Kazhugu (1981)
ரஜினி என்ற நடிகர் புலி பாய்ச்சலில் பறந்து கொண்டிருந்த காலம் அது. 1980 மற்றும் 1981 ரஜினிக்கு பரபரப்பான வருடங்கள். அந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மனிதர் இருபது படங்கள் நடித்திருந்தார்.
கழுகு வெளி வந்த ஆண்டு 1981.
தயாரிப்பு – மீனா பஞ்சு அருணாச்சலம்
எழுத்து – பஞ்சு அருணாச்சலம்
இயக்கம் – எஸ் பி முத்துராமன்
இசை – இளையராஜா.
சாமியார்கள் மீது அதீத நம்பிக்கை கொண்ட பணக்கார மனிதர் ஒருவர். அவருடைய தம்பி ராஜா அவர் போல் அன்றி பகுத்தறிந்து விஷயங்களை அணுகுபவன்.
ராஜாவுக்கு நெருங்கிய நண்பர்கள் பாலு மற்றும் கோபி. நண்பர்களோடு சந்தோஷமாய் இருக்கும் ராஜா ஒரு அழகான பெண்ணை உணவகம் ஒன்றில் சந்திக்கிறான். அந்தச் சந்திப்பு மோதலில் துவங்குகிறது. பின் தமிழ் சினிமா இலக்கணப்படி காதலில் பயணிக்கிறது.
காதலை வென்று எடுக்க தமிழ் சினிமா லாஜிக் மீறாமல் பெண்ணின் தந்தையைக் கவர்ந்து அவரிடம் நல்ல பெயர் வாங்கி மாப்பிள்ளை பட்டத்தை வெல்கிறான் ராஜா.
ராஜாவின் திருமணம் பெரியோர் சம்மதிக்க நிச்சயிக்கப்பட்டு இனிதே நடக்கிறது. தம்பதிகள் தேனிலவு புறப்படுகிறார்கள். சும்மாவா கிளம்புகிறார்கள், ராஜாவின் பணக்கார அண்ணன் அவர்களுக்கு அளிக்கும் இனிய பரிசில் ஏறிச் செல்கிறார்கள்.
அந்தப் பரிசு ஒரு சொகுசு பேருந்து. வெளிநாடுகளில் இப்படிப்பட்ட சொகுசு வாகனங்கள் பயணங்களுக்கு என்றே தனியாகத் தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் உள்ளன. இந்தியாவுக்கெல்லாம் அந்த காலக்கட்டத்தில் அந்த சொகுசு வாகனம் ரொம்பவே புதுசு.
RV (Recreation Vehicle) என்று அந்த வாகனங்களுக்கு பெயர். கழுகு படத்தில் வரும் பேருந்து கிட்டத்தட்ட ஒரு RV என்றே சொல்லலாம். அந்தப் பேருந்தில் சோபா, சாப்பாட்டு மேசை, டிவி, குளிர் சாதன வசதி, படுக்கை, குளியல் அறை என சகல ஏற்பாடுகளும் உண்டு. பயணப் பாதையை முடிவு செய்து விட்டு வண்டியைக் கிளப்பினால் மட்டும் போதும், நினைத்த தூரம் போகலாம், இரவுத் தங்கலோ, மதியத் தூக்கமோ இடம் தேடி அலைய வேண்டாம் அப்படியே வண்டியை ஓரம் கட்டி விட்டு ஓய்வு எடுக்கலாம்.
கழுகு படத்தின் முதல் பிரமாண்டம் நாயகன் ரஜினி என்றால், இந்த சொகுசுப் பேருந்து படத்தின் அடுத்த முக்கிய பிரம்மாண்டம் எனச் சொல்லலாம். கழுகு படம் திரையிட்ட இடங்களுக்கு எல்லாம் இந்த பேருந்து கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்.
தரவுத் துயில் (Hypnotism) மேற்கத்திய படங்கள் சிலவற்றில் இந்த வித்தை குறித்து அலசப்பட்டிருக்கிறது. இது நம் இந்தியக் கலை. ஆனால், நம் நாட்டுப் படங்களில் பெரிதாக அலசப்பட்டதாக தகவல்கள் நம்மிடம் இல்லை. நகைச்சுவைக்காக ஓரிரு காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கழுகு படத்தில் தரவு துயில் வித்தை காமெடியைத் தாண்டி சண்டைக் காட்சியில் பயன்படுத்தப்பட்டிருப்பது ஒரு சுவாரசியச் சிறப்பு.
