1978-ஆம் ஆண்டு வெளியான "தாய் மீது சத்தியம்" திரைப்படம், ரஜினிகாந்தின் ஆக்ஷன் ஹீரோ பயணத்தில் ஒரு முக்கியப் படமாகக் கருதப்படுகிறது. ஆர். தியாகராஜன் இயக்கத்தில், சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பா தேவர் தயாரிப்பில் உருவான இந்தப் படம், ஒரு பழிவாங்கும் கதையை மையமாகக் கொண்டு, ரசிகர்களை ஈர்க்கும் மசாலா படமாக அமைந்தது.
நடிகர் மற்றும் தொழில்நுட்பக் குழு
-
இயக்கம்: ஆர். தியாகராஜன்
-
தயாரிப்பு: சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பா தேவர்
-
கதை: சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பா தேவர்
-
இசை: சங்கர் - கணேஷ்
-
ஒளிப்பதிவு: வி. ராமமூர்த்தி
-
படத்தொகுப்பு: எம். ஜி. பாலு ராவ்
-
நடிப்பு: ரஜினிகாந்த் (பாபு), ஸ்ரீபிரியா (சிவகாமணி), மோகன் பாபு (ஜானி), பிரபாகர் (பாலு), சுருளி ராஜன், அம்ரீஷ், சுகுமாரி, நாகேஷ் மற்றும் பலர்
கதைச்சுருக்கம், வரவேற்பு மற்றும் வெற்றி
கதைநாயகன் பாபு (ரஜினிகாந்த்) தனது பெற்றோரை இழந்த பின்னர், ஒரு பண்ணையாரால் வளர்க்கப்பட்டு, தனது பெற்றோரின் கொலைக்கு பழிவாங்க சபதம் ஏற்கிறார். தனது பழிவாங்கும் பயணத்தில், அவர் ஒரு "கௌபாய்" கெட்டப்பில் தோன்றி, துப்பாக்கி மற்றும் குதிரை சண்டைகளில் ஈடுபடுகிறார்.
இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமாக ரஜினிகாந்தின் நடிப்பு மற்றும் ஸ்டைல் அமைந்தது. குறிப்பாக, அவரது கௌபாய் கெட்டப் அவருக்கு கச்சிதமாகப் பொருந்தி, நகரங்கள் முதல் கிராமங்கள் வரையிலான திரையரங்குகளில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் வெற்றி, பழிவாங்கும் கதைகளிலும் ஆக்ஷன் ஹீரோவாகவும் ரஜினிகாந்த்தின் இடத்தை மேலும் உறுதி செய்தது.
சங்கர் - கணேஷ் இசையில் அமைந்த பாடல்கள் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். குறிப்பாக, "நேரம் வந்தாச்சு" போன்ற பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. அக்கால நாளிதழ்களான அண்ணா பத்திரிகை, நடிகர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை மற்றும் சண்டைக்காட்சிகளைப் பாராட்டின.
இந்தப் படம், அதே தீபாவளிக்கு வெளியான பிற படங்களுக்கிடையே பெரும் போட்டி இருந்தாலும், 100 நாட்களுக்கு மேல் ஓடி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. ஆனந்த விகடன் பத்திரிகை இந்தப் படத்திற்கு 100-க்கு 44 மதிப்பெண் அளித்திருந்தாலும், படத்தின் மசாலா அம்சங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
ஒட்டுமொத்தமாக, "தாய் மீது சத்தியம்" ஒரு முழுமையான பொழுதுபோக்கு மசாலா படமாக அமைந்தது. ரஜினிகாந்தின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்திய இந்தப் படம், அவரது ரசிகர்கள் மற்றும் ஆக்ஷன் படங்களை விரும்புபவர்களால் இன்றும் ரசிக்கப்படுகிறது.
தாய் மீது சத்தியம் - ஆனந்த விகடன் விமர்சனம்
-
'யாதோங் கி பாராத்', 'சிரித்து வாழ வேண்டும்' ரூட்டில் தாய், தந்தையைக் கொன்ற இருவரைத் தீர்த்துக் கட்டியே தீருவேன் என்று சத்தியம் செய்து புறப்படும் மகனின் கதை. மாமூல் கதை. ஒரே ஒரு வித்தியாசம்: பெற்றோர் கொல்லப்படும்போது மகன் பெரியவனாக இருந்து பிறகு பெரியவனாக இல்லை! ஆரம்பத்திலிருந்தே ரஜினியிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு விடுகிறது.
