ரஜினி காட்டிய வேடிக்கை (பாகம் 42)
''அதுதான் வேணும் எனக்கு எனக்கு சாவு வர்றதா இருந்தா அம்மாவுக்கு முன்னாடியே போயிடணும்'' என்று ரஜினி கூறியதைக் கேட்டு எனக்கு கண்கள் கலங்கி விட்டன.
திருமதி ரெஜினா வின்சென்ட், ரஜினி பற்றி தொடர்கிறார்:
ஒரு நாள் உட்லண்ட்ஸ் ஓட்டலில், 'காபி சாப்பிடப் போகிறேன்' என்று ரஜினி, டிரைவர் நாராயணனையும் அழைத்துச் சென்றான். சற்று நேரத்திற்குப் பின் நாராயணன் மட்டும் தனியாகத் திரும்பி வந்தார்.
ரஜினியைப் பற்றிக் கேட்டதற்கு, ''என்னை சிகரெட் வாங்கி வரச் சொன்னார். வாங்கி வருவதற்குள் ஆளைக் காணோம்'' என்றார். அதைக் கேட்டு எனக்கு வெறுப்பாக இருந்தது,
''நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொண்டு வருகிறோம். இப்படி சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய் விட்டானே'' என்று நினைத்து நான் ஒரு முடிவுக்கு வந்தேன். ரஜினி இனிமேல் வந்தால் இங்கே வராதே என்று சொல்லிவிட வேண்டியதுதான் என்று கூட கோபம் வந்தது.
என் முடிவை மகன் லாரன்ஸிடம் சொன்னபோது, ''வேண்டாம்மா, அப்படி எந்த முடிவுக்கும் வந்து விடாதீர்கள். ரஜினி வந்து விடுவார். பொறுமையாக இருங்கள்'' என்று எனக்கு ஆறுதல் சொன்னான்.
ரஜினி சாவகாசமாக ஆட்டோ ஒன்றில் வந்து இறங்கினான். ''எங்கப்பா போனே? உன்னைக் காணாம நாங்க எவ்வளவு சங்கடப்படுகிறோம் தெரியுமா?'' என்று ஆதங்கத்துடன் கேட்டேன்.
''அம்மாவுக்கு தெரியாம நான் எங்கே போயிடுவேன்?'' என்றவன், ''நடந்தது என்ன தெரியுமா?'' என்று பீடிகையுடன் ஆரம்பித்தான்.
''வெறும் காபி சாப்பிடறதுக்காக இவ்வளவு தூரம் வந்தோம். ஏதாவது வேடிக்கை பண்ணணும்னு நினைச்சேன். நாராயணனைச் சிகரெட் வாங்கி வரச் சொல்லிவிட்டு அப்படியே வெளியே வந்தேன். ஒரு ஆட்டோவைப் பிடித்தேன். குறிப்பிட்ட இடம் எதுவும் சொல்லாமல் 'நேரா போ, 'இடது பக்கம் போ', 'வலது பக்கம் போ' என்று அவனிடம் இஷ்டத்திற்கு ரூட் சொல்லி போகச் சொன்னேன். கடைசியில் சென்னைக்கு வெளியே போயிட்டு திரும்பினோம் பாவம் டிரைவர்! குழம்பித் தவிச்சுட்டான்'' என்றான் தன் தமாஷை ரசித்து சிரித்தபடி.
அதைக்கேட்டு என்ன பேசுவதென்று எனக்குப் புரியவில்லை. பொதுவாக ரஜினி ஓவென்று சிரித்தால் வீடே அலறும். சில சமயம் பக்கத்து வீடுகளில்கூட கேட்கும். அதுவும் என் கணவர் ஏதாவது ஜோக் சொல்லி விட்டால் ரஜினி அடக்க முடியாமல் சிரிப்பான். அதுபோல் சிரிப்பை எல்லாம் இப்போதைய ரஜினியிடம் பார்க்க முடிவதில்லை.
ரஜினியின் பிரச்னை என்னவென்பதை அறிய ஒரு முறை ஜோஸ்யர்களை வரவழைத்தேன்.
அவர்கள் வந்ததும், அருகில் சென்ற ரஜினி என்னைக் காட்டி, ''அம்மா எத்தனை காலம் இருப்பாங்க?'' என்று கேட்டான். ''ரொம்ப நாள் நல்ல இருப்பாங்க'' என்றார்கள்.
''அதுதான் வேணும் எனக்கு எனக்கு சாவு வர்றதா இருந்தா அம்மாவுக்கு முன்னாடியே போயிடணும்'' என்று ரஜினி கூறியதைக் கேட்டு எனக்கு கண்கள் கலங்கி விட்டன.
''ஏன் அப்படிச் சொல்கிறாய்?'' என்று ரஜினியைக் கோபித்துக் கொண்டு ''நானும் நல்லா இருப்பேன்-நீயும் நல்லா இருப்பே'' என்றேன்.
ரஜினி படுத்திருக்கும் இடத்தில், தூக்கம் வராமல் சில சமயம் தவிப்பான். அதற்காக மருதாணி இலைகளைக் கொண்டு வந்து அவன் கண்களில் படாத வண்ணம் வைப்பேன். அதன் வாசனைக் காற்றில் பரவ ரஜினிக்கு நன்றாகத் தூக்கம் வரும். எப்போதும் ரஜினிக்கு துணையாக சமையல்கார மீரானையும், வேலைக்காரனையும் படுக்க வைப்பேன்.
திருமதி ரெஜினா வின்சென்ட் தன் மகளை ரஜினியின் காரில் அனுப்பினாரா?
அடுத்த இதழில்
Previous |
|
Next |
|