தேனிலவு பயணம் இனிதே துவங்கி செல்கிறது. படத்திற்குத் தேவையான பாடல்கள் பயணப்பாதையிலே அருமையாகப் படம் பிடிக்கப்பட்டுக் கண்களுக்கு விருந்தாக்கப்பட்டு இருக்கின்றன.
ராஜாவின் நண்பர்களும் அவனோடு பயணத்தில் இணைகிறார்கள். வழியிலே ஒரு கிராமத்தில் கூடாரமடித்து தங்குகிறார்கள். அங்கு வசந்தி என்னும் உள்ளூர் பெண் அவர்களுக்கு நட்பாகிறாள். அவர்களுக்கு வேண்டிய சிறு சிறு உதவிகளைச் செய்து தருகிறாள் அந்த பெண்ணைத் தங்களோடு நகரத்துக்கு அழைத்துச் செல்லவும் விரும்புகிறார்கள். தாய் தந்தை இல்லாத அந்தப் பெண்ணுக்கு ஓரே ஆதரவு அவள் தாத்தா மட்டும் தான் என சொல்கிறாள்.
இதுவரையில் காதல் நட்பு என இயற்கை சூழ இதமாக நகருகிறது படம். ஒரு நாள் இரவு காட்டில் பெரும் சத்தம் கேட்க, ராஜாவும் அவன் நண்பர்களும் போய் பார்க்கிறார்கள். அங்கு ஒரு கூட்டம் நடனம் ஆடி எதோ ஒரு வித சடங்கில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டத்தின் நடுவே வசந்தியும் தன்னை மறந்த நிலையில் ஆடிக் கொண்டிருக்கிறாள். மேளம் கொட்டக் கொட்ட, இசையின் ஊடே நடனம் உச்சம் அடையும் நிலையில் வசந்தியை ஒருத்தன் கொடும் வாள் கொண்டு வெட்டுகிறான். வசந்தி பெரும் அலறலோடு சாய்கிறாள். இதைக் கண்ட ராஜாவும் நண்பர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
அதே நேரத்தில், அவர்களை அந்த நரபலிக் கூட்டமும் பார்த்து விடுகிறது. இருட்டில் ராஜாவும் அவன் நண்பர்களும் காட்டுக்குள் தப்பித் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.
துரத்தல் காட்சி அந்த காலத்து தொழில்நுட்பம் கொண்டு அசத்தலாகப் படமாக்கப் பட்டுள்ளது. இருளும், காடும், படமாக்கிய விதமும் ஒரு சேரக் காணும் போது நமக்கு ‘படக் படக்’ அனுபவத்தைத் தருகிறது. ‘சரக் சரக்’ எனப் பாயும் அம்புகள் இன்னும் படபடப்பைக் கூட்டுகின்றன. ஒரு வழியாகத் தப்பி ராஜாவும் நண்பர்களும் பேருந்தை வந்து சேர்கிறார்கள். பேருந்தைக் கிளப்பி கொண்டு போகும் வழியில் வண்டி தண்ணீரில் சிக்கி நின்று விடுகிறது. இந்தக் காட்சி, பார்க்கும் நம்மை பதட்டத்தில் நகம் கடிக்க வைக்கிறது.
பின் ஒரு வழியாக துரத்தலும் விரட்டலும் முடிவுக்கு வர உயிர் தப்பிக்கிறார்கள் ராஜா கோஷ்டியினர்.
முதல் நாள் நடந்தது நரபலி என்பதை ஒருவாறாக ஊகித்து காவல் நிலையம் சென்று தகவல் தெரிவிக்கிறார்கள். ஆனால், காவல் அதிகாரியோ இவர்கள் பேச்சில் நம்பிக்கை வைப்பது போல் தெரியவில்லை. ராஜாவின் வற்புறுத்தலின் பேரில் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று பார்க்க வருகிறார் அதிகாரி. சம்பவம் நடந்த இடத்தில் ஏதோ ஒரு விலங்கு கொல்லப்பட்டு தொங்குகிறது.
அந்தப் பகுதியில் இருக்கும் காட்டுவாசிகள் இவ்வாறு ஏதாவது விலங்கினைப் பலியிட்டு சடங்கு புரிவது வழக்கம் என காவல் அதிகாரி சமாதானம் சொல்லி இவர்களை நம்ப வைக்க முற்படுகிறார் ராஜாவின் மனம் அதை ஏற்க மறுக்கிறது. இதன் பின்னணியில் எதோ பெரிய சதி இருப்பதாக எண்ணுகிறான் ராஜா.
