைப்பு தப்பாகிவிட்டது. கொஞ்சம் தாமதித்திருந்தால் ரஜினியின் பாடு ஆபத்தாகி இருக்கும். நாற்பது பேர்களுக்கு முன் ஒருவர் எத்தனை நேரம் சமாளிக்க முடியும்?
அதனால் என் பங்குக்கு வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு நானும் மோதத் துவங்கிவிட்டேன். என்னோடு என் மகன் முரளி, டிரைவர் நாராயணன் ஆகியோரும் இறங்கிவிட்டார்கள்.
நிலைமை மோசமாகிவிட, டிரைவரை காரை எடுக்கச் சொல்லி ரஜினியின் கையை பிடித்துக் காருக்குள் தள்ளினேன். வண்டியை வேகமாக எடுக்கலாமென்று பார்த்தால், எதிரே கேட்டைப் பூட்டிவிட்டார்கள்.
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்தவன், காரை வேகமாக விடச் சொன்னேன். கார் சென்ற வேகத்தில் கேட்டை உடைத்து பிணைத்திருந்த கல்தூண்களும் விழுந்துவிட்டன. சற்று வேகத்துடன் தப்பித்தோம்.
ரஜினி மைசூரில் நடமாடுவது தெரிந்தால் அவரது உயிருக்கே ஆபத்து நேரிடலாம் என்று எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கச் செய்தேன். அங்கிருந்து படபிடிப்புக்கு வரச் செய்தேன். அப்போதைய கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்ஸ் மற்றும் எனக்கு நண்பராக இருந்த குண்டுராவ் ஆகியோரோடு தொடர்பு கொண்டு பாதுகாப்பு கேட்டேன்.
படப்பிடிப்பு நடந்த பிரிமியர் ஸ்டூடியோவில் போலீஸ் பாதுகாப்பு இருந்ததால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனாலும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்க முடியும்? அதனால் சென்னையிலிருந்து ஸ்டண்ட் நடிகர்களை வரவழைத்தேன். அவர்களையும், ரஜினியையும் அழைத்துக் கொண்டு நேராக மயூரா ஹோட்டல் சென்றேன். நிர்வாகிகளையும் மற்றவர்களையும் அழைத்து, "இதோ பாருங்கள். இனி ரஜினி உங்கள் ஹோட்டலில்தான் தங்குவார். நடந்ததையெல்லாம் மறந்துவிடுங்கள். இல்லை வஞ்சம் தீர்க்க நினைத்தால் உங்களால் முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள்" என்று ஓங்கிய குரலில் பேசியதும் அவர்கள் கோபம் தணிந்தது. சமாதானமாகிவிட்டார்கள்.
படம் வெளியாகி நல்ல வரவேற்பு. அடுத்து ஏவி.எம். ராஜனைக் கொண்டு நாங்கள் தயாரித்த 'சக்கரம்' படத்தை கன்னடத்தில் ரஜினியைக் கொண்டு உருவாக்க விரும்பினோம். அதற்காக ஏவி.எம்.ராஜன் தமிழில் அணிந்திருந்த உடைகளைப் போல் ரஜினிக்கும் அணிவித்து படங்கள் எடுத்தோம். அமர்களமாக பூஜை எல்லாம் நடந்தது. ஆனால் அப்போது எங்கள் நிறுவனத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக அந்த நேரத்தில் படம் தயாரிப்பதையே நிறுத்த வேண்டியது ஆயிற்று.
'பாலு ஜேனு' படம் பார்த்த என் மனைவி கோமதி, ''ரஜினி ஓகோவென்று வருவான் பாருங்கள்" என்று கூறுவாள். அவளது நம்பிக்கையும், ஆசிர்வாதமும் வீண் போகவில்லை. இதை ரஜினியிடம் நேரிலும் சொன்னாள் அவள். அதனால் எங்கள் குடும்பத்தின் மீது ரஜினிக்கு மிகுந்த மதிப்பு.
எங்களது பாலன் ஸ்டூடியோஸ் திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த் "நான் ஒரு அனாதை என்று ஒரு எண்ணம் சில சமயம் மனதில் வந்துவிடும். அப்போது தயாரிப்பாளர் கே.ஆர்.பாலன் அவர்களையும், திருமதி பாலன் அவர்களையும் நினைத்துக் கொள்வேன். இவர்கள் இருக்கும்போது நாம் ஏன் அனாதை என்று நினைக்க வேண்டும் என்று ஆறுதல் சொல்லிக் கொள்வேன்" என்றார்.
அந்தப் பழைய நிகழ்ச்சிகளைப் பற்றி நினைவு கூர்ந்த பாலன் ரஜினிகாந்த் பற்றி மேலும் கூறினார்.
சினிமாவில் ஒரு நேரத்தில் உச்சக் கட்டத்தில் இருந்தவன் நான். லட்சக் கணக்கில் பணத்தில் புரண்டவன். நூறு ரூபாய்க்கு தவித்த சிரமத்திலும் இருந்திருக்கிறேன். அப்படி தவித்த நேரத்திலும் ரஜினி எங்கள் குடும்பத்தில் ஒரு பிள்ளையாக இருந்திருக்கிறார்.
அப்போது என் மனைவியிடம் ரஜினி ஒரு தாயைப் போல் பாசம் செலுத்தி வந்தார். அவரைப் பார்த்தால் காலில் விழுந்து வணங்குவார். நான் அவர் கண்ணில் அதிகம் பட்டதில்லை. பட்டாலும் என் மீது மரியாதை காரணமாக அதிகம் பேசாமல் ஒதுங்கிச் சென்று விடுவார்.