-
படத்திலுள்ள ஒரே புதுமை முதல் தடவையாக ரஜினிகாந்த் 'பாகப் பிரிவினை பாணிக் குடுமி'யுடன் வருவது. படம் எடுத்தவர்களுக்கே குடுமியுடன் ரஜினியைப் பார்க்க சங்கடமாக இருந்ததோ என்னவோ! நல்ல காலமாக பாதியில் அவர் உடையை மாற்றிக் குடுமியை எடுத்து விட்டார்கள்!
-
Grand Canyon மாதிரி ஒரு குட்டி லொகேஷனைத் தேடிப் பிடித்ததைப் பாராட்ட வேண்டும். படத்தின் முக்கிய பாத்திரங்கள் கௌபாய் உடையுடனும், மற்றவர்கள் வேட்டி, சட்டை, துண்டுடனும் வருவது ஆரம்பத்திலிருந்தே சிரிப்பை வரவழைக்கிறது!
-
இரண்டு ரீலுக்கு ஒரு சண்டைக் காட்சி என்று சற்றுத் தாராளமாகவே சேர்த்திருக்கிறார்கள். ஆயினும் அதிக 'த்ரில்' அளிப்பது ஜஸ்டினும் ரஜினியும் நீண்ட கடப்பாரைகளை வைத்துக் கொண்டு, அதிகப் பின்னணி இசையில்லாமல் மோதிக் கொள்வதுதான்.
-
நிஜமாகவே டீக் கடையில் டீ சாப்பிட வந்த அசோகனை நடிக்க வைத்து விட்டார்களோ? மொட்டத் தலையுடன் வரும் அவருக்கு ரஜினி ஐஸ், முட்டை, அழுகிய தக்காளி, பச்சை மிளகாய் கலந்த கலவை செய்வது நல்ல தமாஷ். ஆனால், அந்தச் கட்டடத்தில் அசோகனுக்கும் ரஜினிக்கும் பிரமாதமான சண்டை மூளும் என்று எதிர்பார்க்கும் ரசிகர்கள் ஏமாறி விடுகிறார்கள்.
-
நாலுகால் 'நடிகர்கள்' மீது இயக்குநருக்குப் பரிபூரண நம்பிக்கை. ராமு என்ற அந்த நாய் போலீஸ் நாயை விடத் துப்புத் துலக்குகிறது. மேஜர், தன் மகன் குற்றவாளி, மகனைக் காப்பாற்ற அவன் இறந்து விட்டதாகவே நாடகம் போடும் போது 'ராமு'வின் ஆறாவது அறிவு நன்றாகவே வேலை செய்கிறது.
-
சங்கர்-கணேஷ் இசையமைத்திருக்கும் இரண்டு பாட்டுக்கள் நிச்சயம் 'ஹிட்' ஆகும். காரணம், இவை ஏற்கனவே 'ஹிட்' ஆன பழைய பாடல்களின் மறு பதிவு.
-
"நெல் வயலே ஆடுடா" என நாகேஷ் கத்த, சுருளி கையைக் காலை ஆட்டி டான்ஸ் ஆடும்போது தியேட்டர் ஆடுகிறது—சிரிப்பால்!
-
"இந்தப் படத்தில் ஒரு இடத்திலாவது போலீஸீங்கிற வார்த்தை வருதான்னு பாருங்க.. இல்லேன்னா, பத்திரிகைக்காரங்க விமர்சனம் எழுதும்போது 'போலீஸ், கோர்ட், இதெல்லாம் இல்லாத நாடு எது? இந்த கதை எந்தக் காலத்தில் நடந்தது'ன்னு கேட்பாங்க" என்று ஸ்டோரி டிஸ்கஷனில் பேசியிருக்கக் கூடுமோ?—கடைசியில் ஒரே ஓர் இடத்தில் 'போலீஸ்' என்ற பேச்சு வருகிறது!
-
முழுக்க முழுக்க மசாலா நிறைந்த படம் இது. பொழுது போக்கிற்காக எடுக்கப்பட்டது. காரண, காரியங்களைச் சத்தியமாக ஆராயக் கூடாது!
விகடன் விமரிசனக் குழு
விகடன் மதிப்பெண் : 44
( 19.11.1978 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து ... )