தன் நண்பன் கோபியிடம் அங்கு இருக்கும் ரத்தக் கறை படிந்த மண்ணைச் சேகரிக்க சொல்கிறான். அதன் பின் காவல் அதிகாரியோடு கிராமத்திற்குச் சென்று முன்பு வசந்தி தங்களுக்கு அறிமுகம் செய்து வைத்த ஒருவர் ஒருவராக விசாரிக்கிறார்கள். எல்லோரும் சொல்லி வைத்தார் போல் வசந்தி என்று ஒரு பெண்ணே இல்லை என சாதிக்கிறார்கள். இதில் வசந்தியின் தாத்தாவும் அடக்கம். ராஜாவுக்கு சந்தேகம் வலுக்கிறது.
இனி காவல் துறையை நம்பி பயன் இல்லை என்று முடிவு செய்கிறான். ராஜாவும் நண்பர்களும் உண்மையைத் தாமே கண்டறிய முடிவு எடுக்கிறார்கள்.
அதன் படி முயற்சிகளை முன்னெடுக்கக் கிளம்புகிறார்கள். எதிர்ப்புகளைச் சந்திக்கிறார்கள். அந்த முயற்சியில் ராஜாவின் நண்பன் பாலுவின் உயிரும் போகிறது.
இறந்த நண்பனின் கையில் இருந்து கிடைக்கும் டாலரில் சாமியார் படம் இருக்கிறது. வசந்தியின் நரபலிக்கும், நண்பனின் மரணத்துக்கும் சாமியாருக்கும் கட்டாயம் தொடர்பு இருக்கிறது என ராஜா நம்ப ஆரம்பிக்கிறான். இந்த நிலையில் நகரிலிருந்து ராஜாவின் அண்ணனும், மாமனாரும் அவனைத் தேடி வருகிறார்கள். அவர்களிடம் நடந்த அனைத்தையும் சொல்கிறான் ராஜா.
ராஜாவின் அண்ணன் அந்த சாமியார் ராஜரிஷியின் தீவிர பக்தர். அண்ணனின் தீவிர சாமியார் பற்று காரணமாக சாமியார் மீது தனக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை வெளிக்காட்டாமல் இருக்கிறான் ராஜா. ஆனால், அண்ணனோ தன் தம்பிக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை சாமியார் தான் தீர்த்து வைக்க முடியும் என நம்பும் அப்பாவியாய் நம்புகிறார்.
குடும்பத்தோடு சாமியாரைக் காண சென்ற இடத்தில் ராஜாவின் அண்ணன் மகளுக்கு தீவிர காய்ச்சல் ஏற்படுகிறது. சாமியாரின் சூழ்ச்சியால் குழந்தை இறந்து போவதாக மருத்துவர் துணையோடு நாடகம் ஆடுகிறார் சாமியார். சாமியார் அண்ணனின் குழந்தையை நரபலி கொடுத்து, அதோடு ராஜாவின் அண்ணன் சொத்துக்களை அபகரிக்க ஒரு கொடும் திட்டம் போடுகிறார்.
சாமியாரின் கொடூர எண்ணங்களை ராஜா முறியடித்தானா? சாமியாரை சட்டத்தின் முன் நிறுத்தினானா? இந்த கேள்விகளுக்கு படத்தின் கிளைமேக்ஸ் விடை சொல்கிறது.
கொடூர சாமியாராக சங்கிலி முருகன், ரஜினியோடு இவர் இன்னொரு படத்திலும் இவர் சாமியாராகவே வந்து வில்லத்தனம் பண்ணியிருப்பார், அந்த இன்னொரு படம் என்ன என்பதை வாசகர்களின் கண்டுபிடிப்புக்கு விட்டு விடுகிறேன்.
பாலு வேடத்தில் வருபவர் ராமநாதன் என்னும் நடிகர். இவர் பின்னாளில் ரஜினியோடு நடித்தவர் என்று சொன்னால் அவ்வளவு எளிதில் அடையாளம் காண முடியாது. கண்ணால் தரவுத் துயில் வருவிக்கும் வித்தைக்காரராக ஒரு வித்தியாசமான பாத்திரம் இவருக்கு. ஒரு சண்டைக் காட்சியும் உண்டு. அதில் அடியாட்களை தரவுத் துயில் வரச் செய்து சண்டையிடும் அந்த காட்சியமைப்பு கொஞ்சம் புதுமை.
இன்னொரு நண்பனாக ஒய் ஜி மகேந்திரன், வழக்கம் போல வள வள பேச்சின் மூலம் காமெடி செய்கிறார். சிரிக்க முடிந்தவர்கள் தாராளமாய் சிரிக்கலாம்.