படப்பிடிப்பு இல்லாத போது ரஜினி எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார். பிள்ளைகளோடு வெளியில் போவதுண்டு. உரிமையோடு உதவிகளைக் கேட்டுப் பெறுவார். அப்போது நாங்கள் சோழா ஓட்டல் அருகில், பெரிய பங்களாவில் குடியிருந்தோம்.
அந்த வீட்டில் இருந்தபோது ஒவ்வொரு வருடமும் தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு நாளில் என்னைப் பார்க்க வருபவர்களுக்கு ஒரு ரூபாய் தந்து வாழ்த்துவது வழக்கம். அப்படி வாழ்த்து பெற்றவர்களில் ரஜினியும் ஒருவர்.
ஆனால் அந்த பங்களாவை விற்றுவிட்டு வேறு இடத்திற்கு குடிபோன பின் ரஜினியுடன் அதிகம் எனக்குத் தொடர்பில்லை. ரஜினியும் பிஸியாகி விட்டார். ஆனால் எனது மாப்பிள்ளை வேலனுடன் ரஜினியின் நட்பு நீடித்தது.
வேலன், ரஜினியின் ஆரம்ப கால நண்பர்களில் ஒருவர். ரஜினியின் உச்ச நிலை புகழை அவர் ஒருபோதும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதில்லை என்பதே ரஜினி அவருடன் அதிக ஈடுபாட்டோடு இருக்கக் காரணம். ரஜினியின் வீட்டிற்குள் தாராளமாக சென்றுவருமளவில் வேலனுக்கு உரிமைகள் உண்டு.
நான் கடந்த பல வருடங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருப்பவன். எனவே வெளியிடங்களுக்கு, குறிப்பாக கூட்டம் அதிகமிருக்கும் இடங்களுக்குச் செல்வதில்லை. அதனால் ரஜினி சம்பந்தப்பட்ட குடும்ப விழாக்களுக்கு, வேறு விசேஷங்களுக்கு ரஜினி அழைத்தாலும் என்னால் போக முடிவதில்லை. நமக்கு பதில் மாப்பிள்ளை வேலன் போகிறாரே என்று திருப்திபட்டுக் கொள்வேன்.
படப்பிடிப்பு இல்லாத போது மாலை நேரங்களில் வேலனை ரஜினியே அழைத்துக் கொண்டு வெளியில் போய்விடுவார். சில சமயம் ரஜினி கேட்டுக் கொண்டதன் பேரில் அவுட்டோர் படப்பிடிப்பிற்கும் போவார். பம்பாயில் நடக்கும் இந்திப் படப்பிடிப்பிற்கும் அவர் சென்று வந்திருக்கிறார்.
எங்களது பாலன் ஸ்டூடியோ திறப்பு விழாவில் தமிழக முதல்வர் கலைஞரும், ரஜினியும் கலந்து கொண்டார்கள். ரஜினியை வரச் சொன்னதே என் மாப்பிள்ளைதான். ரஜினியுடன் எனக்கு அதிகம் நெருக்கமில்லா விட்டாலும், அவர் ஆரம்பத்தில் என் மீது கொண்டிருந்த மரியாதை சற்றும் குறையாதிருப்பதைக் கண்டு வியந்தேன்.
வெறும் உதட்டளவுடன் மரியாதை போய் விடாமல், நான் எதிர்பாராத வகையில் ரஜினி மேடையில் பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். அது மட்டுமின்றி "பாலன் சார் வங்கியிடமிருந்து பல லட்சம் ரூபாய் கடன் பெற்று இந்த ஸ்டூடியோவை அமைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். கொடுத்த பணம் எப்போது வசூலாகும் என்று வங்கியினர் நினைக்கத் தேவையில்லை. அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்" என்றபோது ரஜினியின் அன்பை நினைத்து மகிழ்ந்தேன். மேடையில் கூறியதோடு தான் நடித்த 'அதிசயப் பிறவி' படத்தின் முழு டப்பிங்கையும் எங்கள் ஸ்டூடியோவிலேயே வைத்துக் கொண்டார்.
ஸ்டூடியோ கட்டுமானப் பகுதிகள் ஒவ்வொன்றாக முழுமை பெற்று வருகிறது. அதனால் ரஜினிக்காக என் அறையை ஓய்வெடுக்க பயன்படுத்திக் கொள்ளச் சொன்னேன். ஒரு நாள் வந்தார். மறுநாள் டப்பிங் தியேட்டரிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டார்.
"அப்பாவின் அறையை பயன்படுத்திக் கொள்ளலாமே" என்று என் பிள்ளைகள் கூறியிருக்கிறார்கள். அதற்கு ரஜினி, "வேண்டாம் அப்பாவிற்கு ஏன் வீண் சிரமம்?" என்று மறுத்துவிட்டார். அவரது மரியாதை மட்டுமின்றி, கூச்ச சுபாவமும் இன்னும் இருப்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் ரஜினியின் வசதிக்காகவே எங்கள் ஸ்டூடியோவில் அவருக்கு ஒரு தனி அறை கட்டித் தரப் போகிறேன்" என்றார் பாலன்.
கே.ஆர்.பாலனிடம் டிரைவராக இருந்த நாராயணன் 'பாலு ஜேனு' படத்திற்குப் பின் ஒரு சில வருடங்களில் ரஜினியின் டிரைவராக சேர்ந்தவிட்டார். பாலனிடம் ரஜினி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அனுப்பப்பட்ட நாராயணன் இன்றும் ரஜினியிடம் டிரைவராக பணிபுரிகிறார்.
ரஜினியும் ராகவேந்திரரும்...
வரும் இதழில்....
Previous |
|
Next |
|