Allauddinum Arputha Vilakkum (1979)
அலாவுதினும் அந்புத விளக்கும் - ஆனந்த விகடன் விமர்சனம்
பிரபலமான ஒரு பழைய தலைப்பை எடுத்துக் கொண்டு அரேபியா சென்றிருக்கிறார் வியட்நாம் வீடு - சுந்தரம் . அந்தக் காலத்து ஒரிஜினல் கதையை ஒட்டகத்தின் மீது ஏற்றி அனுப்பிவிட்டு தன் கற்பனைக் குதிரையை இஷ்டத்துக்கு ஓட வைத்திருக்கிறார் !
இந்தப் படம் குழந்தைகளையும் திருப்திப்படுத்தவில்லை, பெரியவர்களையும் கவரவில்லை. ஒரு இரண்டும் கெட்டான் நிலையில் எடுக்கப்பட்டிருக்கிறது. தந்திரக் காட்சிகளில் கூட எந்தவித ' த்ரில் ' லும் இல்லை . சர்வ சாதாரணமாகத்தான் படமாக்கப்பட்டிருக்கிறது .
வான்மேகக் கூட்டம் மாதிரி கோடம்பாக்கத்து நட்சத்திரங்களில் முக்கால் வாசிப்போர் படத்தில் பிரகாசிக்கிறார்கள். ஆனால் கமல், ரஜினி உட்பட ஒருவருடைய நடிப்பும் மனத்தில் பதிய மறுப்பதுதான் பரிதாபம் ,
அலாவுதின் குகைக்குள் நுழைந்து விளக்கை எடுக்கும் காட்சி நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீப்ரியாவின் மீது மேக்கப்மேனுக்கு என்ன கோபம்? அவருடைய வயதில் பத்து வருடங்களைக் கூட்டிக் கொள்ளும் படி படுமோசமாக மேக்கப் போட்டிருக்கிறாரே! போதாத குறைக்கு டைரக்டர் வேறு ஸ்ரீப்ரியா தப்பித் தவறிக்கூட நடித்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டிருக்கிறார்.
பாட்டுக்களுக்காகவே படங்கள் ஒடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் பாட்டுக்கள் விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டாமா? ஒரு பாட்டையாவது கேட்கும்படியாகப் போட்டிருக்கலாம்!
படத்தில் நகைச்சுவையும் இல்லை, நகைச்சுவை நடிகர்களும் இல்லை. ஜெமினி கணேஷ் வில்லனாக வந்து வசனம் பேசி சண்டையும் போடுவதுதான் நல்ல நகைச்சுவை!
அடிக்கடி முப்பது, நாற்பது பெண்கள் துணிக்குப் பஞ்சம் வந்தது போலத் துண்டுத் துணிகளைக் கட்டிக் கொண்டு டான்ஸ் ஆடுகிறார்கள் ! இளைஞர்களுக்கே பிடிக்குமா என்பது சந்தேகமே!
சண்டை . அது முடிந்தவுடன் டான்ஸ் . பிறகு மீண்டும் சண்டை . . . டான்ஸ் . . . அங்கங்கே தொட்டுக்கொள்வதற்கென்று அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற கதையும் வருகிறது!
பூதமாக வரும் அசோகன் இப்படியா கூத்தடிப்பது? ' கண்ணாமூச்சி ' கார்கோடகனை இவர் பார்க்கவில்லையோ?
வலுவான கதைக்கருவும் , பிரம்மாண்டமான செட்டுகளும், பிரமிக்க வைக்கும் படப்பிடிப்பும், பளிச்சிடும் வண்ணங்களும், பாப்புலரான டைரக்டரும் இருந்தால் மட்டும் ஒரு படத்தைச் சிறப்பாக எடுத்துவிட முடியாது என்பதற்கு இந்தப் படம் ஒரு நல்ல உதாரணம் .
ஒரு மினி பேட்டி : "உங்கள் கையில் அற்புத விளக்கு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
பூதத்தை வரவழைத்து , ' கமலா தியேட்டர் பாக்ஸில் அடிக்கடி நின்று போகும் ஃபேனைத் தொடர்ந்து ஒடச் செய் . . . ' என்று கட்டளை இடுவேன்! "
விகடன் விமரிசனக் குழு
விகடன் மதிப்பெண் : 40
(17.06.1979 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து . . .)
ALAVUDINUM ARPUTHA VIZHAKKUM KALKI REVIEW
(01.07.1979 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . . .)
|