கழுகு படத்தின் தீம் இசை பயம் தருவிக்கும் ரகம். ராஜாவின் ஆக்ரோஷம் இசையாய் அதிர்வலைகளைப் பார்க்கும் நம்மில் பரவ விடுகிறது.
நரபலி சடங்கின் பின்னணியில் ஒலிக்கும் அந்த இசைக்கு ஏற்ப சங்கிலி முருகன் கொடுக்கும் திகில் முக பாவங்கள் அவரை வில்லத்தனத்தின் உச்சத்தில் கொண்டு நிறுத்தி வைக்கிறது. அந்த இசை அப்பப்பா அட்டகாச தீமைத் தனம்.
ராஜாவின் அண்ணன் வீட்டில் திருட போய் மூக்கு உடைந்து திரும்பும் சப்போர்ட் சாமியாராக சுருளி. கொஞ்சமே வருகிறார் சுருளி. வரும் அந்த நேரத்துக்குள் வில்லத்தனத்தில் நரித்தனம் காட்டி விடுகிறார்.
படத்தில் நட்சித்திர பட்டாளம் கொஞ்சம் அதிகம் தான். சோ-வுக்கு பத்திரிக்கையாளர் பாத்திரம். சாமியாரிடம் காரியதரிசியாக நடித்து விவரம் சேர்க்கிறார். சோ வசனங்களில் (அக்கால) அரசியலை வழக்கம் போல் நையாண்டி செய்திருக்கிறார்.
பரபரப்பான காட்சியில் கூட பட படவென அவர் பேசும் வசனத்தைக் கூர்ந்து கவனித்தால் அவரது ” Tongue in the cheek ” வகை காமெடி நமக்கு புலப்படும்.
உதாரணத்திற்கு, சாமியாரைப் பற்றி ரொம்பவும் சாதாரணமாக ” இந்த சாமியார் கிட்ட இப்போல்லாம் அரசியல்வாதிங்க வேற வராங்க அதில்ல 100-150 பேர்கிட்ட இவர் நீங்க தேர்தல்லே ஜெயிச்சு மந்திரி ஆவிங்கன்னு சொல்லியிருக்காரு. அதுல பாருங்க கொஞ்சம் பேரு ஜெயிச்சு மந்திரியும் ஆயிட்டாங்கன்னு “ சொல்வார் சோ, அரசியல் கேலியின் உச்சம் அது. இந்த நக்கல் எல்லாம் சோவுக்கு மட்டுமே கைவந்த கலை.
முரட்டுக்காளை படத்தில் வரும் அதே ஜோடி தான் கழுகு படத்திலும் தொடர்ந்து இருக்கிறது ரதி அக்னிஹோத்ரி கவர்ச்சிப் பதுமையாக வந்து போகிறார். அது தவிர அவருக்குப் பெரிய வேலை எதுவுமில்லை. ரதிக்கு ரஜினியோடு மூன்றாவது படம் இது
முரட்டுக்காளையில் வந்த சுமலதாவும் இந்த படத்தில் இருக்கிறார். சோ-வோடு வரும் பெண் பத்திரிக்கையாளர் இவர் தான். ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுகிறார். அவ்வளவே.
வனிதா நரபலி கொடுக்கப்படும் வசந்தியாக நடித்து இருக்கிறார். சின்ன பாத்திரம் ஆனால் நிறைவு.
செந்தாமரை காவல் துறை ஆய்வாளராக ஓரிரு காட்சிகளில் வருகிறார். மிடுக்கு.
ராமதாஸ், கண்ணன் போன்ற பழைய வில்லன்களும் படத்தில் சின்ன சின்ன பங்கு ஆற்றி இருக்கிறார்கள்.
ரஜினியின் மாமனாராக வி கே ராமசாமி, அவருக்கே உரித்தான குசும்பு பேச்சுக் குறையாமல் நடித்து இருக்கிறார்.
பேருந்து பரிசளிக்கும் காட்சியில், ” ஆமா உன் தம்பிக்கு பஸ் எல்லாம் ஓட்ட தெரியுமா? “ என விகேஆர் கேட்பதும், அதற்கு ஒய்ஜி, “சார் அவன் ஓடுற பஸ்ல குறுக்கே நெடுக்க நடந்தவன் சார் “ என சொல்லும் இடமும் ரஜினிக்கான ஸ்பெஷல் பஞ்ச் சேர்க்கும் தருணம்.
