''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!'' (பாகம் 58)
ரஜினியின் எண்ணங்களை, செயல்பாடுகளைக் கவனிக்கையில் அவர் எதையோ பெரிய அளவில் சாதிக்கப் போகிறார் என்று தெரிகிறது.
எஸ்.பி.முத்துராமன் தொடர்கிறார்.....
மிஸ்டர் பாரத்: ரஜினியுடன் சத்யராஜும் சமமான வேடத்தில் நடித்திருந்தார். ''என்னம்மா கண்ணு சௌக்கியமா?'' போட்டி பாடல் இருவருக்கும். அதனால் அந்தக் காட்சியில் பரபரப்பும், கைதட்டலும் பலமாக இருந்தது. படத்தில் தாய் மகனை பழி வாங்கத் தூண்டும் கருத்தை மக்களால் பெரிய அளவில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
வேலைக்காரன்: நகைச்சுவையோடு முழுப்படம் எடுக்க நினைத்து செய்தது. ரஜினியின் பாத்திரம் ஜனரஞ்சகமாக அமைந்தது. டெல்லி, காஷ்மீர், ஆக்ரா என்று பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். கடுமையான பனி சீசனில் காஷ்மீரில் எங்கு பார்த்தாலும் பனிக்கட்டி. அதில் அமலா பரத நாட்டிய உடையணிந்து வெறுங்கால்களோடு நடனம் ஆடி, ஷாட் முடிந்ததும் ரஜினியின் கால்மீது நின்று கொள்வார்.
இப்படத்தின் வெற்றி விழாவில் பாராட்டிப் பேசிய ம.பொ.சி. ரஜினியின் வேகம் பற்றிக் குறிப்பிட்டு ''எனக்கு அவர் பேசும் வசனங்கள் புரியவில்லை. ஆனால் என் பேரன்களோ, 'எங்களுக்குப் புரிகிறது. உங்களுக்குப் புரியாவிட்டால் என்ன?' என்று என்னோடு சண்டைக்கு வந்து விட்டார்கள்'' என்று நகைச்சுவையோடு சொன்னார்.
மனிதன்: ''காளை காளை'' பாடல் காட்சியில் ரஜினியின் நடன அசைவுகள் ரசிகர்களுக்கு பஞ்சாமிர்தம் போல.
இப்படத்தின் கிளைமாக்ஸ் - வெடி குண்டுகள் வீசி பதினைந்து நாள் படமாக்கப்பட்டது. 'மனிதனு'க்காக எரியும் காரில் சிக்கிய ஸ்டண்ட் நடிகர் ஒருவர் தன் கைவிரல் ஒன்றை இழந்தார். எரியும் காரில் ரஜினியை உட்கார வைத்து குளோசப் எல்லாம் எடுத்தோம்.
குரு சிஷ்யன்: பஞ்சு அருணாசலம் ரஜினியை வைத்து படமெடுக்க இரண்டு வருடமாக முயற்சித்துக் கொண்டிருந்தார். திடீரென்று, ''ஒரு பதினைந்து நாள் இருக்கிறது. அதற்குள் ஒரு படம் முடியுமா?'' என்று கேட்டார். முடியும் என்று ஆரம்பித்து 26 நாட்களில் முடித்தோம். கதையில் நகைச்சுவை தன்மை இருந்ததால் விரைவாக எடுக்க முடிந்தது. பிரபுவும் இருந்ததால் சுலபமாக இருந்தது. மற்றொரு வெற்றிப்படம்.
தர்மத்தின் தலைவன்: பேராசிரியர், பேட்டை ரௌடி என ரஜினிக்கு இரண்டு வேடம். ஞாபக மறதி பேராசிரியர் வேடத்தை ரஜினி ரசித்து, அதை மேலும் டெவலப் செய்து நடித்தார். காட்சியில் இல்லாததையெல்லாம் ரஜினி தன் கற்பனையில் மேலும் சேர்த்து மெருகேற்றினார். தவிர இந்த படம் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டபோது முழு பொறுப்பையும் தானே எடுத்து முடித்தார்.
'புவனா ஒரு கேள்விக்குறி' யின் போது ரஜினி ஆரம்பகால நடிகன். எனது டைரக்ஷனில் 23 படங்கள் செய்து விட்டார். இப்போது நடிப்பில் அபார வளர்ச்சி அவரிடம். ஆனால் அவரது கேரக்டரில் எந்த மாற்றமும் இல்லை. மனதில் படுவதை தயங்காமல் சரியாக சொல்வார். ரஜினியிடம் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு தான்.
ஏராளமான பேர்களுக்கு தாராளமாக, ஆனால் வெளியில் தெரியாது உதவிகள் செய்து வருகிறார். பல மாணவ - மாணவியரின் படிப்புச் செலவுகளை ரஜினியே ஏற்றுக் கொண்டிருக்கிறார். கஷ்டப்படுகின்ற நடிகர்களுக்கும் பண உதவிகள் செய்து வருகின்றார்.
ரஜினியின் எண்ணங்களை, செயல்பாடுகளைக் கவனிக்கையில் அவர் எதையோ பெரிய அளவில் சாதிக்கப் போகிறார் என்று தெரிகிறது.
ஜனவரி 1, பிறந்த நாள், திருமண நாள், பொங்கல் நாட்களிலெல்லாம் ரஜினி எங்கள் படப்பிடிப்பில் தான் இருப்பார். எங்களை உறவினராக வைத்து மதிக்கின்றவர் ரஜினி என்று ரஜினியுடனான தன் அனுபவங்களைச் சுவாரசியமாக விளக்கி கூறினார் எஸ்.பி.முத்துராமன்.
முற்றும்
Previous |
|
|