Kaali (1980)
காளி - ஆனந்த விகடன் விமர்சனம்
பழி வாங்கும் படலக் கதைகளில் பத்தோடு மற்ற படங்களில் இல்லாத வகையில் இந்தப் படத்தின் பிளஸ் பாயிண்ட்' விறுவிறுப்பு!
இந்திப் படங்களில் சசிகபூரும், அமிதாப்பச்சனும் உலா வந்திருப்பது டைரக்டரையும், கதாசிரியரையும் நன்றாகவே பாதித்திருக்கிறது. இந்திப் புலிகளைப் பார்த்துத் தமிழ்ப் புலிகள் சூடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நல்லவேளையாகக் காயம் எதுவும் அதிகம் இல்லை.
““பத்துக்குள் ஒரு நம்பர் கேட்டு ஜி.கே-யை காளி 'கும் கும் என்று கும்மும்போது, ஒண்ணு, ரெண்டு' என்று விரல்விட்டு எண்ணுமளவுக்கு சண்டையில் விறுவிறுப்பை ஏற்றியிருக்கிறார்கள்.
** விம்பிள்டன் நாலாவது செட்டில் போர்க்கும், மெக்கன் ரோவும் சூடு பறக்க ஆடிய ஆட்டம் மாதிரி இருந்தது இந்தச் சண்டைப் போட்டி.
“இது ஜி.கே. வழக்கமாக உட்காரும் நாற்காலி” என்று அந்த 'பாஷ்' ஹோட்டலில் கூறுகிறார்கள். அந்த ஜி.கே. லட்சாதிபதியாக இருப்பார் போலிருக்கிறதென்று நினைத்துக் கொண்டால், அவர் ஒரு மோட்டார் கார் மெக்கானிக்காம்! ... என்னய்யா விளையாட்டு இது!
கவர்ச்சி சீமா, கட்டுப்பெட்டி சீமா என்று இரட்டை வேடங்கள். கவர்ச்சியைவிடக் கட்டுப்பெட்டிதான் மனத்தைக் கரைய வைக்கிறார்.**
வழக்கமாக கவுனைக் களைந்து கவர்ச்சிக் கன்னியாகக் காட்சியளிக்கும் சீமாவை விட்டுவிட்டு, படாபட்டைப் போல் ரவிக்கையையும் பிராவையும்கழட்டி எறிய வைத்து. . .. ஐயோ, நினைத்தாலே சிரிப்பு வருகிறது!
**முதுகில் 'காளி' என்று கத்தியினால் கையெழுத்திட்டு அனுப்புவது, இருபது, முப்பது மோட்டார் சைக்கிள்கள் ரஜினியைத் துரத்த, லெவல் கிராஸிங்கில் குறுக்கே ஓடும் ரயிலின் மேலாக ரஜினி 'பைக்'கில் தாவுவது. தண்ணீரில் பாய்வது, துரத்துபவர்கள் தமிழ்ப்
படத்துக்கே புதிதான சில சாகசங்கள்.
**படவையை வாங்கறத்துக்கு வேணும்னா பொம்பளைகிட்டே உபதேசம் கேட்கலாம்... "மகேந்திரனின் பேனாவிலிருந்து விழுந்திருக்கும் இம்மாதிரியான சில உதிரிகள், அவரும் இருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன.**
உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை அலங்காரம் செய்து அழகு பார்ப்பது போல, டைடடிலிலிருந்த। கடைசி மீட்டர்வரை தன் காமிராவினால் காளியை அகலக் திரையில் அழகுபடுதகதியிருக்கிறார் அசோக்குமார்.
இளையராஜா ரீரிகார்டிங்கில் கவனம் செலுத்தியிருக்கிறார். ஆனால் பாடல்களில்...? பத்தாது ராஜா!
ரஜினியின் ஸ்டைல் நிச்சயமாகப் படத்துக்குக் கவர்ச்சிதான். ஆனால் அதற்காக சூலத்தில் கையை வெட்டித் திலகம் இட்டுக் கொள்வதும், விரலை அறுத்து சீமாவின் நெற்றியில் திலகம் இடுவதும் ரஜினியை ரசிகர்கள் பின்பற்ற ஆரம்பித்துவிட்டால்? விபரீதமான ஸ்டைல்!
ஆரம்பம் முதல் கடைசி வரை எத்தனை அடிதடி, காயம், ரத்தம், கொலை! வன்முறை தலை விரித்துப் பேயாட்டம் டியிருக்கிறது... ஏற்கெனவே ஊரெங்கும் வன்முறை அதிகமாகியிருக்கும் போக இந்தப் படம் என்ன பாதிப்பை ஏற்படுத்துமோ என்று பயமாகவே
இருக்கிறது.
'அலாவுதினும் அற்புத விளக்கும்' இயக்கிய சசியும், பூட்டாத பூட்டுக்கள்' மகேந்திரனும் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். அந்தப் படங்களை நத்தையாக நகர வைத்ததற்கு இந்தப் படத்தைப் படுவேகமாகச் செலுத்த இருவரும் பிராயச்சித்தம் பண்ணிக் கொண்டு விட்டார்கள். காளி சில இடங்களில் பத்ரகாளி, சில காட்சிகளில் . ஷோக்காளி. ஆனால் நிச்சயமாக சீக்காளி இல்லை.
விகடன் விமரிசனக் குழு
விகடன் மதிப்பெண் : 43
(20.7.1980 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து . . .)
|