தர்மயுத்தம் - குமுதம் விமர்சனம்
தேவை: முன் அனுபவமுள்ள டைப்ரைட்டிங் தெரிந்த பெண் நிருபர்.
தகுதிகள்: சுறுசுறு கண்; பட பட நாக்கு. பேட்டி தர மறுக்கும் பிரமுகரைச் சாமர்த்தியமாக மாட்டவிட்டுவிடும் கலை தெரிந்தவருக்குச் சலுகை உண்டு.
இப்படி ஒரு விளம்பரம் வந்தால் நிச்சயம் வேலை ஸ்ரீதேவிக்கே. பேட்டிக்கு மறுத்த தொழிலதிபர் ராமை (ரஜினி) பங்களாச் சுவர் தாண்டிக் குதித்து ஸ்ரீதேவி குழையடிப்பதும், பிடிவாத ரஜினி கூர்க்காவைக் கூப்பிட்டுவிடவே கெஞ்சுவதும் பிறகு சவால் விடுவதும் நல்ல கட்டம்.
புழுக்க அறைக்கு ஒரு விசிறிகூட இல்லாமல் போயிருக்கும் ஸ்ரீதேவி இல்லாவிட்டால்.
ஒரு டாக்டரைப் பிடித்து வைத்துக்கொண்டு, ஊரிலிருக்கிறவர்களைக் கொன்று ஏற்றுமதி பண்ணலாம். (இருதயம் கூடவாம்).
வில்லன் தேங்காய்க்குப் புதிய தொழிலாக ஏதாவது தரவேண்டும் என்று உடைத்துக்கொண்ட மண்டையை முதலில் ஏற்றுமதி பண்ணவேண்டும்.
"இந்த உயிரெல்லாம் எதுக்கு? உங்களை நான் அப்பான்னு கூப்பிடலாமில்லையா?" மேஜரிடம் ரஜினி சொல்கிற இந்த ஒன்றரை வாக்கியத்தில் நல்ல உணர்ச்சித் துடிப்பு.
சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும்போது திமிறுகிற திமிறல்கள், முகத்தில் கொண்டுவரும் பயங்கரக் கிராங்கள், தங்கை இறந்துகிடக்கிறாள் என்று போலீஸ் செய்தி வந்ததும் தாவுகிற பிசாசுப் பாய்ச்சல்கள் - ரஜினி ஸ்டைல்.
அந்தர் தியானம் என்றால் எப்படி இருக்கும்? சுருளி-சச்சு-மனோராமா கோஷ்டியைக் கேட்டால் தெரியும். இப்படிப் பாதிப் படத்திலேயே (கால்?) விடைபெற்றுக்கொண்டவர்களை எங்கேயும் பார்த்திருக்க முடியாது.
மூன்று மாதமாய் என்.ஸி.ஸி. வகுப்பே கிடையாது. ஆனால் இருப்பதாகச் சொல்லித் தங்கை போய்க்கொண்டிருக்கிறாள்! அண்ணன் சந்தேகப்படுவது நியாயம்தான். படபடக்கும் அண்ணனின் முன்னே, பொறுமையிழக்காமல், 'என்னை மன்னிச்சுடுங்க. உங்களுக்கு உடம்பு குணமாகணும் என்று வேண்டிக்கொண்டு கருமாரியம்மன் கோவிலுக்கு தினம் நடந்தே போய் வருகிறேன்,' என்று கூறுகிற லட்சுமிக்கு பாந்தமான முகத்தோற்றம்.
தர்மம், யுத்தம் இரண்டு வார்த்தைகளும் அவ்வளவு அர்த்தமுள்ளவை அல்ல. படத்தின் கவர்ச்சியைத் தலைப்பு குறைக்கமுடியும் என்பதற்கு நல்ல உதாரணம் தர்மயுத்தம்.