தேங்காய் சீனிவாசனுக்கு அடக்கமான பக்தர் வேடம். சாமியாரைக் கண் மூடி தனமாக நம்பித் தன் குடும்பத்தையே கிட்ட தட்ட இழந்து நிற்கும் செல்வந்தராக வருகிறார்.
கழுகு தமிழ் திரை இசையில் ஒரு தனி அத்தியாயம் படைத்த படம் என்று சொல்லலாம்.
முதன் முதலில் இளையராஜா ரஜினிக்காக குரல் கொடுத்த பாடல் பொன்னோவியம்… கழுகில் தான் இடம் பெற்று இருந்தது. பாடல் காதல், மென்மையான காமம் இரண்டும் கலந்து படமாக்கப்பட்டு இருக்கும். சொகுசு பேருந்து உள் கட்டமைப்பும் ரசிகனுக்கு இந்தப் பாடலில் விரிவாகக் காட்டப்பட்டிருக்கும்.
ஒரு பூவனத்திலே பாடல் கொஞ்சலான கொண்டாட்டம் . ரஜினியின் ஸ்டைல் கலந்த நடன அசைவுகளும், ராஜாவின் இசையும் இணையும் புள்ளி ரசிகனுக்கு ஒரு இனிதான அனுபவம் படைத்தன.
காதல் என்னும் கோயில் பாட்டு உணர்ச்சிகளின் குவியல். இன்றும் என்றாவது பின்னிரவு நேரங்களில் விழித்திருக்க நேர்ந்தால் இந்த பாடலைக் கேட்டு ரசிப்பது உண்டு. நம்மை அறியாமல் அது நம்மை ஒரு மயக்க நிலைக்கு அழைத்துச் செல்லும்.
தேடும் தெய்வம் நேரில் வந்தது பாடல் அந்த காலத்து டீ கடைகளில் பெரும் பிரசித்தம்.
கழுகு படத்தைப் பொறுத்த வரை, தான் இயக்குனருக்கான நடிகன் என்று ரஜினி சொல்லும் படியான ஒரு படம். சின்ன சின்ன ஸ்டைல்களால் அவர் ரசிகர்களை வசீகரித்த படம். பாடல் காட்சிகளைக் கவனித்தால் புரியும். சிகரெட்டை உதட்டில் இடம் மாற்றுவதையும், பின் முடியை விதம் விதமாக கோதி விடுவதையும் கூட அழகான நடன அசைவுகளாக செய்திருப்பார். ரசிகர்கள் அதைப் பெரிதாகக் கொண்டாடினார்கள் என்பது வரலாறு
கழுகு படத்தில் கதை இருக்கிறது, நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள், திரைக்கதையின் வேகமும் தொய்வில்லாமல் போகிறது, அற்புதமான இசையும் இருக்கிறது, கவர்ச்சியும் உண்டு, காமெடியும் உண்டு, விறுவிறுப்பான சண்டை காட்சிகளும் உண்டு.
கழுகு படத்தில் லேசான பகுத்தறிவும் ஆன்மீகமும் கூடப் பேசப்பட்டிருக்கிறது , ஆன்மிகம் vs பகுத்தறிவு என்று அந்த விவாதம் ஆங்காங்கே தலை காட்டினாலும் சுவாரசியம் கூட்டும் அளவுக்கு முன்னேறவில்லை என்பது ஒரு சின்ன ஆதங்கம்.
கழுகு என்ற படைப்பின் பின்னே ஒரு பெரும் குழு இருந்தாலும், கழுகுகின் சிறகு என்னவோ ரஜினி தான். ரஜினி என்ற சிறகின் பலத்தால் கழுகு உயர்ந்து எழும்பிச் சிறகடிக்கிறது.
இன்றும் கழுகு இசை ரசிகர்களின் நெஞ்சில் பாடல்களுக்காக தனி இடம் பெற்று நிலைத்திருக்கிறது. ரஜினி ரசிகர்களுக்கு அந்தப் பாடல்களில் ரஜினி காட்டிய சின்னச் சின்ன ஸ்டைல்கள் இனிப்பான ஞாபகங்களாய் இதயம் நிறைத்து நிற்கின்றன.
பிகு : கழுகு 1975-இல் வெளிவந்த ஹாலிவுட் படமான “Race with the Devil” என்ற படத்தின் பாதிப்பில் உருவானதாகச் சொல்லப்படுவது உண்டு. அந்தப் படம் உலகளவில் நரபலி பற்றிப் பேசிய ஒரு படம்.
- தேவ்
KAZHUGU MOVIE KALKI REVIEW
(29.03.1981 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . . .)
|